August 14, 2022

நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா – விமர்சனம்!

சந்தேகமே வேண்டாம். குப்பைதான். அதனாலேயே வருத்தமாக இருக்கிறது. ஏனெனில் யூ டியூப் சேனல்களில் இயக்குநர்களாக இருப்பவர்களுக்கு இனி சினிமா வாய்ப்பு கிடைப்பது கடினமாகலாம். ‘உங்க பொட்டன்ஷியல் என்னனு தெரிஞ்சுடுச்சே… சிவகார்த்திகேயன் தயாரிச்சும் உங்களால திறமையை நிருபிக்க முடியலையே…’ என ஒதுக்கப்படலாம்.

ஏன் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள்?

குட்டி யானை ஓட்டும் டிரைவரால் லாரி ஓட்ட முடியாது. லாரி ஓட்டுபவர் டிரக் இயக்குவது கடினம். டிரக் ஓட்டுபவர்கள் தண்ணீர் லாரியை ஓட்டுவது என்பது குதிரைக் கொம்பு.

நான்கு சக்கரங்கள்தான். ஏற்றிச் செல்வதும் சரக்குதான். என்றாலும் ஒவ்வொன்றுக்குமான லாவகம் வேறு வேறு.

மேடை நாடகங்களில் கதை, வசனம் எழுதி இயக்கிய பலர் சினிமாவுக்கு வந்தார்கள். ஆனால், நின்று ஜெயித்தது கே.பாலசந்தர்தான். இந்த ஒரு மனிதரின் வெற்றிதானே 40 ஆண்டுகளுக்கும் மேலாக மேடை நாடகத்துறையை சேர்ந்தவர்களுக்கு உத்வேகம் அளித்து வருகிறது?

ஒரேயொரு ஆபாவாணன் வெற்றிப்பெற்றதால்தானே அத்தனை திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்கு அத்தனை தயாரிப்பாளர்கள் வாய்ப்புக் கொடுத்தார்கள்?

ஆபாவாணன் வெற்றி பெறாமல் போயிருந்தால் ஆர்.கே.செல்வமணி, ஆர்.வி.உதயகுமார் எல்லாம் லைம்லைட்டுக்கு வந்திருப்பார்களா?

இப்படி சின்னத்திரையில் இருந்து பெரியத்திரைக்கு வந்து ஒரேயொருவர் கூட ஜெயிக்காததால்தானே – வந்தவர்களும் சொதப்பியதால்தானே – திறமை இருந்தும் இன்றுவரை டிவி சீரியலில் இருந்து ஓருவராலும் சினிமா டைரக்டராக முடியவில்லை? அடைக்கப்பட்ட கதவுகளை அல்லவா பல காலமாக ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்?

இதுதான் எதார்த்தம்.

மீடியம்.

ஒவ்வொரு தளமும் ஒவ்வொரு தாளத்துடன் இயங்குகிறது. ஒன்றின் தாளம் மற்றொன்றின் தளத்துக்கு செட் ஆகாது. அச்சு வேறு டிஜிட்டல் பைனரி வோட்ஸ் வேறு; டிவி வேறு சினிமா வேறு; யூ டியூப் முற்றிலும் வேறு.

மேடையிலும் கதை வசனம்தான் சினிமாவிலும் கதை வசனம்தான். ஆனால், இரண்டும் ஒன்றல்ல.

போலவே ஒரே கேமராதான். ஆனால், சினிமா சீரியல் யூ டியூப் ஆகிய மூன்றுக்கும் அதன் பயன்பாடு ஒரே மாதிரி அல்ல.

இந்த வேறுபாட்டை / பாடுகளை முதன்முதலில் மீடியம் மாறுபவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஏனெனில் தனிப்பட்ட அவர்களுடைய வெற்றி / தோல்வியாக ஒருபோதும் அதன் நெட் ரிசல்ட் கருதப்படாது. மாறாக மீடியம் மாற நினைக்கும் நூற்றுக்கணக்கானவர்களை அது ரெப்ரசன்ட் செய்யும்.

எனவே அந்த முதல் நபர் கண்ணும் கருத்துமாக செயல்பட வேண்டும். அவரது பலவீனமும் அலட்சியமும் பின்னால் வந்து கொண்டிருக்கும் அனைவரையும் புதைக்குழிக்குள் தள்ளிவிடும்.

‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு’ டீம் அப்படி தங்களைச் சேர்ந்தவர்களை கூண்டோடு புதைக் குழிக்குள் தள்ளியிருக்கிறதா?

காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

கே. என் . சிவராமன்