October 5, 2022

எப்படித்தான் இருக்கிறது நவரசா..?-சில ஓகேக்களும்… பல ஊஹூம்களும்!

ரு பெண் பரபரப்பாக விமான நிலையத்தில் அவசரமாக டிக்கெட்டைப் பெற்றுக் கொண்டு விமானத்தினுள் நுழைவாள். பெரும் கூட்டமில்லாத அந்த விமானத்தில் அவளும் பக்கத்து இருக்கைக்காரரும் பேச ஆரம்பிக்க, இருவருக்கும் இடையே பொதுவாக உள்ளே வரும் கேப்ரியேல் பாஸ்டர்நெக் என்ற மனிதனின் பெயர். அட என்று நாம் ஆச்சரியப்படும் அதே நேரம் முன்னிருக்கையில் இருக்கும் பெண்ணும் ஆச்சரியப்படுவாள், அவனை எனக்கும் தெரியும் என்று! சற்று விசாரித்தால் அந்த விமானத்தில் பயணிக்கும் எல்லோருமே ஏதோ ஒரு வகையில் அந்த மனிதனோடு தொடர்புடையவர் களாக இருப்பார்கள். விமானப் பணிப்பெண் அப்போதுதான் சொல்வாள், அந்த விமானத்தின் பைலட் கேப்ரியேல் பாஸ்டர்நெக் என்று! திட்டமிட்டு எல்லோரையும் ஒரு விமானத்துக்குள் வரவைத்து தன்னை பாதிப்புக்குள்ளாக்கியதற்காக பழி வாங்குவான் அந்த மனிதன்! பகீர் என்ற முடிவோடு டைட்டில் ஒளிரத் தொடங்கும். நான் பார்த்த முதல் ஆந்தாலஜி வகைப் படத்தின் முதல் படம் இது! (ஆந்தாலஜியின் பெயர் WILD TALES) கோபத்தை அடிப்படையாகக் கொண்ட அத்தனை படங்களும் அப்படியே மனதில் நிற்கின்றன.

மிகச் சமீபமாக நேற்றிரவு பார்த்த ஆந்தாலஜி படம் நவரசா!ஒன்பது உணர்வுகள்… ஒன்பது கதைகள் என்ற அறிவிப்போடு நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகி இருக்கிறது. மனித உணர்வுகளை ஒன்பதாகப் பிரிக்க முடியும் என்ற அடிப்படையில் அமைக்கப்பட்டிருக்கிறது இந்த வரிசை! நம்மில் பலரும் மேலதிகாரி வீட்டுப் பிள்ளை அரங்கேற்றம் செய்யும் பரத நாட்டியத்தின் ஓர் அங்கமாக இந்த நவரசா (தமிழ்ப்படமாக இருந்தாலும் நவரசம் கிடையாது… நவரசாதான்!) வைப் பார்த்திருக்க முடியும். நம் தமிழ் சினிமாவின் மேலதிகாரியாக மதிக்கப்படும் மணிரத்னம் வீட்டுப் பிள்ளைகள் காட்டியிருக்கும் நவரசாவும் கிட்டத்தட்ட அப்படித்தான்! (அதாவது மணிரத்னம் தயாரிப்பில் ஒன்பது இயக்குனர்கள் இயக்கியிருக்கிறார்கள். இவர்களில் ப்ரியதர்ஷனை மணிரத்னம் பிள்ளை என்று சொல்லமுடியாது. சம வயதுக்காரர்களாக இருக்கக் கூடும்.)

அது சரி.. எப்படித்தான் இருக்கிறது நவரசா..?

அவர்கள் என்ன உணர்வுகளைக் கடத்தினார்களோ, தெரியவில்லை. நமக்கு, அதாவது எனக்கு, ஓர் ஆச்சரியம், ஒரு காதல் உணர்வுதான் கிடைத்தது. மற்றபடி சில ஓகேக்களும்… பல ஊஹூம்களும்! (கதையைச் சொன்னால்அது இன்னும் படம் பார்க்காதவர்களுக்கு சுவையைக் கெடுத்துவிடும் என்பதால் தவிர்த்திருக்கிறேன்)

முதலில் காதல்… வழக்கம் போல கௌதம் வாசுதேவ் மேனன்… வழக்கம் போல காதல்… வழக்கம் போல பாடல்… வழக்கம் போல சோகம்… வழக்கம் போல வழிசல் வசனங்கள்… என்று எல்லாமே வழக்கம் போலத்தான் இருக்கிறது. ஆனாலும் காதல் என்பதால் வழக்கம் போல உள்ளவையே புதிய ருசியில் தெரிகிறது. வழக்கம் போல முடிக்காமல் இருந்திருக்கலாம் என்பதைத் தாண்டி சூர்யாவும் பிரகயாவும் கண்களில் காதல் வழிய வழிய அழகாக நடித்திருக்கிறார்கள். நிறைவுக் கதையாக வந்தாலும் நிறைவான படம்!

