September 29, 2021

நான் தனிப்பறவை! – தினகரன் அணியிலிருந்த விலகிய நாஞ்சில் சம்பத் பேட்டி!

மேடைப்பேச்சாளர், இலக்கியவாதி, பட்டிமன்ற பேச்சாளர் என பன்முகத்தன்மை கொண்டவர் நாஞ்சில் சம்பத். தனது அதிரடி கருத்துகளால் பெயர்பெற்ற நாஞ்சில் சம்பத் வைகோவின் கட்சியில் முக்கிய பொறுப்பிலிருந்த நிலையில் மனகசப்பு ஏற்ப்பட்டு மதிமுக-விலிருந்து விலகி அதிமுக-வில் இணைந்தார். உடனடியாக அக்கட்சியின் கொள்கைபரப்பு துணைச்செயலாளர் பொறுப்பை கொடுத்து புது இன்னோவா கார் ஒன்றையும் பரிசளித்தார் ஜெயலலிதா. அதுமுதல் இன்னோவா சம்பத் என்று நெட்டிசன்களால் கிண்டலடிக்கப்பட்டார்.

பின்னர் அதிமுக தேர்தல் கூட்டணி குறித்து அவர் தாமாக கருத்து தெரிவித்ததால் கொ.ப.செ. துணைச்செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. ஜெயலலிதா மறைவுக்கு பின் சசிகலாவை ஏற்க மனமில்லை என்று இன்னோவா காரை திருப்பி கொடுத்தார். ஆனால் சசிகலா அழைத்து பேசி கட்சிப்பணியாற்ற கேட்டுக்கொண்டு இன்னோவா கார் சாவியை மீண்டும் சம்பத்திடம் கொடுத்தார். இதனால் நெகிழ்ந்து போன சம்பத் பின்னர் சசிகலா அணியின் பிரச்சார பீரங்கியானார். வாதம் வைப்பதில் தனித்துவமிக்கவர், வித்யாசமாக பேசக்கூடியவர் சம்பத். தினகரன் அதிமுகவிலிருந்து விலகிய பின்னர் தினகரன் அணியில் நீடித்தார். ஆளுங்கட்சி மீது கடுமையான விமர்சனம் வைத்ததால் அவர் மீது வழக்கு பாய்ந்தது.

ஒரு கட்டத்தில் விரக்தியுற்ற அவர் ஒதுங்கி இருக்க ஆரம்பித்தார். அணியிலிருந்து ஒதுங்க ஆரம்பித்தார். அதிலும் ஆர்.கே.நகர் தேர்தலில் தினகரன் வெற்றிபெற்ற பின்னர், பல மாவட்டங்களில் பொதுக்கூட்டங்கள் நடத்தினார். அந்தக் கூட்டங்களில் நாஞ்சில் சம்பத் கலந்துகொள்ளாமல் இருந்துவந்தார். இந்த நிலையில், தினகரன் அணியிலிருந்து நாஞ்சில் சம்பத் வெளியேற இருப்பதாக கடந்த சில நாள்களாகத் தகவல் பரவியது.

இதற்கிடையில், தினகரன் அணியைச் சேர்ந்த புகழேந்தி உள்ளிட்டோர், கன்னியாகுமரி மாவட்டம் மணக்கா விளையில் உள்ள நாஞ்சில் சம்பத் வீட்டுக்கு நேற்று வந்தனர். அவருடன் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு, நாஞ்சில் சம்பத் தினகரன் அணியில் தொடருவார் எனத் தெரிவித்தார்.

இந்த நிலையில், இன்று காலை அதே  மணக்காவிளையில் தனது வீட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த நாஞ்சில் சம்பத், தினகரனின் செயல்பாடுகள் திராவிடக் கொள்கைக்கு எதிராக இருப்பதாகவும், அதனால் தினகரன் அணி யிலிருந்து விலகுவதாகவும் தெரிவித்தார். இனி, இலக்கிய மேடைகளில் பேச இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், ‘காலம் காலமாக எந்த கொள்கையை பேசி வந்தேனோ, காலங்காலமாக எந்த கொள்கையை எங்கெல்லாம் கொண்டுச்சென்றேனோ அந்த கொள்கையை ஒரு பகலில் படுகொலை செய்துவிட்டார் தினகரன். இன உணர்வு கொள்கையை கொட்டிக்கவிழ்த்து விட்டார் தினகரன்.

அண்ணாவையும், திராவிடத்தையும் புறக்கணித்த இந்த பெயரில் எனக்கு உடன்பாடு இல்லை, டிடிவி அறிவித்த கட்சி பெயரில் அண்ணாவும், திராவிடமும் இல்லை இனிமேல் அரசியல் என்ற சிமிழில் அடைப்பட்டு கிடக்க மாட்டேன். திராவிடம் இல்லாத தமிழகம் என்ற திட்டத்துடன் இயங்கும் வகுப்புவாத சக்திகளுக்கு தினகரன் அடிபணிந்துவிட்டார் என்ற சந்தேகம் இருக்கிறது. இனி எந்த கட்சிக் கொடியையும் தூக்கி சுமக்க மாட்டேன். எந்த தலைவனையும் இனி ஏற்றுக்கொள்ள மாட்டேன். இனி தனிப்பறவையாக பறப்பேன்.

என்னை யாரும் சமாதானம் படுத்த முடியாது. என்னை யாரும் நெருங்க முடியாது. கரையான்கள் நெருப்பை அரிக்க முடியாது. என் மூளையைச் சலவை செய்ய எந்த முட்டாளும் முயல வேண்டாம்..இளைஞர்களுக்காக தமிழ் பயிற்சி பட்டறை துவங்க போகிறேன்’ என்றார்.

இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய தினகரன், “அண்ணாவையும் திராவிடத்தையும் நாங்கள் அவமதித்தது மாதிரி பேசியுள்ளார் நாஞ்சில் சம்பத். நான் கட்சியைத் தொடங்கியபோதே தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர் ஆகியோரின் முழு உருவமாக உள்ள அம்மாவின் பெயரிலே கட்சியைத் துவங்கியுள்ளோம் என்று கூறினேன் என்று குறிப்பிட்ட அவர், நான் பச்சைப் படுகொலை செய்திருக்கிறேன் என்று கூறியுள்ளார். ஏதோ அம்மாவுக்கும் திராவிடத்துக்கும் சம்பந்தம் இல்லாதது போல பேசியுள்ளார். நாஞ்சில் சம்பத் அம்மாவை அவமதிப்பதுபோல பேசியுள்ளதுதான் வருத்தமளிக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து, “இது ஒரு இடைக்கால அமைப்பு மட்டுமே. நான் தேர்தல் ஆணையத்தில் கட்சிக்குப் பெயரைக் கொடுக்கும்போது திராவிடம் என்ற பெயரில்தான் கேட்டேன். இது அவருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் வசதியாக மறைத்துக்கொள்கிறார். விண்ணப்பங்களின் பதவியில் காலதாமதம் ஏற்பட்டதால் பெயரை உடனே அறிவித்துள்ளோம். அண்ணா திராவிடத்தை புறந்தள்ளிவிட்டதாகக் கூறுவது அம்மாவை அவமதிப்பது போன்றதாகும். இங்கிருந்து செல்வதற்காக நாஞ்சில் சம்பத் காரணம் தேடிக்கொண்டிருந்தார். தற்போது கிளம்பிவிட்டார்” என்றும் விளக்கம் அளித்துள்ளார்