September 18, 2021

நாகேஷ் – நினைவுக் குறிப்புகள்!

தமிழ் திரைஉலக நகைச்சுவைக் காட்சிகளில் தனி முத்திரை பதித்தவர் நடிகர் நாகேஷ் (76). கர்நாடக மாநிலத்தில் பிறந்தவர். சிறுவயதில் தாராபுரத்தில் வசித்தார். இயற்பெயர் குண்டுராவ். சிறு வயதில் நாடகத்தின் மீது அதிகம் ஆர்வம் கொண்டிருந்தார். ஏராளமான நாடகங்களில் நடித்தவர். கடந்த 1956ம் ஆண்டு தமிழ் சினிமாவில் நடிப்பதற்காக சென்னைக்கு வந்தார். தொடர்ந்து இரண்டு வருடங்களுக்கு மேலாக வாய்ப்பு கிடைக்காமல் இருந்தார். 1958ம் ஆண்டு, முதல் முதலாக சினிமாவில் கால் பதித்தார். அப்போதிருந்து அவரது வெற்றிப்பாதை துவங்கியது. இவர் நடிக்காத படமே இல்லை என்ற அளவுக்கு, எல்லா கதாநாயகர்களுடனும் நடித்தார்.”நான்’ என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற “அம்மனோ சாமியோ’ என்ற பாடல், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அவர் நடித்த ஆயிரத்தில் ஒருவன், மேஜர் சந்திரகாந்த், நீர்குமிழி, சர்வர் சுந்தரம், எதிர்நீச்சல், காதலிக்க நேரமில்லை, திருவிளையாடல் ஆகியவை மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த திரைப்படங்கள்.
jan 31 - nagesh-art
ஒரே நாளில் ஐந்து படங்களின் ஷூட்டிங்கில் பங்கேற்கும் அளவு, “பிசி’யாக இருந்தவர். நகைச்சுவை காட்சி என்றாலே, நாகேஷ் என்ற அளவுக்கு மக்கள் மனதில் இடம் பிடித்தார். 1974ம் ஆண்டு கலைமாமணி விருது வழங்கப்பட்டது. “நம்மவர்’ படத்தில் நடித்ததற்காக தமிழக அரசு இவருக்கு, சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருது வழங்கியது. நீர்க்குமிழி, எதிர்நீச்சல், சர்வர் சுந்தரம் உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாகவே வாழ்ந்துள்ளார். இவரது மனைவி ரெஜினா, இவரது நடிப்புக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தவர். 10 வருடங்களுக்கு முன், உடல்நிலை காரணமாக இறந்துவிட்டார். இவருக்கு ஆனந்த் பாபு (43), ரமேஷ் பாபு (40), ராஜேஷ்பாபு (37) என மூன்று மகன்கள் உள்ளனர். ஆனந்த் பாபு மட்டும் சினிமாத் துறைக்கு வந்தார். நாகேஷுக்கு நான்கு பேரன் மற்றும் மூன்று பேத்திகள் உள்ளனர்.

நகைச்சுவை நாயகன் நாகேஷ்!: தமிழ் சினிமாவில், ரசிகர்களை சிரிக்க வைத்த நகைச்சுவை மன்னன் நாகேஷ், இன்று அவர்களை கண்ணீர் விட வைத்து இவ்வுலகை விட்டு மறைந்துவிட்டார்.நாகேஷ் போன்ற நடிகரையோ, அவருக்கு இணையான ஒரு நடிகரையோ இனி தமிழ் சினிமாவில் பார்ப்பது மிக அரிது. கலை பொக்கிஷமாக விளங்கியவர். எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல், விஜய் என்று அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்தார்.கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இவரது இயற்பெயர் குண்டுராவ். கடந்த 1933ம் ஆண்டு செப்., 27ம் தேதி கிருஷ்ணராவ் மற்றும் ருக்மணி அம்மாளுக்கு மகனாக பிறந்தார். தமிழகத்துக்கு வந்த இவர்கள் தாராபுரத்தில் தங்கியிருந்தனர்.

