October 16, 2021

வதேராவை கைது செய்ய அனுமதி வேணும் மை லார்ட்!- அமலாக்கத்துறை கோரிக்கை!

கடந்த சில ஆண்டுகளாக ஹாட் டாபிக் லிஸ்டில் இடம் பிடித்து வரும் நிதி மோசடி வழக்கில் காங்கிரஸ் பொது செயலர் பிரியங்காவின் கணவர் ராபர்ட் வத்ராவை கைது செய்து காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என டெல்லி ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்துள்ளது.

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் மைத்துனரும், காங்கிரச் பொதுச் செயலாளரான பிரியங்கா காந்தியின் கணவருமான ராபர்ட் வத்ரா ரியல் எஸ்டேட் நிறுவனங்களை நடத்தி வருகிறார். இவர் இங்கிலாந்தில் ஏராளமான சொத்துக்களை முறைகேடாக வாங்கி இருப்பதாக புகார் எழுந்துள்ளது. இதில் லண்டனில் வத்ராவுக்கு சொந்தமானதாக கூறப்படும் 1.9 மில்லியன் பவுண்டு (சுமார் ரூ.17 கோடி) மதிப்புடைய சொத்து வாங்கியதில் முறைகேடு  நடந்திருப்பதாக அமலாக்கத்துறை அதிகாரிகள், நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கில் ராபர்ட் வத்ரா கைது செய்யப்படலாம் என்பதால் முன் ஜாமீன் கோரி டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிமன்றம் வத்ராவை கைது செய்ய தடை விதித்ததுடன், அமலாக்கத்துறை விசாரணைக்கு தேவைப்படும் போது ஆஜராக வேண்டும் என வத்ராவுக்கும் உத்தரவிட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ராபர்ட் வத்ரா விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. அதனால், அவரை கைது செய்து காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று அமாலக்கத்துறை வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார்.

ஆனாலும், ராபர்ட் வத்ரா கைது செய்யவதற்கான இடைக்கால தடையை வருகிற 25ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அர்விந்த் குமார் உத்தரவிட்டார்.