நடப்பாண்டு அரசு சார்பில் நீட் பயிற்சிக்கு செலவான தொகை 20 கோடி : ஆனா 7 பேர்தான் செலக்ட்!

நடப்பாண்டு அரசு சார்பில் நீட் பயிற்சிக்கு செலவான தொகை 20 கோடி : ஆனா 7 பேர்தான் செலக்ட்!

நடப்பாண்டுக்கான மருத்துவப் படிப்பில், தமிழ் நாட்டில்  அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி களில் படித்த 7 மாணவர்களுக்கு மட்டுமே தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்து உள்ளதாகத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலில் தெரிய வந்துள்ளது. அதே சமயம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி வழங்குவதற்காக, தமிழக பள்ளிக் கல்வித் துறை சார்பில் 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

2018ஆம் ஆண்டு மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல், கடந்த ஜூன் 28ஆம் தேதி அன்று வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் 20 பேர் 600க்கும் மேல் மதிபெண் பெற்றிருந்தனர். மருத்துவக் கலந்தாய்வில் கலந்துகொள்வதற்காக, அரசுப் பள்ளி மாணவர்கள் 409 பேர் விண்ண ப்பித்துருந்தனர். இவர்களில் 390 பேர் கலந்தாய்வுக்குத் தகுதி பெற்றதாக அறிவிக்கப் பட்டது. இதேபோல, அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த பள்ளிகளில் படித்த 991 பேர் விண்ணப்பித் தனர். இவர்களில் 930 பேர் தகுதி பெற்றனர். தமிழகத்தில் 22 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இருக்கைகள் உட்பட 2,639 இடங்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது.

இந்த கலந்தாய்வில் வெற்றி பெற்று 7 அரசுப் பள்ளி மாணவர்கள் மட்டுமே மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட பதிலில் இது தெரிய வந்து உள்ளது. அதாவது அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 4 மாணவர்களுக்கு மட்டுமே மருத்துவப் படிப்பு கிடைத்துள்ளது தெரியவந்துள்ளது. அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சேர்ந்தவர்களில் 3 பேருக்கும், தனியார் பள்ளிகளில் பயின்ற 20 மாணவர்களுக்கும்,சி.பி.எஸ்.இ மாணவர்கள் 611 பேருக்கும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது. தமிழக நகரங்களின் இருப்பிடச் சான்றிதழை சமர்ப்பித்து, வெளிமாநிலங்களில் பள்ளிப்படிப்பை முடித்த 191 பேருக்கும் அரசு கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது. தனியார் மருத்துவக்கல்லூரிகளில் அரசு பள்ளியை சேர்ந்த 1 மாணவருக்கு மட்டுமே இடம் கிடைத்துள்ளது.

அதேபோல தனியார் பள்ளிகளை சேர்ந்த 3 மாணவர்களுக்கும் சி.பி.எஸ்.இ மாணவர்களை 283 பேருக்கும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது. தமிழக இருப்பிட சான்றிதழை சமர்ப்பித்து, வெளிமாநிலங்களில் பள்ளி படிப்பை முடித்த 70 பேருக்கு தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டுகளில் பள்ளிப்படிப்பை முடித்து நீட் தேர்வை எழுதிய 1,277 பேருக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், 557 பேருக்கு தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் இடம் கிடைத்துள்ளது. நடப்பாண்டில் அரசுப் பள்ளி மாணவர்கள் 30 பேர் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளதாக அரசு கூறிவந்த நிலையில், தற்போது வெறும் 7 பேர் மட்டுமே சேர்ந்துள்ள தகவல் தெரிய வந்துள்ளது.

மேலும் மருத்துவக் கல்வி இயக்ககம் அளித்துள்ள பதிலில் 894 மருத்துவ இடங்களை சிபிஎஸ்இ பள்ளிகளில் படித்த மாணவர்களே பெற்றதாகக் கூறப்பட்டுள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களுக்குச் சிறப்புப் பயிற்சி அளிக்க 20 கோடி ரூபாயைப் பள்ளிக்கல்வித் துறை செலவு செய்துள்ளதாகவும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!