March 22, 2023

பிஎஸ்சி நர்சிங் & பிஎஸ்சி லைப் சைன்ஸஸ் உள்ளிட்ட படிப்புகளுக்கும் நீட் தேர்வு!

பல மாணவர்களின் கனவான எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புக்களை தொடர்ந்து பிஎஸ்சி நர்சிங் மற்றும் பிஎஸ்சி லைப் சைன்ஸஸ் உள்ளிட்ட படிப்புகளுக்கு நடப்பாண்டு முதல் நீட் நுழைவு தேர்வு நடத்தப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்து உள்ளது. ஆகஸ்ட் 1ல் நுழைவு தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மாணவர் கள் மற்றும் பெற்றோர்கள் இடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் என அரசியல் கட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாடு முழுவதும் மருத்துவ மாணவர் சேர்க்ைகக்கு அகில இந்திய அளவிலான ‘நீட்’ பொது நுழைவுத் தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. நீட் தேர்வால், தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். நீட் தேர்வுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களும் நடத்தப்பட்டது. நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால், கடந்த 2017ம் ஆண்டு அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மாணவி அனிதாவை தொடர்ந்து, மேலும் பல்வேறு மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து கொள்ளும் அவல நிலை தொடர்ந்த வண்ணம் உள்ளது. எனவே, நீட் தேர்வு ரத்து செய்யக் கோரி தமிழகம் முழுவதும் திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் போராட்டம் நடத்தின.

ஆனால், மத்திய, மாநில அரசுகள் நீட் தேர்வு விஷயத்தில் பிடிவாதமாக இருந்து வருகின்றன. நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி நடந்த மாணவர்களின் போராட்டங்களை தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை. இது மாணவர்களின் பெற்றோர்கள் இடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, வெறும் கண்துடைப்புக்காக, தமிழக சட்டசபையில் நீட் தேர்வுக்கு எதிராக அரசு தீர்மானம் நிறைவேற்றியது. இதைத் தொடர்ந்து நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தமிழக கவனரிடம் வழங்கப்பட்டது. இந்த தீர்மானம் குடியரசு தலைவரிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால், நீட் தேர்வுக்கு எதிராக துளியளவு கூட தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

முக்கியமாக, மத்திய அமைச்சர்கள், நீட் தேர்வை தமிழகத்தில் ரத்து செய்ய முடியாது என வெளிப்படையாக தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், தேசிய தேர்வு முகமை நேற்று இரவு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-எம்பிபிஎஸ், பல் மருத்துவம், ஆயுர்வேதம், யுனானி, சித்தா, ஹோமியோபதி உள்ளிட்ட இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வுடன் சேர்த்து, பிஎஸ்சி நர்சிங், பிஎஸ்சி லைப் சைன்ஸஸ் ஆகிய பாடப்பிரிவுகளுக்கும் நீட் நுழைவு தேர்வு நடத்தப்படும். 2021ம் ஆண்டு மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வு ஆகஸ்ட் 1ல், இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட 11 மொழிகளில் நடத்தப்படும்.

பாடத் திட்டம், தகுதி, இடஒதுக்கீடு, கட்டணம் உள்ளிட்ட விவரங்கள் விரைவில் இணைய தளத்தில் வெளியிடப்படும் என தேசிய தேர்வு முகமை மூத்த இயக்குனர் அறிக்கையில் தெரிவித்துள்ளார். நீட் தேர்வால் தமிழகத்தில் மாணவர்கள் தற்கொலை செய்வது அதிகரித்து வருவதால், அத்தேர்வை ரத்து செய்யக் கோரி போராட்டம் நடந்து வந்த நிலையில், பிஎஸ்சி நர்சிங், பிஎஸ்சி லைப் சைன்ஸஸ் ஆகிய பாடப்பிரிவுகளுக்கும் நீட் நுழைவு தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது தமிழக மாணவர்கள் இடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிவிப்பை திரும்ப பெற ேவண்டும் என அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.