இளம்வயதிலேயே வீட்டை விட்டு வெளியேறிய நாகேஷ், ரயில்வேயில் வேலைக்கு சேர்ந்தார். சென்னை மேற்கு மாம்பலம் பகுதியில், ஒரு சிறிய அறையில் கவிஞர் வாலி, நடிகர் ஸ்ரீகாந்த் ஆகியோருடன் நாகேஷ் தங்கியிருந்தார். ஒருமுறை “கம்ப ராமாயணம்’ நாடகத்தை பார்த்த நாகேஷ், தன்னாலும் சிறப்பாக நடிக்க முடியும் என நினைத்தார். தன்னையும் சேர்த்துக் கொள்ளும்படி நாடகம் நடத்துபவர்களிடம் போராடி முதல் வாய்ப்பை பெற்றார். ரயில்வேயில் பணிபுரிந்து கொண்டிருந்த நாகேஷுக்கு முதலில் நாடகத்தில் கிடைத்தது “வயிற்று வலி நோயாளி’ வேடம். அந்த நாடகத்தில் நாகேஷ் சில நிமிடங்களே மேடையில் தோன்றுவார். ஆனால், அவர் இதை நன்றாக பயன்படுத்திக் கொண்டார். “டாக்டர்…’ என அலறியபடி மேடையில் நுழையும் நாகேஷ், நிஜமாகவே வயிற்று வலியால் துடிப்பது போல உடலை வளைத்து, நெளித்து, கைகளால் வயிற்றை பிடித்துக் கொண்டே சிறப்பாக நடித்தார். இதை சற்றும் எதிர்பார்க்காத பார்வையாளர்களுக்கு ஆச்சரியம். அவர்களின் கைதட்டலால் அரங்கமே அதிர்ந்தது. அன்றைக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆரும், நாகேஷின் நடிப்பை ரசித்தார். நாடகம் முடிந்த பின், மேடை ஏறிய எம்.ஜி.ஆர்., “நாடகம் நன்றாக இருந்தது. ஒரே ஒரு சீனில் வந்தாலும் அபாரமாய் நடித்து, அனைவரையும் கவர்ந்து விட்டார் ஒருவர். தீக்குச்சி போன்ற ஒல்லியான உருவில் வயிற்று வலிக்காரராக வந்தாரே, அவரைத் தான் சொல்கிறேன். நாகேஸ்வரன் என்ற பெயர் கொண்ட அவருக்கு நடிப்புக்கான முதல் பரிசை கொடுக்கிறேன்’ என முதல் பரிசுக்குரிய கோப்பையை நாகேஷிடம் வழங்கினார்.”மேக்அப்’ போட்டு மேடையேறிய முதல் நாளிலேயே நாகேஷுக்கு கைதட்டலும், பரிசும், பாராட்டும் கிடைத்தது. அதற்கு முன்பு நாகேஷ் எம்.ஜி.ஆரை., பார்த்ததில்லை.

தயாரிப்பாளர் பாலாஜி மூலமாக இவருக்கு சினிமா வாய்ப்பும் கிடைத்தது. “தாமரைக்குளம்’ இவரது முதல் படம். அதன் பின், ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து விட்டார்.”திருவிளையாடல்’ படத்தில் ஏழ்மையில் வாடும் புலவர் தருமியாக நாகேஷ் நடித்தது, எல்லார் மனதிலும் நீங்கா இடம் பெற்றுவிட்டது. “காதலிக்க நேரமில்லை’ படத்தில் பாலையாவிடம் நாகேஷ் கதை சொல்லும் காட்சி, ரசிகர்களின் வயிற்றை இன்றும் புண்ணாக்கும். நாகேஷின் திறமையை நன்கு பயன்படுத்திக்கொண்ட பெருமை, இயக்குனர்கள் ஸ்ரீதர் மற்றும் பாலச்சந்தர் ஆகியோரையே சேரும்.அபூர்வ ராகங்கள் படத்தில் குடிகாரனாக நடித்த நாகேஷ், தன்னுடைய நிழலை பார்த்து பேசி, “சியர்ஸ்’ சொல்லி சுவற்றில் கோப்பையை எறிவார். இடைவேளையின் போது, ரசிகர்களும் சுவாரஸ்யமாக அவரைப் போலவே சுவரில் கோப்பையை எறிந்து அவரைப் போல் நடந்து கொண்டனர்.

