September 25, 2021

மது போதைக்கு எதிரான தேசிய மக்கள் இயக்கம் !

இந்தியாவில் சுமார் 75% ஆண்கள் வாழ்க்கையின் ஏதாவது ஒரு கட்டத்தில் மது அருந்துகின்றனர். இதில் 20-30% பேர் அதற்கு முழு அடிமையாகிறார்கள். குடிப்பழக்கம் பெரும்பாலும் 15-25 வயதில்தான் ஆரம்பிக்கிறது. 50-60% சாலை விபத்துகள் குடிபோதையினால்தான் ஏற்படுகின்றன. மது குடிப்பது முதலில் சாதாரணப் பழக்கமாகத்தான் ஆரம்பிக்கும். ஆரம்பிக்கும்போதே யாரும் முழு பாட்டிலையும் குடிப்பதில்லை, குடிக்கவும் முடியாது. சில மாதங்கள் அல்லது வருடங்களில் மூளையில் ஆல்கஹால் சில ரசாயன மாற்றங்களை ஏற்படுத்துவதன் காரணமாக, சாதாரண போதையைத் தருவதற்குக்கூட அதிக அளவு மது தேவைப்படும். இதனால்தான் ஆரம்பித்துச் சில வருடங்களில் பாட்டில் கணக்கில் குடிக்க ஆரம்பிக்கிறார்கள். ஒரு கட்டத்தில் குடியை விட முடியாத அளவுக்கு மனநோயாளி யாகவே மாறி விடுகிறார்கள்.

anti liquir july 11

இந்நிலையில் தமிழகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய மதுவிலக்கு அரசியல், தற்போது தேசிய அளவில் பரவத் தொடங்கியிருக்கிறது. தமிழகத்தில் நடந்த மதுவுக்கு எதிரான அரசியல் போராட்டங்களை முன்னுதாரண மாகக் கொண்டு ‘மது போதைக்கு எதிரான தேசிய மக்கள் இயக்கம்’ என்ற பெயரில் பஞ்சாப், ஆந்திரம், தெலங்கானா உட்பட 18 மாநிலங் கள் ஒருங்கிணைந்து, அரசியல் ரீதியாக மதுவுக்கு எதிராக போராட தயாராகி வருகின்றன. இந்த இயக்கத்துக்கு பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் வழிகாட்டியாக இருப் பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

‘நசாமுக் பாரத் அண்டோலன்’ என்ற கோஷத்துடன் மது போதைக்கு எதிரான தேசிய மக்கள் இயக்கம் கடந்த ஜூலை 1-ம் தேதி டெல்லியில் உருவாக்கப்பட்டது. அந்த அமைப்பின் முதல் மாநாடு, அன்றைய தினமே டெல்லியில் உள்ள காந்தி அமைதி அறக்கட் டளை அரங்கத்தில் நடந்தது. மாநாட்டில் சிறப்பு விருந்தினராக நிதிஷ்குமார் கலந்துகொண்டார். மாநாட்டின் முதல் நிகழ்வாக, மதுவிலக்கு போராட்டத்தில் தங் களது உயிரை தியாகம் செய்த தமிழகத்தின் சசிபெருமாள், ராஜஸ்தானின் குர்சரண் சாப்ரா ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

ராஜஸ்தான் மாநிலத்தில் மது விலக்கு கோரி கடந்த ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி ஜெய்ப்பூரில் சாகும் வரை உண்ணாவிரதம் தொடங்கினார் ஜனதாதளம் கட்சியின் முன்னாள் எம்எல்ஏவும் காந்தியவாதியுமான குர்சரண் சாப்ரா. 33 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தவர், நவம்பர் 3-ம் தேதி இறந்தார். இதைத் தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலத்திலும் மது விலக்கு தொடர்பான போராட் டங்கள் வலுக்கத் தொடங்கின.

தற்போது உருவாக்கப்பட்டுள்ள மது போதைக்கு எதிரான தேசிய மக்கள் இயக்கத்தில் பிஹார், சத்தீஸ்கர், பஞ்சாப், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், டெல்லி, ஒடிசா, மகாராஷ்டிரம், குஜராத், தமிழகம், புதுச்சேரி, உத்தராகண்ட், ஹரியானா, கர்நாடகம், கேரளம், ஆந்திரம், தெலங்கானா ஆகிய 18 மாநிலங்களில் மதுவுக்கு எதிராக போராடி வரும் சுமார் 300 அமைப்புகள் இணைந்துள்ளன.

