வந்துவிட்டது இ – கையெழுத்து தளம்..!

இனி கையெழுத்து வாங்க அலையவேண்டியதில்லை… வந்துவிட்டது இ – கையெழுத்து தளம்..!

பதிவு செய்யப்படாத ஒப்பந்தங்கள் மற்றும் உடன்படிக்கைகளைக் காகிதமில்லாமல் நிறை வேற்றுவதற்காக இ-கையொப்பமிடும் ஆன்லைன் தளத்தை நேஷனல் இ-கவர்னன்ஸ் சர்வீசஸ் லிமிடெட் (NeSL) தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் நகரமயமாக்கல் விரைவாக வளர்ந்து வரும் சூழலில் வாடகை ஒப்பந்தங்கள், பிரமாணப் பத்திரங்கள், வங்கி உத்தரவாதங்கள் போன்ற பதிவு செய்யப்படாத ஒப்பந்தங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றன. இந்த ஒப்பந்தங்கள் அனைத்தையும் டிஜிட்டல் மயமாக்குவதையும் அனைத்து தரப்பினரும் தொலை தூரத்திலிருந்தே ஆவணங்களில் முத்திரையிட்டுக் கையொப்பம் இடுவதற்கு, இந்த இ-கையொப்பம் சேவை உதவியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

இந்த சேவை, ஒப்பந்தம் மேற்கொள்வோர் அதில் கையெழுத்திடுவதற்கோ அல்லது முத்திரையிடுவதற்கு நேரடியாகச் செல்ல வேண்டிய அவசியத்தைக் குறைக்கிறது. இ-கையொப்பம் இயங்குதளத்தில் உள்ள NeSL இன் இ -கையொப்பமிடுதல் மற்றும் இ-ஸ்டாம்பிங் அம்சங்களுடன் எந்த நேரத்திலும், எங்கிருந்தும் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு முத்திரையிட முடியும் என்பது கூடுதல் சிறப்பாகும்