“தமிழ் சினிமாவில் பத்தாண்டுகளுக்குப் பிறகு செய்ய வேண்டியவற்றை இப்போதே செய்பவர் கமல்’ என்று, அவர் பற்றி நாகேஷ் பெருமையாக கூறினார். நடிகர் கமல் தனது படங்களில் நாகேஷை தவறாமல் இடம்பெற செய்வார். “அபூர்வ சகோதரர்கள்’ “மைக்கேல் மதன காமராஜன்’ “மகளிர் மட்டும்’ ஆகிய படங்களில் துவங்கி சமீபத்தில் வெளியான “தசாவதாரம்’ வரை கமலின் பெரும்பாலான படங்களில் இவர் இடம் பெற்றார். மகளிர் மட்டும் படத்தில் “பிணமாக வாழ்ந்த’ நாகேஷ் நடிப்பு, ரசிகர்களின் அமோக வரவேற்பைப் பெற்றது. கலாட்டா கல்யாணம், சுமதி என் சுந்தரி, அன்பே வா உள்ளிட்ட படங்களில் அவரது நகைச்சுவை எல்லாரையும் கவர்ந்தது.நவக்கிரகம், யாருக்காக அழுதான், சர்வர் சுந்தரம், நீர்க்குமிழி, எதிர் நீச்சல் ஆகிய படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.

ஒரு முறை, ரசிகர் ஒருவர் நாகேஷிடம், “உங்களுக்கு ஹீரோ மாதிரி பெர்சனாலிட்டி எல்லாம் இல்லை. ஆனா, நடிப்பு டான்ஸ் எல்லாவற்றிலும் பிரமாதப்படுத்துறீங்களே… எப்படி உங்களால் இப்படி நடிக்க முடியுது?’ என்றார்.சிரித்தபடியே நாகேஷ், “உங்கள வீட்ல ஆட்டுக்கல் இருக்குமில்லையா… அதுல இட்லி, தோசைக்கு மாவு அரைச்சு பார்த்திருக்கீங்களா? ஆறு மாசம், ஒரு வருஷத்துக்கு ஒரு தடவை அந்த ஆட்டுக் கல்லை கொத்து வைப்பாங்க. எதுக்கு தெரியுமா? ஆட்டுக்கல்லை பொளிஞ்சா… மாவு நன்றாக அரைபடும்; இட்லி நன்றாக வரும். ருசி உசத்தியா இருக்கும். என் முகமும் ஆட்டுக்கல்லைப் போல்தான். ஆண்டவன் “அம்மை’ என்கிற உளியை வெச்சு முகம் முழுக்க, நல்லா பொளிஞ்சுட்டாரு. அதனால் தான் நடிப்புங்கிற இட்லி நல்லா வருது’ என்றார். இந்த பதில் ரசிகரை நெகிழ வைத்தது. “சிரித்து வாழ வேண்டும்’ என்ற வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தில் நாகேஷ் இதைத் தெரிவித்திருந்தார்.

ஐம்பது ஆண்டுக்கும் மேற்பட்ட தமிழ் சினிமா வாழ்க்கையில் மனோரமாவும், நாகேஷும் ஏராளமான படங்களில் இணைந்து நடித்திருக்கின்றனர். நாகேஷின் மனைவி ரெஜினாவுடன், மனோரமாவுக்கு மிகுந்த நட்பு உண்டு.சென்னை காமராஜர் அரங்கில், 2007, ஜூன் 17ல் “என்றென்றும் நாகேஷ்’ பாராட்டு விழா நடந்தது. இதில், கே.பாலச்சந்தர், எம்.எஸ்.விஸ்வநாதன், கமல், பாக்யராஜ், குஷ்பூ, மனோரமா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நகைச்சுவை நடிகராக மட்டுமின்றி கதாநாயகனாகவும், வில்லனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நாகேஷ் நடித்துள்ளார். இவருக்கு நடிகர் ஆனந்த் பாபு உள்ளிட்ட மூன்று மகன்கள் உள்ளனர். திரையில் சாதித்த அவர் விருதுகளில் நம்பிக்கை இல்லாதவர். அவர் இல்லத்தில் எந்த ஒரு விருதும் அலங்காரப் பொருளாக இடம்பெற்றது இல்லை.

