December 2, 2021

நமோ டிவி புதிய இந்தி சேனலா? நஹி..நஹி.. அது சும்மா சுஜூபி!- டாடா ஸ்கை மழுப்பல்!

கடந்த ஒரு வார முன்னிலை செய்திகளில் இடம் பிடித்த நமோ டிவி  ஒன்றும் புதிய இந்தி செய்தி சேனல் கிடையாது. வெறும் சிறப்பு சேவைதான். அதில் வரும் தகவல்கள் பாஜகவிடம் இருந்து வருவதாக டாடா ஸ்கை நிறுவனம் ட்விட்டரில் தெரிவித்து பிரச்னையை திசை திருப்பி உள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி அதிரடியாக கடந்த மார்ச் 31ம் தேதி தன் ட்விட்டர் பக்கத்தில் நமோ டிவி என்றொரு புதிய டி வி சேனலை தொடக்கி வைத்தார். இந்த சேனலில் பிரதமர் மோடியின் படம் லோகோவாக வைக்கப்பட்டுள்ளது. அதில் தேர்தல் பேரணிகளில் பிரதமர் மோடி வழங்கிய உரைகள் ஒளிப்பரப்பட்டு வருகிறது. அதே சமயம் இந்த நமோ டிவி சேனல் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்திடம் இருந்து முன் அனுமதி பெறாமல் துவங்கப்பட்டுள்ளது.

ஆனாலும் அரசு டிவி சேனலாக இது செயல்பட்டு வருகிறது. இது தேர்தல் விதிமுறைகளுக்கு எதிரானது என காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் குற்றம்சாட்டின. இது தொடர்பாக இரு கட்சிகளும் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தன. அதை தொடர்ந்து நமோ டிவி குறித்து விளக்கம் அளிக்க கூறி தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்திற்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.

அதற்கு பதிலளித்த தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் நமோ டிவி சேனல் ஒரு விளம்பர சேனல். அதற்கு முன் அனுமதி தேவையில்லை. சில டிடிஎச் சேனல்களில் பாஜக அளித்த கட்டணத்தின் பேரில் ஒளிப்பரப்பாகி வருகிறது என தெரிவித்தது.

இதனிடையே நமோ டிவி சேனல் குறித்து ட்விட்டரில் செய்தி வெளியிட்ட டாடா ஸ்கை டிடிஎச் சேவை நிறுவனம் ‘‘நமோ டிவி சேனல் ஒரு இந்தி செய்தி சேனல். தேசிய அரசியல் பற்றிய செய்திகளை வெளியிட்டு வருகிறது’’ என தெரிவித்தது.

ஆனால், திடீரென்று டாடா ஸ்கை நிறுவனம் தான் முன்பு கூறியதை மாற்றி தெரிவித்து உள்ளது.டாடா ஸ்கை நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் இன்று ‘‘நமோ டீவி சேனல் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வழங்கப்படும் ஒரு சிறப்பு சேவை. அதில் உள்ள செய்திகள் பாஜகவிடம் இருந்து வருகின்றது’’ என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.