நேர் கொண்ட பார்வை – விமர்சனம்!

ஓலா, ஊபர் சேவை மாதிரி டேட்டிங் ஆப் அதிகமாக தரவிறக்கம் செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகி வருகிறது. இது போன்ற சாதனங்கள் மூலம் கொஞ்சூண்டு அறிமுகமான ஆண் நண்பர்(?) களுடன் டேட்டிங் என்ற பெயரில் ட்ரிப் போகும் எண்ணிக்கையும் நம் தமிழகத்திலேயே கூட அதிகரித்து வருகிறது. இச்சூழ்நிலையில் பெண்களுக்கு எதிரான எல்லா கொடுமைகளுக்கும் பெண்கள் மீதே பழி போடுவது, கட்டுப்பாடுகள் விதிப்பது என்பதுதான் நடைமுறையில் நிலவுகிறது. ஆனால் இப்படியானக் காலக்கட்டத்தில் ஆணென்ன, பெண்ணென்ன நீயெண்ண., நானென்ன எல்லாம் ஓரினம்தான் என்று பாட்டெல்லாம் பாடாமல் ஓப்பன் கோர்ட்டில் பெண்ணின் ஆடை குறித்தும், அவள் சிரித்து பேசும் போது சொல்லும் அடல்ஸ் ஒன்லி ஜோக் குறித்து, உறவு வைத்து கொள்வது குறித்தும் கொஞ்சமும் தயங்காமல் பேசும் ஒரு சமூக நீதி படத்தில் அஜித் நடித்து இருக்கிறார். அதுதான் நேர் கொண்ட பார்வை. சகலருக்கும் தெரிந்த ஒரு விஷயத்தை நினைவூட்டிக் கொள்வது நல்லது. ஹிந்தியில் வெளியான பிங்க் படத்தின் ரீமேக்தான் இந்த நேர் கொண்ட பார்வை. அமிதாப் நடித்த அந்த கதையை நம்மூர் தமிழ் மாஸ் ஹீரோவுக்கும் பொருத்தமாக அமைத்து அதிலும் அஜித் என்ற அல்டிமேட் ஸ்டாரை வைத்து ஸ்கோர் செய்திருக்கிறார் இயக்குநர். ஆனால் ஏகப்பட்ட நெருடலான வசனங்கள் நிறைந்த இப்படத்தை குடும்பதோடு காண தனி மனநிலை வேண்டும் என்பதுதான் உண்மை.

கதை என்னவென்றால் குடும்பத்தை விட்டு தனித்து வந்து ஒரே அறையில் தங்கி வேலைக்குப் போய் சம்பாதித்து வரும் இந்தக் காலத்து பெண்கள் மீரா கிருஷ்ணன் (ஷரத்தா), ஃபமிலா (அபிராமி), ஆண்ட்ரியா (ஆண்ட்ரியா) ஆகியோர். நேரம் கிடைக்கும் போது ஆண் நண்பர்களுடன் கெட் டூ கெதர், பார்ட்டி, செக்ஸ் எல்லாம் பகிந்தபடி வாழ்க்கையை ஓட்டிக் கொண்டு இருக்கிறார் கள்.இப்படியா பட்டவர்கள் ஒரு பொலிட்டிகல் பேமிலி இளைஞன் & அவனது ஃப்ரண்ட்ஸூகளுடன் ஒரு ரிசார்ட் பார்ட்டிக்குப் போன இடத்தில் ,ஷ்ரத்தாவிடம் எல்லை மீறுகிறான் இளைஞன். அவனை அவாய்ட் செய்ய முயன்று வேறு வழியில்லாத நிலையில் அங்கிருந்த சரக்கு பாட்டிலால் இளைஞன் தலை யில் தாக்கி விட்டு தோழிகளுடன் வெளியேறுகிறார் ஷ்ரத்தா. அந்த இளைஞனின் மாமா அரசியல் செல்வாக்கை வைத்து . இந்த மூன்று இளம் பெண்களை பாலியல் தொழில் செய்பவர்கள் என்றும் குறிப்பாக ஷ்ரத்தா பணம் கேட்டு மிரட்டி கொலை செய்ய முயன்றதாகவும் போலீசில் வழக்குப் பதிந்து கைது செய்ய வைக்கப் படுகிறார். இதையெல்லாம் இப்பெண்கள் குடியிருக்கும் பிளாட்டில் வாழ்ந்து வரும் வக்கீல் அஜித்குமார் கண்டு, உணர்ந்து அந்தப் பெண்களுக்காக வாதாடி உண்மையை நிலை நாட்டுவதுதான் நேர் கொண்ட பார்வை.

