September 20, 2021

மருத்துவப் படிப்புகான நீட் தேர்வு முடிவுகள் வெளியானது!

நாடு முழுவதும் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகளை வெளியிட்டது தேசிய தேர்வு முகமை.

நாடு முழுவதும் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் 5-ஆம் தேதி நடைபெற்றது. தமிழகத்தில் 14 நகரங்களில் 188 மையங்கள் உள்பட நாடு முழுவதும் 154 நகரங்களில் 2,500-க்கும் மேற்பட்ட மையங்களில் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி என 11 மொழிகளில் நீட் தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வுக்கு தமிழகத்தில் 1 லட்சத்து 40 பேர் உள்பட நாடு முழுவதும் 15 லட்சத்து 19 ஆயிரத்து 375 பேர் விண்ணப்பித்திருந்தனர்.அவர்களில், 14 லட்சத்து 10 ஆயிரத்து 754 பேர் தேர்வு எழுதினர். 1 லட்சத்து 8 ஆயிரத்து 621 பேர் தேர்வு எழுதவில்லை.

இந்நிலையில், நீட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வுகள் முகமை இன்று புதன்கிழமை (ஜூன் 5) காலை வெளியாகும் என காத்திருந்த நிலையில், மாலை 4 மணிக்கு வெளியாகும் என தெரிவிக்கப் பட்ட நிலையில், அதற்கு முன்னதாக நீட் தேர்வு முடிவுகள்  www.nta.ac.in ,  www.ntaneet.nic.in ஆகிய இணையதளங்களில் வெளியானது.

தமிழகத்தில் தேர்வு எழுதிய மாணவர்களில் 48.57 சதவீத மாணவர்கள் தேர்ச்சியை பெற்றுள்ளனர். இதுவே கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 39.56 சதவீதம் ஆகும். 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் 7,97,042 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர்.

தமிழகத்தில் மாணவி ஸ்ருதி 625 மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்துள்ளார். இவர் தேசிய அளவில் 57வது இடம் பிடித்துள்ளார். நீட் தேர்வில் பெண்கள் பிரிவில் தெலுங்கானா மாணவி மாதுரி ரெட்டி 695 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தார். இவர் தேசிய அளவில் 7வது இடம் பிடித்துள்ளார்.