நட்பே துணை – விமர்சனம்!

தமிழ் சினிமாவில் புராணம் சப்ஜெக்ட் தொடங்கி கள்ளக் காதல் வரை பல டைப்பிலான கதைகள் தொடர்ச்சியாக வருவது வாடிக்கை. ஆனால் இங்கு ஸ்போர்ட்ஸ் சார்ந்த படங்கள் ரொம்ப அரிதாகவே தயாராகி வெளி வருகிறது. அப்படி வராததன் காரணம் குறித்து விசாரித்த போது , ‘விளையாட்டை மையமாக எடுக்கும் கதைக்கான நாயகன் அந்த விளையாட்டில் ஈடுப்பட்டு நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்.. இங்குள்ளோர் அதற்கு தயாராக இல்லை என்பதுதான்’ என்றார்கள். ஆனாலும் பாக்சிங், கபடி, பெண்கள் கிரிக்கெட், கூடைப்பந்து, கால்பந்து என்று சில விளையாட்டுகளை மையமாக வைத்து தமிழ் சினிமாவில் படங்கள் வெளியாகியிருந்தாலும், நம் நேஷனல் கேம் என்று சொல்லப்படும் ஹாக்கி-யை மையமாக ஒரு தமிழ் படம் கூட வரவில்லை என்பது சோகம்தான்.அக்குறையை போக்கும் விதத்தில் விளையாட்டுடன்  அரசியல் மற்றும் நாட்டு நடப்பு செய்திகளுடன் ஒரு முழு பொழுது போக்கு படத்தை கொடுத்துக் கோடையை திருப்திப் படுத்த முயன்றுள்ளார்கள்.

விளையாட்டை மையப்படுத்திய கதைக்களம் என்பதால் அதற்கு என்னவெல்லாம் தேவையோ அத்தனை மசாலாக்களையும் கொஞ்சம் தூக்கலாகவே போட்டு நிரப்பி இருக்கிறார்கள், அதாவது அமைச்சரின் அத்துமீறல், விளையாட்டுத் துறையில் நடக்கும் ஊழல், ஊடக்ப் போக்கு, மீம்ஸ் உலகம் போன்றவைகளை பேச ஒரு விளையாட்டு மைதானத்தை மையப் புள்ளியாக வைத்திருப்பது தனிக் கவனத்தைப் பெறுகிறது.

அதாவது ஒரு நகரில் சகல வசதிகளுடன் இருக்கும் ஹாக்கி மைதானம். அதில் ஏழை, பாழைகள்தான் பயிற்சி பெற்று வருகிறார்கள். அப்படியாப்பட்ட மைதானத்தில் தப்பான ஃபேக்டரி ஒன்றைக் கட்ட நினைக்கும் பன்னாட்டுக் கம்பெனி ஒன்று மத்திய, மாநில அரசியல்வாதிகளுக்கு கோடிக் கணக்கில் பணத்தைக் கொடுத்து சரிக்கட்டி அபகரிக்க முயல்கிறார்கள். அது நடந்ததா? என்பதுதான் படத்தின் முழுக் கதை. அதிலும் நட்பே துணை தலைப்புக்கு முறையான, உண்மையான அர்த்தத்தை சொல்லி படம் முழுக்க நட்புக்குத் தனி மரியாதை காட்டியபடி படத்தை நகர்த்திக் கொண்டு போகிறார் இயக்குநர்

ஹிப் ஆப் ஆதி, தனது முதல் படத்தில் இளம் இசையமைப்பாளராக வந்து ஹிட் அடித்தவர், இதிலும் கிரீடம் தனக்கே வேண்டும் என்று எதிர்பார்க்காமல் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளதே பாராட்டத்தக்கது. மேலும் ஹாக்கி வீரருக்கு தேவையான பயிற்சி எடுத்து உற்சாகமான நடிப்பையும் வெளிப்படுத்தியிருக்கிறார். நாயகி அனகா ஹாக்கி மட்டையை தூக்கிக் கொண்டு, குட்டைப் பாவாடைப் போட்டுக் கொண்டு வருகிறார். போகிறார், சிரிக்கிறார்., கொஞ்சூண்டு கவர்கிறார். அமைச்சராக வரும் இயக்குநர் கரு.பழனியப்பன் வில்லத்தனத்தை டயலாக் மூலம் மட்டுமே காட்டி இருக்கிறார். மற்றபடி யூ டியூப் பிரபலங்கள் பலரை பயன் படுத்தி இருக்கிறார்கள்..

ஆனாலும் விளையாட்டுப் படம் என்பதாலோ என்னவோ இன்டர்வெல் வரையிலான காட்சிகளை விளையாட்டாக எடுத்து கோர்த்திருப்பது போரடிக்கிறது. ஆனால் ஆதியின் பிளாஷ் பேக் விரிவ டைந்து தொடரும் கதை தேவையான ஸ்பீடில் போய் நிறைவான முடிவைத் தருகிறது. அதிலும் படம் முடிந்த பிறகும் கரு . பழனியப்பன் பேசும் வசனங்கள் குறிப்பாக ‘ஓட்டுக்கு துட்டு வாங்கா திங்க’என்ற லேட்டஸ்ட் சப்ஜெக்டை கேட்டு விட்டு தியேட்டரை விட்டு வெளியேறும் ஒவ்வொருக்கும் மனதில் நிற்கும் இந்த நட்பே துணை..

மார்க் 3. 25 / 5