March 22, 2023

நெற்றிக்கண் – விமர்சனம்!

யக்கம் – மிலிந்த் ராவ்

நடிப்பு – நயன் தாரா, அஜ்மல்

கதை – ஒரு விபத்தில் கண்பார்வையை இழக்கும் காவல் அதிகாரி ஒரு நாள் இரவில் ஒரு சைக்கோ கொலைகாரனின் காரில் ஏறுகிறார், அவனிடம் இருந்து தப்பிப்பவர் அவனைப் பற்றி பொலீசில் சொல்கிறார். அவர்கள் இதனை கண்டுகொள்ளாத நிலையில், அவன் இவரை துரத்த ஆரம்பிக்க, அவனிடமிருந்து தப்பிக்கிறாரா என்பதே கதை

2011 வெளியான கொரியன் படமான BILIND படத்தின் தழுவல் தான். ஆனால் இது தழுவல் எல்லாம் இல்லை காட்சிக்கு காட்சி, உடல்மொழி உடப்ட அப்பட்டமாக காப்பியடிக்கப்பட்ட படமாகவே இது இருக்கிறது.

பொதுவாக ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு ஒரு கதையை செய்யும் போது, அந்த நிலத்தின் வாழ்வியல் மிக முக்கியம். நம் வாழ்வியலுக்கு ஏற்றவாறு இந்தக் கதை மாறாதது, இதிலிருக்கும் மிக முக்கியமான பிரச்சனை. படத்தின் முதல் 40 நிமிட கதை நயன்தாரா ஏறிய சைக்கோவின் கார், டாக்ஸியா இல்லை தனி காரா என்பது தான்.

போலீஸும் நயன்தாராவும் சேர்ந்து ஆக்ஸிடெண்ட் ஆன டாக்ஸிய தேடிக்கொண்டிருக்கிறார்கள் . இதில் food service பண்ற பையன் , அது டாக்ஸி இல்லை என்றும் சொல்கிறான். நயன் தாரா போன்ல தான் டாக்ஸி வரலனு விசாரிக்கிறாங்க. அந்த போன் நம்பர் மூலமாவே டாக்ஸி அப்புறம் டிரைவர ட்ரேஸ் பண்ணிடலாம். படத்தில் 40 நிமிடம் நகரும் கதையின் இந்த மையத்திலேயே இப்படி மிகப்பெரிய லாஜிக் ஓட்டை இருப்பது, படத்தின் மீதான சுவாரஸ்யத்தை முழுதாக குறைத்து விடுகிறது.

கொரியாவில் எங்குமே பஸ் போக்குவரத்தை விட, டாக்ஸி போக்குவரத்தே அதிகம் அங்கு தெருக்களில் பெரும் எண்ணிக்கையில் டாக்ஸி ஓடிக்கோண்டிருக்கும். நாயகி காத்திருக்கும் போது அருகில் வரும் காரை டாக்ஸியா எனக் கேட்டு ஏறுவார். இங்கே அந்த டிவிஸ்ட்டில் முழுதாக கோட்டை விட்டிருக்கிறார்கள். படத்தில் இது மட்டுமல்லாமல் படம் முழுக்கவே காட்சிக்கு காட்சி லாஜிக் சொதப்பல்கள் படத்தை கூறு போடுகிறது, யாருமே இல்லாத மெட்ரோ ஸ்டேஷன், செக்யூரிட்டி இல்லாத மால், போலீசே இல்லாமல் வில்லனின் இடத்திற்கு செல்லும் அறிவாளி அதிகாரி நயன்தாரா, வில்லனின் உதவியாள் கிடைத்த அவனை விசாரிக்காமல் வில்லனை தேடும் போலீஸ் என ஒரு திரில் கதையில் எந்த இடத்திலும் லாஜிக் இல்லாமல் இருப்பது படத்தின் பலவீனம்.

படத்தின் முதல் பாதி நேரத்திலேயே வில்லன் பிடிப்பட்ட பிறகும் நாயகிக்கும் அவனுக்கும் சண்டை நடக்க வேண்டும் என்பதால், கதை ஜாவ்வாக இழுத்துக்கொண்டே போகிறது. சைக்கோவாக அஜ்மல் அவரை பார்த்தால் எங்குமே பயம் வரவில்லை, ஒரு காமெடி சைக்கோ போலவே இருக்கிறார். நயன்தாராவுக்கு உதவும் போலீசாக மணிகண்டன் கொஞ்சம் கவர்கிறார் அவரும் லாஜிக்கே இல்லாமல் கொல்லப்படுகிறார். படத்தில் நயன்தாரா கண் தெரியாதவராக இல்லாமல், படத்திலும் பல இடங்களில் சூப்பர் ஸ்டாராகவே வருகிறார். அவரால் எதுவும் செய்ய முடியும் எனும் போது அந்த கதாபாத்திரம் மீது பரிதாபமே இல்லாமல் போய் விடுகிறது.

ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவு மற்றும் கிரிஷ் கோபாலகிருஷ்ணன் பின்னணி இசை படத்தின் தரத்தை கூட்டியிருக்கிறது ஆனால் படத்தின் கதை முதல் சில காட்சிகளிலேயே தெரிந்து விடுவதாலும் பார்வையாளர்களே எளிதாக கண்டுபிடிக்கும் கேஸ் படத்தில் ஜவ்வாக இழுக்கப்படுவதும் படத்தை ஒரு மோசமான அனுவபமாக மாற்றுகிறது.கொரியன் படத்தை ரசித்தவர்கள் இந்தப்படத்தை தவிர்ப்பது நலம். ஓடிடி தளங்களுக்கு தொடர் தோல்விப்படங்களை தரும் வரிசையில் இந்தப்படமும் இடம்பிடித்து விட்டது.

மொத்தத்தில் நெற்றிக்கண் நம் கண்களுக்கானது அல்ல

மார்க் 2.25/5