ரபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்த சி ஏ ஜி அறிக்கை தாக்கல்!
மாநிலங்களவையில் ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக சிஏஜி அறிக்கை தாக்கல் செய்யப் பட்டது. நிதித்துறை இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த 141 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையில், 36 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற் கான ஒப்பந்தம் உள்ளிட்ட, பாதுகாப்புத்துறை தொடர்புடைய 11 ஒப்பந்தங்கள் குறித்த தகவல்கள் இடம் பெற்று உள்ளன. அதுவும் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நிர்ணயித்ததை விட 2. 86 சதவீத குறைவான விலையிலேயே பாஜக ஆட்சியில் ரபேல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்திருப்பதாகவும், இது தொடர்பாக பாராளுமன்றக் கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. பாராளுமன்றத்திலும் இது தொடர்பாக காங்கிரஸ் எம்பிக்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளின் போது மாநிலங்கள வையில் மத்திய கணக்கு தணிக்கை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. விமானப்படைக்கான மூலதன கொள்முதல் என்று பெயரிடப்பட்ட அந்த அறிக்கையில் ரபேல் விமான கொள்முதல் மட்டுமின்றி, விமானப்படைக்கான 11 ஆயுத, தளவாட கொள்முதல் குறித்த ஆய்வு அறிக்கைகளும் இடம் பெற்றிருந்தன. ((கணக்கு தணிக்கை அதிகாரி மகரிஷி தாக்கல் செய்த மொத்தம் 141 பக்கங்களை கொண்ட அந்த அறிக்கையில் ரபேல் விமான கொள்முதல் குறித்து மட்டும் 32 பக்கங்களில் தகவல்கள் இடம் பெற்றிருந்தன.))
மாநிலங்களவையில் தாக்கல் செய்யும் முன்னர், குடியரசுத் தலைவருக்கும், மத்திய நிதி அமைச்சகத்திற்கும் அனுப்பட்ட அந்த அறிக்கையில், 2007 ஆம் ஆண்டில் காங்கிரஸ் அரசு மேற்கொண்ட ரபேல் ஒப்பந்தம் மற்றும் 2016-ம் ஆண்டின் பா.ஜ.க. அரசின் ஒப்பந்தம் ஆகியவற்றில் விமானத்திற்கான அடிப்படை விலை ஒன்றாகவே உள்ளது என கூறப்பட்டுள்ளது. தயாரிப்பு பணிகள் முடிந்து பறக்க தயார் நிலையில் உள்ள ஒரு விமானத்தின் விலையும் இரு ஒப்பந்தங்களிலும் ஒன்றாகவே உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
ரபேல் விமானத்தின் விலை மட்டுமின்றி இதர 11 ஒப்பந்தங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட ஆயுதங்கள், தளவாடங்களின் விலைகளும் அறிக்கையில் இடம் பெறவில்லை. ஆனால் இரு ஒப்பந்தங்களில் உள்ள விலைகளுக்கு இடையிலான விகிதாசாரம் மட்டுமே வெளியிடப் பட்டுள்ளது. இரு ஒப்பந்தங்களுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளும், ஒற்றுமைகளும் பட்டியலிடப் பட்டுள்ளன.
இதன் படி பறக்க தயார் நிலையில் உள்ள விமான விலையில் இரு ஒப்பந்தங்களும் ஒன்றாகவே உள்ளன. விற்பனைக்கு பிந்தைய சேவை, தொழில் நுட்ப உதவி ஆகியவற்றில் 2016-ஆம் ஆண்டின் ஒப்பந்தம் 4.77 சதவிகிதம் சிக்கனமானது.
சிறப்பு விரிவாக்கத்தில் பா.ஜ.க ஒப்பந்தம் 17.08 சதவிகிதம் சிக்கனமானது. தயாரிப்பு நிலையிலான விலை விகிதத்தில் இரு ஒப்பந்தங்களும் ஒன்று போல உள்ளன. ((பொறியியல் ஒத்துழைப்புக்கான விலை நிர்ணயத்தில் 2016-ஆம் ஆண்டு ஒப்பந்தம் 6.54 சதவிகிதம் கூடுதல் தொகையை கொண்டு உள்ளது. செயல்பாடு அடிப்படையிலான விற்பனை விலை நிர்ணயத்தில் 2016-ஆம் ஆண்டு ஒப்பந்தம் 6.54 சதவிகிதம் கூடுதல் தொகையை கொண்டுள்ளது. துணை கருவிகள், பரிசோதனை, தளக் கருவிகள் விலை நிர்ணயத்தில் 2016-ஆம் ஆண்டு ஒப்பந்தம் 0.15 சதவிகிதம் கூடுதல் விலையை கொண்டுள்ளது.))
விமானத்துடனான ஆயுதங்களுக்கான விலை நிர்ணயத்தில் 2016-ஆம் ஆண்டின் ஒப்பந்தம் 1.05 சதவிகிதம் குறைவான விலையை கொண்டுள்ளது. விமானிகள், தொழில் நுட்ப ஊழியர்களுக்கான பயிற்சிக்கான விலை நிர்ணயத்தில் 2016-ஆம் ஆண்டின் ஒப்பந்தம் 2.86 சதவிகிதம் கூடுதல் விலையை கொண்டுள்ளது.
ஆண்டு முழுவதற்குமான பராமரிப்பு, கருவிகள் பயன்பாட்டிற்கான விலை நிர்ணயத்தில் இரு ஒப்பந்தங்களும் ஒரே விலையை கொண்டுள்ளன. மொத்தத்தில் 2016-ஆம் ஆண்டின் ஒப்பந்தம் முந்தைய ஒப்பந்தத்தை விட 2.86 சதவிகிதம் சிக்கனமானது என கணக்கு தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் முந்தைய ஒப்பந்த த்தை விட 13 முக்கிய திருத்தங்களை மேற்கொண்டதன் மூலம் இந்திய விமானப்படைக்கு கணகச்சிதமாக பொருந்தும் வகையில் 2016-ஆம் ஆண்டில் ரபேல் விமான கொள்முதல் ஒப்பந்தம் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த திருத்தங்கள் மூலம் 2016-ஆம் ஆண்டின் ஒப்பந்தம் முந்தையதை விட சிக்கனமானதாக மாறி உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
வங்கி உத்தரவாதம் மற்றும் செயல் திறன் உத்தரவாத நிபந்தனைகளை நீக்கி உள்ளதால் 2016-ஆம் ஆண்டின் ஒப்பந்தம் முந்தையதை விட பணத்தை வெகுவாக மிச்சப்படுத்தி உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
விமானங்களை விரைந்து வழங்க வேண்டுமென்ற நிபந்தனை மூலம் 2016-ஆம் ஆண்டின் ஒப்பந்தம் முந்தையதை விட சிறப்பான அம்சத்தை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே நேரத்தில் நாடாளுமன்றத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதா ராமன் பேசும் போது ரபேல் விமான கொள்முதல் ஒப்பந்தம் மூலம் முந்தைய ஒப்பந்த தை விட 9 சதவிகித தொகை மிச்சமாகி உள்ளது என்பதை கணக்கு தணிக்கை அறிக்கை மறைமுகமாக மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.