அடுத்து ஆச்சரியமூட்டும் இயக்குனர் அர்விந்த் சுவாமி..! அவர் இயக்கிய ரௌத்திரம் படம் சொல்லப்பட்ட விதத்தில் தனித்துத் தெரிகிறது. இரண்டு டிராக்குகளை எடுத்துச் சென்று கடைசியில் இரண்டையும் கோர்த்த விதம் சுவாரஸ்யப் படுத்தியிருக்கிறது. மிக இயல்பான முகங்களாக கீதா கைலாசம், ஸ்ரீராம் இருவரின் நடிப்பும் ஈர்க்கும் ரகம்.

இந்த இரண்டு படங்களைத் தாண்டி மற்ற எல்லா படங்களுமே ஏதோ ஒருவகையில் நம் எதிர்பார்ப்பை நிறைவு செய்யத் தவறுகின்றன.விஜய்சேதுபதி, ரேவதி, பிரகாஷ்ராஜ் என்று நட்சத்திரங்கள் மின்னும் எதிரி படம் இவர்களின் குணாதிசயங்களை வெளிக்கொண்டு வரத் தவறிவிட்டது.அதைப் போலவே டெல்லிகணேஷ், ரோகிணி, அதிதி பாலன் நடித்த பாயாசமும்! ஏன் எதற்கு என்பதில் தெளிவு இல்லாததால் அவர்களுடைய குணாதிசயமும் ஒன்ற விடாமல் செய்கின்றன.

வசந்த் சாய் இயக்கிய பாயாசமும் ரதீந்திரன் இயக்கி சித்தார்த், பார்வதி நடித்த இன்மையும் ஒளிப்பதிவாகவும் காட்சிகளாகவும் பிரமிப்பு தருகின்றன. சில வசனங்களும்கூட! ஆனால், நிறைவைத் தரவில்லை!

இந்தப் பட்டியலில் ஏமாற்றத்தைத் தந்தவர்கள் சம்மர் ஆஃப் 92 தந்த ப்ரியதர்ஷனும் PEACE தந்த கார்த்திக் சுப்பு ராஜூம்தான்!

கலக்கலான காமெடிகளைத் தரும் ப்ரியதர்ஷன் இந்தமுறை பயனளிக்கவில்லை. இன்னொருமுறை ஈழத்தைத் தொட்டிருக்கும் கார்த்திக் சுப்பாராஜ் இந்தமுறையும் அதை உணர்வு ரீதியாகத் தரவில்லை. கார்த்திக் நரேனின் ப்ராஜெக்ட் அக்னி ஒருவேளை ஃபுல் லென்த்மூவியாக இருந்திருந்தால் இன்னும் கன்வின்சிங்காக இருந்திருக்குமோ என்னவோ?

(தமிழ் கட்டுரையில் ஏன் இவ்வளவு ஆங்கிலம் என்றால் படத்தில் அப்படித்தான் முக்கால்வாசி நேரம் ஆங்கிலம் பேசி கடுப்பேற்றுகிறார்கள். கடுப்புக்கு காரணம் ஆங்கிலம் புரியாமல் போவதல்ல… அதற்கு போடப்பட்டும் திராபையான சப் டைட்டில்! கிட்டத்தட்ட எல்லா கதைகளுக்குமே..!)

எல்லாம் முடிந்த பிறகு ஏதோ மிஸ் ஆகுதே என்று யோசித்தால் நினைவுக்கு வருகிறது அதர்வா, கிஷோர் (அஞ்சலியும்) நடித்த துணிந்த பின்..! எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாமல் கடந்து போகிறது!

டெக்னிகலாகப் பார்த்தால் சந்தோஷ் சிவன், பி.சி.ஸ்ரீராம், ஏகாம்பரம், சத்யன் சூரியன் முதலான ஒளிப்பதிவாளர்கள், ஏ.ஆர்.ரஹ்மான், சந்தோஷ் நாராயணன், கோவிந்த் வசந்தா, ஜஸ்டின் பிரபாகர், கார்த்திக் போன்ற இசையமைப்பாளர்கள், இன்னும் எடிட்டர்கள், கலை இயக்குனர்கள் (கார்த்திக் சுப்பாராஜ் இயக்கிய படத்தில் சந்தானம் கலை இயக்கத்தில் அசத்தியிருந்தார்) என்று பிரமாண்டமான டீம்தான்..!

தமிழ் சினிமாவுக்கும் ஆந்தாலஜிக்கும் ஏதோ ஒரு சிக்கல் இருக்கிறது. அதை நவரசா போக்கிவிடும் என்ற நம்பிக்கையோடு இருந்த நிலையில், நவரசமும் கைகூடி வரவில்லை!

(தொடக்கத்திலேயே சொன்னது போல பாமரனின் பரதநாட்டியப் பார்வைதான் இது! ஒருவேளை சுப்புடுக்களுக்கு வேறு பல விஷயங்கள் தெரியலாம். என் ரச(னை) இது!)

முருகேஷ் பாபு