October 25, 2021

நீதிபதி பணிகளுக்கு(ம்) நீட் தேர்வு – மத்திய அரசு ஐடியா!

கீழ் கோர்ட்டுகளில் காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களை நிரப்ப நாடு முழுவதும் நீட் தேர்வு போன்ற தேர்வை நடத்தலாம் என சுப்ரீம் கோர்ட்டுக்கு மத்திய அரசு யோசனை கூறி இருக்கிறது.

கடந்த 2015 டிசம்பர் 31ம் தேதி நடந்த ஆய்வுப்படி நாடு முழுவதும் உள்ள கீழ் நீதிமன்றங்களில் நீதிபதிகள், ஜூடிசியல் நீதிபதிகள் என 20,502 பணியிடங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால் 16,050 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. 4,452 பணியிடங்கள் காலியாக உள்ளன. காலி பணியிடம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் பல முறை அதிருப்தி தெரிவித்துள்ளது. அதே போன்று 60 ஆண்டுகளாக இருந்து வந்த அகில இந்திய நீதிமன்ற சேவை அமைப்புக்கு பா.ஜ. அரசு ஆளும் மாநிலங்கள் உள்பட பல மாநிலங்கள் எதிர்ப்ப்பு தெரிவித்து வந்தன.

இந்த நிலையில், விரைவாக நீதிவழங்க கீழ் கோர்ட்டுகளில் காலி பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக கடந்த ஏப்ரல் 8 ம் தேதி அரசு பிரதிநிதிகள் மற்றும் நீதித்துறை பிரதிநிதிகள் ஆலோசனை நடத்தினர். உச்ச நீதிமன்ற நீதிபதி ஆதர்ஷ்கோயல் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் மத்திய தேர்வு செயல்முறை பயன்படுத்தி தேர்வுக்கு மாற்று முறையை பயன்படுத்த வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நீட் தேர்வு போன்று ஒரு மையப்படுத்தப்பட்ட தேர்வு முறையை ஆட் சேர்ப்பு குழு ஒன்றை உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையில் அமைத்து நடத்த வேண்டும் என்று மத்திய சட்டத்துறை முன்மொழிந்து உள்ளது. இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டிற்கு, மத்திய அரசு சார்பில் ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.அதில், மருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் சிபிஎஸ்இ., நீட் தேர்வுகளுக்கு கடைபிடிக்கும் விதிகளை பின்பற்றி, நீதிபதி பணியிடங்களை நிரப்ப தேர்வு நடத்தி, முடிவுகள், ரேங்க் பட்டியல் வெளியிட தேர்வு நடத்தலாம்.

மேலும் நீதித்துறை அதிகாரிகளை தேர்வு செய்ய யு.பி.எஸ்.சி., மூலம் தேர்வு நடத்தலாம். இதற்காக சிறப்பு தேர்வு நடத்த யு.பி.எஸ்.சி., மாநில ஐகோர்ட்டுகளுடன் ஆலோசனை நடத்தி கொள்ளலாம். கீழமை கோர்ட்களுக்கு நீதிபதிகளை நியமிக்கும் போது இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங் பின்பற்றும் விதிகளை பின்பற்றலாம் எனவும் அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.