ஜான்சன் & ஜான்சன் பேபி ஷாம்பு -வை யாரும் விற்காதீங்க! -குழந்தைகள் ஆணையம் எச்சரிக்கை!

தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையமானது அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்கள் தலைமை செயலாளர்கள் ஜான்சன் & ஜான்சன் பேபி ஷாம்பு விற்பனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கடிதம் எழுதியுள்ளது.

சர்வதேச அளவில் பிரபலமான ஜான்சன் & ஜான்சன் பேபி ஷாம்புவை ராஜஸ்தான் அரசு ஜெய்ப்பூர் மருந்துப் பரிசோதனை ஆய்வகத்தில் சோதனை செய்தது. அதில் ட்டிடங்களுக்குப் பயன்படுத்தும் ஃபார்மால்டிஹைட் என்ற வேதிப்பொருள் இருப்பதாக அதிர்ச்சி தரும் முடிவுகள் வெளியாகின. அது மட்டுமின்றி அதனை தொடர்ந்து உபயோகப்படுத்தினால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், நிர்வாகம் தரப்பில், `ஆய்வு தெளிவாக இல்லை. நாங்கள் ஃபார்மால்டி ஹைட் வேதிப்பொருள்களை சேர்ப்பதில்லை’ என்று மறுப்பு தெரிவித்தனர். இதையடுத்து மார்ச் 5-ம் தேதி ராஜஸ்தான் மருந்து தர கட்டுப்பாடு அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையில், தர நிர்ணய ஆய்வில் தோல்வி அடைந்த பொருள்களின் பட்டியலை வெளியிட்டது.அதில் ஜான்சன் பேபி ஷாம்புவின் பெயரும் இடம்பெற்றிருந்தது. `இரண்டு பகுதிகளாக நடந்த சோதனையில் ஜான்சன் & ஜான்சன் பேபி ஷாம்பு தோல்வி அடைந்தது’ என குறிப்பிட்டிருந்தனர்.

இந்நிலையில் தான், குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் பேபி ஷாம்பு விற்பனையை நிறுத்தவேண்டும் என்று அனைத்து மாநிலங்களுக்கும் கடிதம் எழுதியுள்ளது. மேலும் பேபி டால்கம் பவுடர் குறித்து பரிசோதனை செய்து அறிக்கை தர சொல்லி ராஜஸ்தான் மருத்து கட்டுபாடு அமைப்புக்கு, குழந்தைகள் பாதுகாப்பு உரிமைகள் ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது. அதற் கான அறிக்கையைத் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்திடம் ராஜஸ்தான் அரசு சமர்ப்பித்துள்ளது. அதன்பின் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஜார்கண்ட், அசாம் மற்றும் அருணாசலம் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் ஜான்சன் & ஜான்சன் பேபி ஷாம்பு விற்பனை நிறுத்தி வைக்கப்பட்டது.

இதுகுறித்து ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தைத் தொடர்புகொண்டபோது அதுகுறித்து எந்த உத்தரவும் எங்களுக்கு வரவில்லை. ஷாம்புவை மருந்துப் பரிசோதனை மையத்தில் மறு ஆய்வு செய்த பிறகே எங்களால் பதில் கூற முடியும் என்று தெரிவித்துள்ளது.

அண்மையில் அமெரிக்காவில் ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடரில் கேன்சர் ஏற்படுத்தக்கூடிய பொருட்கள் இருந்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் பில்லியன் கணக்கில் அபராதம் விதிக்கப் பட்டதும் குறிப்பிடத்தக்கது. அதைத் தொடர்ந்து இந்தியாவிலும் ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடர் டப்பாக்களில் திரும்பப்பெறப்பட்டுச் செய்யப்பட்ட சோதனையில் கேன்சர் ஏற்படுத்தக்கூடிய பொருட்கள் இல்லை என்று மீண்டும் விற்பனைக்கு அனுமதித்தது குறிப்பிடத்தக்கது.