தேசிய பட்டாம்பூச்சிகள் தினமின்று 🦋

தேசிய பட்டாம்பூச்சிகள் தினமின்று 🦋

பட்டாம்பூச்சிகள் என்றாலே அழகுதான்.. கவிஞர்களின் வரிகளில் இடம் பிடிக்கும் இவை ராயல்ட்டி கேட்டிருந்தால் பணக்கார வரிசையில் முதலிடம் பிடித்திருக்குமோ என்னவோ.. வானவில்லின் வர்ணத்தை தன் உடலில் சுமக்கும் பட்டாம்பூச்சிகள், மலர்களுக்கு நறுமணம் கொடுத்து, தேனை திரும்ப பெற்று வாழ்கின்றன. இயற்கையின் அழகியலை இறக்கையில் தாங்கும் பட்டாம்பூச்சிகள் தினம் இன்று.

உலகில் மனிதர்கள் மட்டும் அல்ல, விலங்குகள், பறவைகள், பூச்சிகள், புழுக்கள் என பல்லாயிரக் கணக்கான உயிரிணங்கள் உள்ளன. இவற்றில் பூச்சி இனத்தை சேர்ந்த பட்டாம் பூச்சி உலகில் இன்றியமையாத ஒன்று. அழகின் மறு உருவம் பட்டாம்பூச்சி என்றால் அது மிகையாகாது.

சிட்டென பறந்து சட்டென மறையும் இவை பார்ப்போரை பரவசத்தில் ஆழ்த்துகின்றன. முட்டை யில் இருந்து, குடம்பி நிலையில் புழுவாக உறுமாறி, பின்னர் கூட்டுப்புழு எனப்படும் உறங்கு நிலைக்குப் சென்று, அழகான பட்டாம்பூச்சியாய் உருமாற்றம் பெறும் நிகழ்வு வியப்பூட்டும் ஒன்றாகவே உள்ளது.

இவை இனப்பெருக்கம் செய்வது வினோதத்திலும் வினோதம். பெண் பட்டாம்பூச்சிக்கு என்று ஒரு பிரத்தியேக மணம் உண்டு. அதை நுகரும் ஆண் பட்டாம்பூச்சி, பெண் பட்டாம்பூச்சியை தேடி வருகிறது. இனப்பெருக்கம் நடைபெற்ற உடனே ஆண் பட்டாம்பூச்சி இறந்துவிடும். பெண் பட்டாம்பூச்சியோ, தன் புழுவுக்கு உணவு கிடைக்க உகந்தவாறு உள்ள செடியை தேடிச் சென்று முட்டை இடுகிறது. பெரும்பாலும் அந்த செடி விஷத்தன்மை உடையதாக இருக்கும். பட்டாம் பூச்சியாய் உறுமாற்றம் பெற்ற பின் உடலில் விஷத்தன்மை இருப்பதால் பறவைகள் பட்டாம் பூச்சியை கொத்தி தின்ன முன்வராது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

உலகில் 20 ஆயிரத்திரத்திற்கும் மேற்பட்ட வகைகளைக் கொண்ட பட்டாம்பூச்சிகள் உள்ள நிலையில், இவற்றின் ஆயுட்காலம் ஒரு மாதம் மட்டுமே. அரை அங்குலத்தில் இருந்து 11 அங்குலம் வரையிலான பட்டாம்பூச்சிகள் உள்ளன. இதில் மிகப்பெரிய பட்டாம்பூச்சியான குயின் அலெக்ஸாண்டிரா, பப்புவா நியூகினி நாட்டில் காணப்படுகிறது.

இந்த பட்டாம்பூச்சி தன் இறக்கைகளை விரித்திருக்கும் பொழுது 28 செ.மீ நீளம் இருக்கும். இதே போல், மிகவும் சிறியதான பட்டாம்பூச்சி அமெரிக்காவில் காணப்படுகின்றன. மேற்குக் குட்டிநீலம் எனப்படும் இந்த பட்டாம்பூச்சி இறக்கையை விரித்திருக்கும் பொழுது 1 செ.மீ தான் இருக்கும் என கூறப்படுகிறது. சில பட்டாம்பூச்சிகள் சுமார் 3 ஆயிரம் கிலோ மீட்டர் வரை பயணித்து செல்லக்கூடிய ஆற்றல் படைத்தவையாக உள்ளன.

இப்படி பல சிறப்புக்களை தன் சிறு உடலில் உள்ளடக்கியுள்ள பட்டாம்பூச்சிகள் சமூகம் மற்றும் சுற்று சூழலில் ஏற்பட்டுள்ள மாசு காரணமாக அழிந்து வருகின்ற. அவற்றை காக்க வேண்டியது இயற்கையின் ஆதரவோடு வாழும் ஒவ்வொரு மனிதனின் தலையாய கடமை. தேசிய பட்டாம் பூச்சிகள் தினமான இன்று இதை நாம் நினைவில் கொள்வோம்.

error: Content is protected !!