கோலிவுட்டின் ஓப்பனிங் மார்கெட் ஹீரோ, ரசிகர் மன்றம் என்ற செட் அப்பை கலைத்தாலும் காலை ஏழு மணி ஷோ-வுக்கு ஐந்தரை மணிக்கே வந்து நிற்கும் மனிதக் கூட்டத்தைக் கொண்ட நாயகன் என்பது மாதிரியான போஷாக்குகளையெல்லாம் பற்றி கொஞ்சம் கூட சட்டை செய்யாமல் இப் படத்தில் சொல்லப்படும் பெண்ணின் வாழ்க்கை வலி(மை)யையும், அமிதாப் நடித்த இந்த கதை சொன்ன கருத்தையும் புரிந்து ஒப்புக் கொண்டு தமிழில் நடித்திருக்கும் அஜித்துக்கு தனி பாராட்டு விழாவே நடத்தலாம். இத்தனை கம்பீரமாக, இம்புட்டு நவரச நடிப்பையும், குரலிலும் கொடுத்து அசத்தும் அஜித்-தைப் பார்க்கவே பரவசமாக இருக்கிறது.

மெயின் ஹீரோயின் ஷ்ரத்தா தோழி அபிராமி & ஆண்ட்ரியா தாரியாங் தங்கள் ரோலில் அசத்தி இருக்கிறார்கள். மெயின் படமான பிங்க்-கில் இல்லாத ரோலான வித்யாபாலன் ஓ கே. தந்தி டிவியில் எதிராளியை நெசமாகவே திணறடித்தே பேர் வாங்கிய ரங்கராஜ் பாண்டே நடிப்பு பயிற்சி எடுத்து தன் கேரியரை தொடர்வது நலம். படத்தில் அல்டிமேட் ரியல் ஸ்டார் என்றால் பிஜிஎம் போட்ட இசை அமைப்பாளர் யுவன் என்று தனி கார்ட் போடலாம். மனுஷன் அஜித்-தின் அடிதடி காட்சியில் தனிக் கவனம் பெறுகிறார்.

இனும் சில நாட்களில் வர இருக்கும் இந்திய ‘சுதந்திரம்’ என்று சொல்லும் போதே, ‘கட்டுப்பாடு’ எனும் சொல்லும் ஒருவருக்கு ஞாபகம் வர வேண்டும். இதன்படி கட்டுப்பாடற்ற சுதந்திரம் மனிதர்களை – அவர்கள் ஆண்களானாலும் சரி, பெண்களானாலும் சரி – படுகுழியில்தான் தள்ளும். அதிலும் ஆண் தன் விருப்பத்திற்க்காக பெண்ணை அவள் விருப்பம் இல்லாமல் தொடுவதே தவறு என்பதை சொல்வதில் அஜித் & இயக்குநர் விநோத் ஜெயித்து விட்டார்கள் என்றே சொல்ல வேண்டும்..

மொத்தத்தில் இனி அல்டிமேட் ஸ்டார் அஜித் இது மாதிரியான சமூக பிரக்ஞையுள்ள படங்களில் நடிப்பதன் மூலம் கோலிவுட் மட்டுமல்ல இளையதலைமுறையே மாற்றம் காணும் என்பதென்னவோ நிஜம்.

மார்க் 3. 5 / 5