விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு 1.30 கோடி ரூபாய் இழப்பீடு!
இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் சில முக்கிய ரகசியங்களை, வெளிநாடுகளுக்கு விற்றதாக தவறாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு (78) ரூ. 1.30 கோடி இழப்பீட்டை கேரள அரசு வழங்கியது.
இஸ்ரோ எனப்படும், இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில், நம்பி நாராயணன், விஞ்ஞானியாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த 1994ம் ஆண்டு இஸ்ரோவின் சில முக்கிய ரகசியங்களை, வெளிநாடுகளுக்கு விற்றதாகவும், வேவு பார்த்ததாகவும் நம்பி நாராயணன் குற்றம்சாட்டப்பட்டு கேரள போலீசாரால் கைது செய்யப்பட்டார். இரண்டு மாதங்கள், சிறையில் இருந்த நம்பி நாராயணன் பின்னர் விடுவிக்கப்பட்டார். இதையடுத்து விஞ்ஞானி நம்பி நாராயணன் இஸ்ரோவிலிருந்து நீக்கப்பட்டார்.
பின்பு சி.பி.ஐ. நடத்திய விசாரணையில், நம்பி நாராயணன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் பொய்யானவை என தெரியவந்தது. அதைத் தொடர்ந்து தன்னை தவறாக கைது செய்து துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதற்காக நஷ்ட ஈடு கோரி நம்பி நாராயணன் வழக்கு தொடர்ந்தார். அவருக்கு ரூ.50 லட்சம் வழங்க கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, அவருக்கு ரூ.50 லட்சத்தை கேரள அரசு வழங்கியது. அதற்கடுத்து மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டதன் பேரில் 10 லட்சம் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க உத்தரவிடக்கோரி, திருவனந்தபுரம் சார்பு நீதி மன்றத்தில் நம்பி நாராயணன் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை சுமுகமாக முடிக்க, கேரள அரசு முன்னாள் தலைமைச் செயலாளர் ஜெயக்குமார் தலைமையிலான குழுவை அமைத்தது. அந்த குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில், விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு 1.30 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கி, வழக்கை, சுமுகமாக முடித்துக் கொள்ள, கேரள அரசு முடிவு செய்தது. அதைத் தொடர்ந்து கேரள அரசு ரூ.1.30 கோடி இழப்பீடு தொகையை நம்பி நாரயணனுக்கு நேற்று வழங்கியது.