June 21, 2021

நீட் தேர்வு ஆடைக் கட்டுப்பாடு + ஜி.வி.பிரகாஷின் நீட்( புது) ஆப்!

நம்ம நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் ஆயுர்வேதா, யோகா மற்றும் இயற்கை மருத்துவம், சித்தா, ஹோமியோபதி (ஆயுஷ் – AYUSH) படிப்புகளுக்கு, வெளிநாடுகளில் மருத்துவம் படிக்க செல்பவருக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET – நீட்) கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி 2018-19-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு வரும் மே மாதம் 6-ம் தேதி நடைபெறுகிறது. மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நடத்தும் நீட் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப் பிப்பது கடந்த பிப்ரவரி மாதம் 8-ம் தேதி தொடங்கி, மார்ச் 12-ம் தேதி முடிவடைந்தது. மாநிலப் பாடத்திட்டங்கள், சிபிஎஸ்இ உள்ளிட்ட மத்திய பாடத்திட்டங்கள், திறந்தநிலை கல்வி நிறுவனங்களில் பிளஸ் 2 படிப்பவர்கள் என சுமார் 15 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.

இந்த ஆண்டு நீட் தேர்வுக்கு கூடுதலாக 2 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். நாடுமுழுவதும் 60 ஆயிரம் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் காலியிடங்கள் உள்ள நிலையில் மொத்தம் 13.36 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதன் மூலம் ஓரிடத்திற்கு 22 பேர் போட்டியிடும் சூழல் ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இந்த தேர்வின்போது விதிமுறைகளை மீறி ஆடைகளை அணிந்து வந்ததாக கூறி, தேர்வு அறையில் இருந்து மாணவ, மாணவியர் வெளியேற்றப்பட்டனர். ஆடைக் கட்டுப்பாடு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து இந்த ஆண்டு ‘நீட்’ தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஆடை கட்டுப்பாடுகளை சிபிஎஸ்இ நிர்வாகம் முன்கூட்டியே அறிவித்துள்ளது.

இதன்படி சிபிஎஸ்இ கூறியுள்ள தகவல்கள் இதோ::

‘‘மாணவர்கள் வெளிர் நிற அரைக்கை ஆடைகளையே உடுத்த வேண்டும்,

ஷூ அணியக் கூடாது.

பேட்ஜ்கள், பூக்கள் உள்ளிட்டவற்றை அணிந்து வரக் கூடாது.

குறைந்த உயரம் கொண்ட சாதாரண செருப்பு, சாண்டல்ஸ் அணியலாம்.

மொபைல் போன் உட்பட தொலைத்தொடர்பு சாதனங்களை தேர்வு மையத்திற்குள் எடுத்து வரக்கூடாது.

பென்சில் பாக்ஸ், கைப்பைகள், பெல்ட், தொப்பி, நகைகள் வாட்ச், உலோகப் பொருட்கள் ஆகியவற்றையும் எடுத்து வர அனுமதி கிடையாது.

இவ்வாறு சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

அடிசினல் ரிப்போர்ட்:

இதனிடையே இந்த நீட் தேர்வில் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளையும் சேர்ந்த ஏழை மாணவர் களும் படித்துப் பயன்பெறும் வகையில் மொபைல் அப்ளிகேஷன் ஒன்றை உருவாக்கி வருகிறார் நடிகர் ஜி.வி.பிரகாஷ்.

அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மாணவி அனிதா. இவர் 2016-17ம் கல்வியாண்டில் மேல்நிலைக் கல்வியில் பொதுத் தேர்வில் 1176 மதிப்பெண்கள் பெற்றார். மருத்துவர் ஆக வேண்டுமென்ற தீராதா கனவு கொண்டிருந்தவர். அதுவரை மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை நடைபெற்று வந்த தமிழக கல்வித் திட்டத்தில் 2017ல் மத்திய அரசின் நீட் தேர்வு முறை அறிமுகப் படுத்தப்பட்டது. இதையடுத்து நீட் தேர்வுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவிக்க, நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டி தமிழக அரசு அவசர சட்டம் இயற்றியது. இதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. ஆனால் வழக்கறிஞர் நளினி சிதம்பரம், நீட் தேர்வு முறையிலேயே தமிழக அரசு மருத்துவ சேர்க்கை நடைபெற வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு அளித்தார். மேலும் அந்த மனுவை அவசர மனுவாகக் கருதி விசாரணை செய்ய வேண்டும் எனவும் கேட்டிருந்தார். இதன்படி மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், தமிழகத்தில் நீட் தேர்வு முறையில் மருத்துவக் கலந்தாய்வை நடத்த வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.

பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் நீட் தேர்வும் நடந்து முடிந்து தேர்வு முடிவுகள் வெளியானது. இந்த நிலையில் மேல்நிலைக் கல்வி பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்திருந்தும், நீட் தேர்வு முடிவால் மாணவி அனிதாவின் மருத்துவக் கனவு பறிபோனது. இதையடுத்து 2017 செப்டம்பர் மாதம் 1ம் தேதி தற்கொலை செய்து கொண்டார் அனிதா.

அதன் பிறகு நீட் தேர்விற்கான எதிர்ப்புகள் தமிழகம் முழுவதும் வலுத்தது. நீட் தேர்வினால் ஸ்டேட் போர்டு பள்ளிகளில் ஊர்ப்புறங்களில் மருத்துவக் கனவுடன் படித்த மாணவர்கள் அனைவரும் பாதிக்கப் பட்டனர்.

இந்நிலையில்தான் இசையமைப்பாளரும், நடிகரும், மனிதருமான ஜிவி பிரகாஷ் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், “நீட் எனும் அரக்கனால் தங்கை அனிதாவை இழந்தோம். அனிதாவின் வீட்டிற்குச் சென்றபோது இனி மற்றொரு அனிதாவை நீட்டால் பறிகொடுக்கக் கூடாது என்று தீர்க்கமான முடிவு எடுத்தேன். என் நண்பர்களுடன் பேசி, வல்லுநர்கள் மற்றும் ஆசிரியர்களை ஒன்றிணைத்து, நீட் தொடர்பாக மூன்று மாதங்களாக வரைவுத்திட்டத்தைத் தயாரித்து, தமிழ் வழி, ஆங்கில வழி மாணவர்கள் இலவசமாகப் பயன்பெறும் வகையில் மென்செயலி (Mobile Application) உருவாகி வருகிறது.

தகுதியான மதிப்பெண்கள் பெற்றிருந்தும், பணம் என்ற ஒற்றைக் காரணத்தால் எந்த மாணவரும் பாதிப்படையக் கூடாது என்ற அடிப்படையில் எங்களால் முடிந்த முயற்சி. இன்னும் சில மாதங்களில் பணி முடிந்து இந்த Mobile App பயன்பாட்டிற்கு வரும். செயலி உருவாக்க உதவும் எனது குழுவிற்கு வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.