October 17, 2021

இந்திய பொருளாதாரம் :கணிக்கப்பட்டதை விட கம்மியான வீழ்ச்சிதான்!

த்திய புள்ளியியல் அமைச்சரக தரவுகளின் கொரோனா பாதிப்புகளின் விளைவாக நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவு 135 லட்சம் கோடி ரூபாயாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்த உள்நாட்டு உற்பத்தி, 2020-21 நிதியாண்டில் 7.3 சதவீதம் குறைந்துள்ளது என கூறப்பட்டுள்ளது. கடந்த 40 ஆண்டுகளில் இதுதான் மிக அதிக அளவிலான பொருளாதார வீழ்ச்சி என்று கூறப்படாலும்  இம்முறை 8 சதவீதம் வீழ்ச்சி ஏற்படும் என கணிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு பல்வேறு துறைகளில் பலருக்கும் வேலையிழப்பை ஏற்படுத்தியது. சம்பள உயர்வு பாதிப்பு ஏற்பட்டது. சுற்றுலா, ஓட்டல் உள்ளிட்ட பல நிறுவனங்கள் முடங்கிப்போனது. ஒட்டுமொத்த பொருளாதார சுழற்சியும் நின்று போனது. பின்னர் கொரோனா பாதிப்புகள் குறையத் தொடங்கிய பிறகு கட்டுப்பாடுகள் மெல்ல மெல்ல தளர்த்தப்பட்டன. தொழிற்சாலைகள் இயங்கத் தொடங்கின. சொந்த ஊர் சென்ற புலம்பெயர் தொழிலாளர்கள் வேலை செய்து வந்த மாநிலங்களுக்கு திரும்பத் தொடங்கினர். இந்திய பொருளாதாரம் மெல்ல மீளத் தொடங்கிய நிலையில் தற்போது மீண்டும் கொரோனா இரண்டாவது அலை வீசி வருகிறது. இதனால் மீண்டும் ஊரடங்கு, பகுதி நேர ஊரடங்கு என அமல்படுத்தப்பட்டு வருகிறது. பல்வேறு மாநிலங்களிலும் தொழில் நடவடிக்கைகள் முடங்கியுள்ளன. இதனால் மீண்டும் பொருளாதார பாதிப்பு, வேலையிழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தேசிய புள்ளிவிவர அலுவலகம் வெளியிட்ட தற்காலிக தேசிய வருமான மதிப்பீடுகளின்படி, முன்பு பொருளாதாரத்தில் 8 சதவீதம் வீழ்ச்சி ஏற்படும் என கணிக்கப்பட்ட நிலையில் 7.3 சதவீதம் வீழ்ச்சி என்பது ஓரளவு சிறந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவிட்-19 தொற்றுநோய்க்கு முன்பு, 2019-20ம் நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 4 சதவீதமாக ஆக இருந்தது. அதேசமயம் 2020-21ம் நிதியாண்டின் நான்காம் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.6 சதவீத வளர்ச்சியைப் பதிவுசெய்தது. கோவிட் தொற்று காரணமாக இந்த நிதியாண்டின் முதல் பாதியில் நாடு தொழில்நுட்ப மந்தநிலைக்குள் நுழைந்த பின் நேர்மறையான வளர்ச்சியுடன் அமைந்த இரண்டாவது காலாண்டு இதுவாகும்.

அதே சமயம் இந்தியாவின் பொருளாதாரத்தில் ஜி.வி.ஏ எனப்படும் சேர்க்கப்பட்ட மொத்த மதிப்பு (Gross Value Added) கடந்த 2020-21ம் நிதியாண்டில் 6.2 சதவீதமாக ஆக வீழ்ச்சியடைந்தது. முந்தைய நிதியாண்டில் இது 4.1 சதவீதமாக உயர்ந்த நிலையில் தற்போது வீழ்ச்சி அடைந்துள்ளது.

வேளாண்மை, வனவியல் மற்றும் மீன்பிடித்தல் துறையின் மொத்த ஜி.வி.ஏ மதிப்பு 3.6 சதவீதமாக உயர்ந்தது. மின்சாரம், எரிவாயு, நீர் வழங்கல் மற்றும் பிற பயன்பாட்டு சேவைகளுக்கான ஜி.வி.ஏ 1.9 சதவீதம் வரை உயர்ந்தது. ஜி.ஏ.வி வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில் இந்த இரு துறைகள் மட்டுமே வளர்ச்சியை பதிவு செய்துள்ளன.

இதனிடையே வர்த்தகம், ஹோட்டல், போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் ஒளிபரப்பு தொடர்பான சேவைகளின் ஜி.வி.ஏ 18.2 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. அதனைத் தொடர்ந்து கட்டுமானம் (-8.6 சதவீதம்), சுரங்க மற்றும் குவாரி (-8.5சதவீதம்) மற்றும் உற்பத்தி (-7.2 சதவீதம்) வீழ்ச்சி அடைந்துள்ளன.

ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 24.4 சதவீதமாக வீழ்ச்சி அடைந்தது. இரண்டாவது காலாண்டில் 7.4 சதவீதம் வீழ்ச்சி அடைந்தது. பின்னர் செப்டம்பர் முதல் டிசம்பர் வரையிலான நான்காம் காலாண்டில் 0.5 சதவீடம் வளர்ச்சி பெற்றது என தேசிய புள்ளிவிவர அலுவலகத்தின் மதிப்பீடுகள் தெரிவித்துள்ளன. அத்துடன் வேலையிழப்பு வீதம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. புதிய வேலைவாய்ப்புகளும் உருவாகவில்லை. ஏப்ரல் இறுதியில் 8 சதவீதமாக இருந்த வேலையில்லா திண்டாட்டம் மே 31-–ல் இது 12 சதவீதமாக அதிகரித்துள்ளது.இந்த கொரோனா இரண்டாவது அலையால் நாடுமுழுவதும் ஒரு கோடி பேர் வேலையிழந்துள்ளார்கள்.

இது மட்டுமின்றி கோவிட் 19 வைரஸ் தொற்றுநோயால் மற்ற செயல்பாடுகள் பாதிக்கப்பட்டது போல் தரவு சேகரிப்பும் பாதிப்புக்குள்ளானது. எனவே இந்த மதிப்பீடுகள் கூர்மையான திருத்தங்களுக்கு உட்படுத்தப்படலாம் என தேசிய புள்ளிவிவர அலுவலகம் தெரிவித்துள்ளது.