ஆதார் நிறுவன குளறுபடியால் நீட் தேர்வு மோசடி வழக்கில் பின்னடைவு!

நீட் தேர்வு மோசடி குறித்து சிபிசிஐடி போலீசார் வெளியிடப்பட்ட புகைப்படங்கள் தொடர்பான தகவல்களை கண்டுபிடிக்க முடியவில்லை என ஆதார் ஆணையம் பதிலளித்துள்ளது.

நீட் தேர்வில் மோசடி செய்து மருத்துவ கல்லூரியில் சேர்ந்தது தொடர்பாக இரண்டு வழக்குகள் சிபிசிஐடி விசாரணையில் உள்ளன. இது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் மோசடி செய்து மருத்துவக்கல்லூரியில் சேர்ந்த மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் என சுமார் 15 பேருக்கு மேல் கைது செய்தனர்.

இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் மோசடி செய்து தேர்வு எழுதிய மாணவ,மாணவிகள் 10 பேரின் புகைப்படங்களை சிபிசிஐடி போலீசார் வெளியிட்டனர். அவர்களது புகைப்படங்களை வைத்து விவரங்களை கொடுக்குமாறு பெங்களூரில் உள்ள ஆதார் ஆணையத்திற்கு சிபிசிஐடி போலீசார் கடிதம் எழுதியிருந்தனர்.

ஆதார் ஆணையம் சிபிசிஐடி போலீசார் அளித்த புகைப்படங்களில் உள்ளவர்களை தங்களிடம் இருக்கும் தகவல் தரவுகளின் மூலம் கண்டுபிடிக்கவில்லை என தெரிவித்துள்ளது.இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக தலைமறைவாக உள்ள இடைத்தரகர் ரஷீத் என்பவரை தீவிரமாக தேடி வருவதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.