June 23, 2021

நாத்திகம் ராமசாமி!

1932ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வட்டத்தைச் சேர்ந்த மேல்ஆழ்வார் தோப்பில் பிச்சைக்கனி – பூவம்மாள் தம்பதியின் முதல் மகனாகப் பிறந்தவர் இராமசாமி. 17 வயதில் சென்னைக்கு வந்த இராமசாமி பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அவரது இயக்கத்தில் சேர்ந்தார். பெரியார் நடத்திய பல போராட்டங்களிலும் பங்கு பெற்று சிறை சென்றிருக்கிறார்.

nathigam ram sep 24

கடலூர் மாவட்டத்தின் ஒரு கிராமத்தில் ஒரு தாழ்த்தப்பட்டவரின் இறுதி ஊர்வலம் ஆதிக்கசாதியினரின் தெரு வழியாக கொண்டு செல்லக்கூடாது என்று சாதி வெறியர்கள் தடுத்த போது அந்த அநீதிக்கு எதிராக களத்தில் நின்று போராடி வென்று காட்டினார். இதை பெரியார் மனதாராப் பாராட்டினார்.

இராமாயணத்தின் பாத்திரங்களை அம்பலப்படுத்தி எழுதியதற்காக அன்றைய காங்கிரசு அரசால் குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் நீதிமன்றம் இராமசாமிக்கு 500 ரூபாய் அபராதம் விதித்தது. இதை பெரியாரே நீதிமன்றத்தில் கட்டினார்.

1958 செப்டம்பர் 18ஆம் தேதியன்று பெரியாரின் கொள்கைகளை பரப்புவதற்காக நாத்திகம் பத்திரிகையை துவங்கினார். இவ்விதழ் அவர் சாகும் வரை கடந்த 51 ஆண்டுகளாக வெளிவந்திருக்கிறது. ஆரம்பத்தில் தினசரியாக இருந்து, பின்னர் பத்திரிகை வார இதழாக தொடர்ந்து வெளிவந்திருக்கிறது. எனவே நாத்திகம் இராமசாமி என்பது தன் செயல்பாட்டால் அவர் ஈட்டிக்கொண்ட காரணப்பெயர்.

பார்ப்பனரல்லாதார் ஆட்சியை ஆதரிப்பது என்ற பெரியாரின் அணுகுமுறைக்கேற்ப காமராஜர் ஆட்சியை ஆதரித்தார். அதன் பின்னர் இதே பார்வையின் அடிப்படியில் 70களின் துவக்கத்தில் இருந்த கருணாநிதியின் ஆட்சியையும் ஆதரித்தார்.

பார்ப்பனரல்லாதார் ஆட்சி என்பதை முதன்மைப்படுத்திப் பார்க்கும் பலவீனம் காரணமாக காங்கிரஸ் என்ற மக்கள் விரோத இயக்கத்தின் ஒரு தூண்தான் காமராசர் என்பதை உணரமுடியாத விமரிசனமற்ற பார்வைக்கு இவர் பலியாகி இருந்தார்.

கருணாநிதி ஆட்சியில் பாராட்டத்தக்கவை என அவர் கருதியவற்றை தொடர்ந்து பாராட்டியிருக்கிறார். கருணாநிதிக்கெதிராக பார்ப்பன ஊடகங்கள் சாதிய வன்மத்துடன் நஞ்சை கக்கியபோதெல்லாம் அதை அம்பலப்படுத்தி சாடியிருக்கிறார். அதே நேரத்தில் அதிகார நாற்காலி பதவி சுகம், சொத்து ஆகியவற்றுக்காக கருணாநிதி மேற்கொள்ளும் சமரசங்களையும், அருவெறுக்கத்தக்க குடும்ப ஆட்சியையும் கடுமையாக விமரிசிப்பதற்கும் அவர் தவறியதில்லை.

பா.ஜ.க வுடன் கூட்டு சேர்ந்தது, ஈழப்போராட்டத்திற்கு துரோகம் இழைத்தது முதலிய பிரச்சினைகளை வைத்து இராமசாமி தன் பத்திரிகையில் கருணாநிதியை கடுமையாக விமரிசனம் செய்தார். கருணாநிதியின் குடும்பத்தினர் நடத்தும் சன் தொலைக்காட்சியின் ஆபாச மற்றும் மூடநம்பிக்கை பரப்பும் நிகழ்ச்சிகளால் தமிழ்ச்சமூகம் நாசமாக்கப்படுவதை கண்டு எந்த அளவிற்கு அவர் குமுறியிருக்கிறார் என்பதை அவரது எழுத்தின் கடுமையிலிருந்து புரிந்து கொள்ளமுடியும்.