மாநாட்டில் பேசிய பல்வேறு மாநிலங்களின் பிரதிநிதிகளும் தமிழகத்தின் மதுவிலக்கு அரசியல் நிலைப்பாட்டை சுட்டிக்காட்டி பேசினர். பஞ்சாப், ஆந்திரம், தெலங்கானா, கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களின் பிரதிநிதிகள் பேசும்போது, ‘‘காலம் காலமாக மதுவுக்கு எதிராக மக்களும் அமைப்புகளும் மட்டுமே போராடி வந்த நிலையில் தமிழகத்தில் அரசியல் கட்சிகளும் மதுவுக்கு எதிரான நிலைப்பாடு எடுத்திருப்பது நல்ல விஷயம். அரசியல் அழுத் தங்கள் மூலம் தமிழக அரசு 500 மதுக்கடைகளை மூடியிருப்பது நமது நாட்டின் பரிபூரண மதுவிலக்குக்கான தொடக்கமாக கருதுகிறோம்’’ என்றனர்.

மாநாட்டில் நிதிஷ்குமார் பேசும் போது, ‘‘பிஹாரில் ஏராளமான பெண்கள் திரண்டு மதுக்கடை களை அடித்து உடைத்தனர். பெண்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து மதுவிலக்கை அமல் படுத்தினேன். மது அருந்துவது அடிப்படை உரிமை கிடையாது என்ற அடிப்படையில் புதிய சட்டத்திருத்தம் கொண்டு வர இருக் கிறோம். அதேபோல பிற மாநிலங் களிலும் பெண்களும் இளைஞர் களும் மதுக்கடைகளுக்கு எதிராக போராடி பூட்டுப்போட வேண்டும். அவர்களுக்கு பக்க துணையாக இருப்பேன். பிஹாரில் மதுவிலக்கு கொண்டுவந்ததால் இதுவரை 14 சதவீத குற்றங்கள் குறைந் துள்ளன. சாலை விபத்துகள் 36 சதவீதமும் பாலியல் கொடுமைகள் 22 சதவீதமும் குறைந்துள்ளன. தற்போது உருவாக்கப்பட்டுள்ள இந்த அமைப் புக்கு என் வழிகாட்டுதலும் ஆதரவும் எப்போதும் உண்டு. இந்த அமைப்புகள் அவரவர் மாநிலங்களில் மதுவிலக்கு கோரி தொடர் போராட்டங்களை நடத்த வேண்டும்” என்றார்.

இந்த இயக்கத்தின் அடுத்தகட்ட ஆலோசனைக் கூட்டம் ஜூலை 31-ம் தேதி மத்தியப்பிரதேசம் பத்வானி மாவட்டத்தில் நடக்கிறது. அதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 2 முதல் 9-ம் தேதி வரை மும்பையில் மதுவிலக்கு நடை பயணம் தொடங்குகிறது. பஞ்சாப் மாநிலத்தில் ஆகஸ்ட் முதல் வாரத்தில் மதுவிலக்கு நடை பயணம் மற்றும் பிரச்சாரம் நடக்கவிருக்கிறது. ஒடிசாவில் செப்டம்பர் இறுதியில் மதுவிலக்கு மாநாடு தொடங்குகிறது. மத்தியப் பிரதேசத்தில் செப்டம்பரில் 15 நாள் மதுஒழிப்பு நடைபயணம் நடக்கவிருக்கிறது. சென்னையில் ஜூலை 29 அல்லது 30-ம் தேதி மதுவிலக்கு கோரி போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

நிகழ்ச்சியில் தமிழகம் சார்பில் மது ஒழிப்பு போராளிகள் ஆனந்தி அம்மாள், அருள்தாஸ், சிவக்குமார், சுரேஷ்பாபு, சிவாஜி முத்துகுமார், கவிஞர் ராமலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மது போதைக்கு எதிரான தேசிய மக்கள் இயக்கத்தின் தமிழக ஒருங்கிணைப்பாளரான அருள் தாஸ்,  கூறும்போது, “ஜூலை 31-ம் தேதி சேலத்தில் தியாகி சசிபெருமாள் நினைவு நாளில் மது ஒழிப்பு மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளோம். இதற்காக நிதிஷ்குமாருக்கு அழைப்பு விடுத்துள்ளோம்’’ என்றார்.