இயக்குநர் சிகரம் கே. பால்சந்தர் நாகேஷ் பற்றி சொன்ன விஷ்யங்களில் சில:

தமிழில் மட்டுமல்லாது பிறமொழிக் கலைஞர்களுக்கும் ஆதர்ச ஆசானாக விளங்கியவர் நாகேஷ். ‘அனுபவி ராஜா அனுபவி’ படத்தை இந்தியில் எடுத்தபோது, நாகேஷின் பாத்திரத்தில் நடித்த மகமூத் அவர் காலில் விழுந்து வணங்கினார். கலைவாணருக்கு அடுத்த சிறந்த கலைஞன் சந்தேகமே இல்லாமல் நாகேஷ்தான்! அவருக்காகவே நான் எழுதிய நாடகம் தான் ‘சர்வர் சுந்தரம்’. அதற்குள் அவர் மூன்று படங்களில் காமெடியனாக நடித்துப் பிரபலமாகிஇருந்தார்.

‘சர்வர் சுந்தரம்’ முழுக்க மெல்லிய சோகம் இழையோடும் கதாபாத்திரம். காமெடியனாகப் பிரபலமாகிவிட்ட நாகேஷ் இப்படியரு சென்டிமென்ட் கதாபாத்திரத்தில் நடித்தால், மக்கள் ஏற்றுக் கொள்வார்களா என்கிற தயக்கம் எங்கள் இருவருக்கும். ஆனால், எங்களுக்கு நாங்களே நம்பிக்கை வார்த்தைகள் சொல்லிக்கொள்வோம். நாடகம் பெருவெற்றி பெற்றது. ‘நீர்க்குமிழி’ படத்தில் தொடர்ச்சியாக சிகரெட் குடிப்பதால் கேன்சரால் பாதிக்கப்படும் கதாபாத்திரம் அவருக்கு. அப்போது நானே செயின் ஸ்மோக்கர். ஆனாலும், புகைப்பழக்கத்துக்கு எதிராகப் பேச வேண் டும் என்று தோன்றியதால் அந்தப் படத்தை இயக்கினேன்.

நாகேஷூக்கும் எனக்கும் ‘வெள்ளிவிழா’படத்தின் போது பிரிவு ஏற்பட்டது. அவரால் அந்தப் படத்துக்கு கால்ஷீட் கொடுக்க முடியவில்லை. கோபத்தில் நான் ‘தேங்காய்’ சீனிவாசனை வைத்து அந்தப் படத்தை இயக்கினேன். பாதி படத்தின்போதே எனக்கு ஹார்ட் அட்டாக். பைபாஸ் சர்ஜரி முடிந்து மூன்று மாதம் மருத்துவமனையில் இருந்தேன். மனத்தாங்கல் இருந்தபோதும் என்னை மருத்துவமனையில் நாகேஷ் வந்து பார்த்து, என் மனைவிக்கு ஆறுதல் சொல்லி விட்டுப் போனார். அப்போதுதான் நான் சிகரெட் குடிப்பதை நிறுத்தினேன். சிகரெட்டையும் நாகேஷையும் பிரிந்திருந்த காலகட்டம் அது!

நாகேஷின் டைமிங் சென்ஸ் அலாதியானது. ‘பூவா தலையா?’ படத்தின் ஒரு காட்சியில் ரிக்ஷாக்காரனாக நடிக்கும் நாகேஷ், தன் மாமியாரிடம் கூழைக் கும்பிடு போட்டு வணங்க வேண்டும். கிட்டத்தட்ட தரை வரை கும்பிடு போட்ட நாகேஷ், ‘இதுக்கு மேல கும்பிட முடியாது. தரை வந்துடுச்சு’ என்றதும் செட்டில் எல்லோரும் வேலையில் கவனம் தொலைத்து விழுந்து விழுந்து சிரித்தோம். அது ஸ்க்ரிப்ட்டில் இல்லாத டயலாக்.

டைமிங் சென்ஸ் என்ற வார்த்தைக்கு இங்கே அர்த்தம் கற்பித்ததே நாகேஷ்தான். அதற்குப் பின் இன்று வரை அது எவருக்கும் கை வரவில்லை! ஆனால், அரசின் சார்பாக இதுவரை நாகேஷூக்கு விருதுகள் வழங்கிக் கௌரவப்படுத்தாதது, நம் அனைவருக்கும்தான் அவமானம்.

‘அந்த நாகேஷ் இல்லை’ என்ற நினைப்பே ஏதோ ஒரு தனிமை உணர்வுக்கு என்னை ஆட்படுத்துகிறது. ‘நீர்க்குமிழி’ பாடலின் ‘ஆடி அடங்கும் வாழ்க்கையடா’ பாடல்தான் இப்போதைக்கு எனக்கு ஆறுதல் மருந்து!

பட உதவி : படைப்பாளி