நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரி தமிழகரசு நிறைவேற்றிய மசோதா நிராகரிப்பு!

நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரி தமிழகரசு நிறைவேற்றிய மசோதா நிராகரிப்பு!

தமிழக அரசியல் கட்சிகள் உள்பட பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரி தமிழக அரசு நிறைவேற்றிய மசோதா நிராகரிக்கப்பட்டுவிட்டதாக இது தொடர்பான வழக்கு விசாரணையில் போது ஐகோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. முன்னதாக இந்த மசோதாக்கள் தொடர்ந்து குடியரசு தலைவருக்கு அனுப்ப வேண்டும், மத்திய அரசு அழுத்தம் தர வேண்டும் என்று திமுக உள்ளிட்ட பல்வேறு எதிர்கட்சிகள் வலியுறுத்தினர். மேலும் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த டி.கே.ரங்கராஜன் இது தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் ஜனாதிபதி மாளிகைக்கு இது சென்றுள்ளதா என கேள்வி எழுப்பியிருந்தார். ஜனாதிபதி மாளிகைக்கே அந்த மசோதா செல்லவில்லை என பதில் வந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

அதாவது அகில இந்திய அளவில் நீட் தெரிவு கட்டாயம் செய்யப்பட்டதற்கு தமிழகத்தில் பல்வேறு தரப்பினர் தொடர்ந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் கடந்த 2017-ல் நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்கும் வகையில் தமிழக சட்டமன்றத்தில் தமிழ்நாடு மருத்துவ மற்றும் பல்மருத்துவ சேர்க்கை சட்டம் என்ற ஒரு மசோதா தமிழ்நாடு மருத்துவ மற்றும் பல்மருத்துவ மேல் படிப்பிற்கான சேர்க்கை என இரண்டு சட்ட மசோதாக்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு குடியரசு தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த 2017-18 ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு முன் இந்த இரண்டு சட்ட மசோதாவுக்கும் குடியரசு தலைவர் ஒப்புதலை பெற நடவடிக்கை எடுக்கும் படி மத்திய உள்துறை அமைச்சகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு உத்தரவிடக்கூறி சென்னை ஐகோர்ட்டில் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு உள்ளிட்ட 4 பேர் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு அங்கு நிலுவையில் இருந்து வந்தது. நாடாளுமன்ற குழு பரிந்துரை படியும், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் படியும், மருத்துவ மற்றும் பல் மருத்துவ மாணவர் சேர்க்கையில் அந்தந்த மாநிலங்களே தங்கள் சொந்த நடைமுறையை பின்பற்றிக்கொள்ளலாம் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மனுவில் சுட்டிக்காட்டியுள்ளனர். அதன்படி தமிழகத்திற்கு நீட் தேர்வு இல்லை என்று உத்தரவிடக்கோரி அந்த வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியபிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “2017 பிப்ரவரியில் தமிழக அரசு சட்ட மசோதாக்கள் மத்திய உள்துறை அமைச்சகம் பெற்றுள்ளதாகவும், அவற்றை அந்த வருடம் செப்டம்பரில் குடியரசு தலைவர் நிறுத்தி வைத்ததாகவும் தெரிவித்தனர். மேலும் இரு சட்ட மசோதாக்களும், நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதா?, நிராகரிக்கப்பட்டுள்ளதா?, என உள்துறை அமைச்சகத்திடம் விளக்கம் கேட்ட போது இரண்டு சட்ட மசோதாக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தரப்பில் பதிலளித்துள்ளதாக தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து நீதிபதிகள் சட்ட மசோதாக்கள் பெறப்பட்ட, நிராகரிக்கப்பட்ட தேதிகள் உள்ளிட்ட விவரங்களை ஒரு அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். மேலும் வழக்கு விசாரணையை ஜுலை 16-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

error: Content is protected !!