பெரியாரின் மறைவுக்குப்பிறகு வீரமணி – மணியம்மை கும்பல் திராவிடர் கழகத்தை கைப்பற்றியதையும், இக் கும்பலின் முறைகேடுகளையும் ஆதாரப்பூர்வமாக தனது இதழில் இராமசாமி அம்பலப்படுத்தினார். வீரமணி பார்ப்பன ஜெயாவின் வீட்டுப்பூசாரியானதையும், சுயமரியாதை இயக்கம் சீட்டுக் கம்பெனியாக மாற்றப்பட்டுவிட்டதையும் பெரியாரின் எழுத்துக்கள் தனிச்சொத்துடைமையால் முடக்கப்பட்டதையும் ஒரு பெரியார் தொண்டனுக்கே உரிய கோபத்தோடு தொடர்ந்து அம்பலப்படுத்தி வந்தார்.

அவருடைய எழுத்து நடை அலாதியானது. அலங்காரங்களற்ற உண்மையான கோபம், மேட்டிமைத்தனங்களற்ற ஒரு சாதாரண மனிதனின் பார்வை, அநீதியால் பாதிக்கப்பட்ட மனிதனின் இயல்பான ஆவேசம், அந்த கோபத்துக்கு சுவை கூட்டும் எள்ளல் இவை அனைத்தும் கலந்த, ஒரு பெரியார் தொண்டனுக்கே உரிய மொழி நடையை அவர் பெற்றிருந்தார். வெறும் எட்டு பக்கங்களே கொண்ட, லேஅவுட், அழகியல் போன்ற ஏதுமின்றி எழுத்துக்களாலும் நிறைந்த அந்த பத்திரிகையை, படி படி என்று நம்மை தூண்டியது அவரது எழுத்து மட்டும்தான் என்றால் அது மிகையல்ல.

51 வருடங்களாக நாத்திகம் பத்திரிகையை அவர் பல நட்டங்களுக்கிடையில் விடாது நடத்தி வந்தார். மூடநம்பிக்கை எதிர்ப்பு, பார்ப்பனிய எதிர்ப்பு, அனைத்து மதங்களையும் விடாது அம்பலப்படுத்துதல், சினிமா, டி.வி, பண்பாட்டு சீரழிவுகளை சாடுதல் போன்றவற்றை உள்ளடக்கிய அவரது இந்த எழுத்துப்பணி இறக்கும் வரை வரை இடைவெளியில்லாமல் நிறைவேறியது.

நாத்திகச் சிங்கம் பகத்சிங், ஆர்.எஸ்.எஸ் இந்து பாசிசம், சங்கரமடம் பற்றிய உண்மைகள், மடாதிபதிலீலை, இயேசு அழைக்கிறார் டி.ஜி.எஸ் தினகரன் மோசடிகள் முதலான அவருடைய பிரபலமான நூல்கள் மலிவு விலையில் மக்களிடையில் கொண்டு செல்லப்பட்டன. இது போக பெரியாரிய நூல்கள் பலவற்றையும் வாங்கி தனது பத்திரிகை அலுவலகத்தில் வைத்து விற்பனை செய்தார்.

பார்ப்பனிய எதிர்ப்பு நடவடிக்கைகளில் ம.க.இ.க முதன்மைப்பாத்திரம் ஆற்றிய போதும் அதை அங்கீகரிக்கும் மனோபாவம் பல பெரியார் தொண்டர்களிடம் இருப்பதில்லை. இதிலும் நாத்திகம் இராமசாமி ஒரு விதிவிலக்கு. புதிய கலாச்சாரம் மற்றும் ம.க.இ.கவின் பிற வெளியீடுகளை பார்த்த உடன் அவரே அலுவலகத்தை தொடர்புகொள்வார். ஒவ்வொரு வெளியீட்டிலும் 400, 500 பிரதிகள் கேட்டு வாங்கிக்கொள்வார். அதற்குரிய தொகையை பொறுப்புடன் உடனே செலுத்துவார். பல வெளியீடுகளை இலவசமாக தனது நண்பர்களுக்கும், அறிமுகம் ஆனோருக்கும் அவரே அனுப்பி வைப்பார்.

இருந்தாலும் அவர் இதே செப். 24ம் தேதி (2009) இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன் அவர் எழுதிய கட்டுரை ஒன்று நினைவுக்கு வருகிறது. தனது சொந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் ஒரு கோவிலைக் கட்டி அதன் குடமுழுக்கிற்கு பார்ப்பானை தேடிக்கொண்டிருந்த சம்பவத்தை குறிப்பிட்டு, “இத்தனை நாள் பெரியாரின் கொள்கைகளை நான் பிரச்சாரம் செய்திருந்த போதும் என் சொந்த ஊரில் என் சொந்தக்காரர்களையேகூட பார்ப்பனியத்தின் பிடியிலிருந்து என்னால் மீட்க முடியவில்லையே” என்று அக்கட்டுரையில் மனம் வெதும்பியிருந்தார்.