September 21, 2021

நடிகையர் திலகம் – திரை விமர்சனம் = சகலரும் பார்க்கத்தகுந்த படம்!

1950ல் தொடங்கி 81 வரையிலான 31 ஆண்டுகளில் தெலுங்கில் 147, தமிழில் 101, கன்னடத்தில் 6, ஹிந்தியில் 6, மலையாளத்தில் 3 என 263 படங்கள். 1957ம் ஆண்டில் வெளியான 30 படங்களில் மூன்றில் ஒரு பங்கு படங்களில் முக்கியமாக ஹீரோயின் ரோலில் நடித்தவர் சாவித்திரி. நந்தி விருது, குடியரசுத்தலைவர் விருது, ஐந்து முறை ஃபிலிம்ஃபேர் விருது (அப்போது இவ்விருதினை அதிக முறை பெற்றவரும் அவர்தான்), அப்பேர்பட்டவருக்கு தமிழக அரசு வழங்கிய ‘நடிகையர் திலகம்’ என்ற பட்ட பெயருடன் மெகா, மகா நடிகையின் ரியல் வாழ்க்கையை படமாக்கி அசத்தி இருக்கிறார்கள்.

ரியல் வாழ்க்கை என்று சொன்னதும் கொம்மாரெட்டி சாவித்திரி (Kommareddy Savitri) அல்லது சாவித்திரி கணேஷ் (Savitri Ganesh, தெலுங்கு: సావిత్రి కొమ్మారెడ్డి; டிசம்பர் 6, 1935 – டிசம்பர் 26, 1981), புகழ் பெற்ற ஒரு தென்னிந்தியத் திரைப்பட நடிகை என்று டாக்குமெண்டரி டைப்பிலான சினிமா என்று நினைத்தால் அது தப்பு. இன்றைய யங் ஜெனரேசனுக்கும் புரிய வேண்டும் என்பதால் ஒரு இளம் ஜர்னலிஸ்ட் பார்வையில் சாவித்திரியை வெளிச்சமிட்டு காட்டுகிறார்கள். அதாவது ரிப்போர்ட்டர் மதுரவாணியிடம் (சமந்தா), பிரபலமான நடிகை சாவித்ரி (கீர்த்தி சுரேஷ்) கோமாவில் இருப்பது குறித்த செய்தி சேகரிக்கும் பொறுப்பு வழங்கப்படுகிறது. ஜர்னலிஸ்ட் சமந்தாவுக்கு சாவித்திரியை சினிமா நடிகையாக மட்டுமே தெரியும். ஆனால் போய் விசாரிக்க தொடங்கும் போதுதான் அவரது வளர்ச்சி, வீழ்ச்சி, தோல்வி, மீண்டுவருதல் எனப் பல தகவல்கள் கிடைக்க ஆரம்பிக்கிறது. இதில் ஆர்வமாகி சாவித்திரி வரலாற்றின் தொடக்கப் புள்ளி முதல், கோமாவில் வீழந்த நாளில் நடந்தது என்ன? என்பதை யெல்லாம் தேடுவது போல் பயணித்து

அம் மஹா நடிகையின் வாழ்க்கையில் நடந்த பல முக்கியமான சம்பவங்களை சொல்கிறார்கள். குறிப்பாக குழந்தையாக இருந்த சாவித்திரி தன் அம்மாவுடன் பெரியப்பா வீட்டில் தஞ்சமடைவது அங்கு பெரியப்பா காசுக்கு ஆசைப்பட்டு பரதம் கற்று கொடுக்க போன இடத்தில் “எனக்கு நாட்டியம் வராதுன்னு சொல்றதுக்கு அவர் யாரு” என வீம்பாக கற்றுக் கொள்வது, நாடக அரங்கேற்றம், அதையடுத்து சினிமா வாய்ப்பு தேடி மெட்ராஸ் பயணம், முதல் வாய்ப்பு, ஜெமினி கணேசனுடன் அறிமுகம், ஜெமினி மூலம் தமிழ் கற்றுக் கொள்வது, தொடர் வெற்றிப் படங்கள், கூடவே ஜெமினியுடன் காதல், திருமணம், குழந்தைகள், ஜெமினிக்கு மார்கெட் அவுட், அதனால் குடும்ப வாழ்க்கையில் சிக்கல், பின்னர் சொந்தமாக எடுத்த படங்கள் தோல்வி, தொடர்ந்து குடிக்கு அடிமையாவது என நடிப்பு அரசியாக இருந்த சாவித்த்ரி பற்றிதெரிந்த மற்றும் தெரியாத அனைவரும் எளிதாக ஏற்றுக் கொள்ளும் பாணியில் நீள்கிறது படம்.

தீவிரமான சினிமா ரசிகர்களுக்கு இது ஆவணப் படமாக மட்டுமல்ல.. இன்றைய நடிகைகளுக்கும் இந்த படம் ஒரு பாடம் என்றே சொல்லலாம். அவரது புகழ்பெற்ற பல படங்களின் சீன்கள் மரு உருவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. அதிலும் படு ஹிட் அடித்த மாயா பஜார், மிஸ்ஸியம்மா, பாசமலர், தேவதாஸ் என பல க்ளாசிக்ஸ் சீன் இப்படத்திலும் மின்னுகிறது. ம்.. அப்புறம்.. இந்த நாயகி ஆரமபத்திலிருந்து கொழுக் மொழுக் என்றிருந்த சாவித்திரி ரோலுக்கு ஸ்லிம் பாடியுடனான கீர்த்தி சுரேஷா என்று பலரும் அதிர்ச்சி அடைந்தார்கள் என்பதும் அதே நபர்கள் இப்படத்தைப் பார்த்து விட்டு கீர்த்தி சுரேஷ், நடிக்கவில்லை … சாவித்திரியாகவே வாழ்ந்து சாதித்து விட்டார் என்று வாய் விட்டு பாராட்டினார்கள். தொடக்கத்தில் மெட்ராஸ் வாஹினி ஸ்டூடியோவில் எண்ட்ரி ஆவதில் ஆரம்பத்து டயலாக் பேசவும் நடிக்கவும் வராமல் பிரபல நடிகர்களை சாதாரண ரசிகை போன்று பார்ப்பது. ஜாம்பவான் நடிகர்களை இமிடேட் செய்வது, கிளிசரின் இல்லாமல் கண்ணீர் வடிப்பது, ஜெமினி – (துல்கருடன்) காதல் வயப்படுவது, பெண் இயக்குனராக சாதிப்பது, தயாரிப்பாளராகி லாஸ் ஆகி சொத்துக்களை இழப்பது, கணவரின் நம்பிக்கை துரோகம் தெரிந்து பொங்கி எழுந்து விலகி போவது..போதையில் மிதப்பது என சாவித்திரியை மறுபடியும் உயிர்பித்து விட்டார் கீர்த்தி சுரேஷ்!

அடுத்தது ஜெமினி வேடத்தில் வரும் துல்கர். இவர் வேஷம் என்னவோ கொஞ்சம் ஒட்டவில்லை என்றாலும் ஜெமினி கணேசன் இப்படித்தான் என்று தன் கேரக்டர் மூலம் நிரூபித்து தனிக் கவனம் பெறுகிறார். “எனக்கு காதல் மேல் நம்பிக்கை உள்ளது கல்யாணம் மேல் இல்லை… என் வாழ்வில் உள்ள ஒரே காதல் நீதான்” என புலம்பலும், “தோல்வியில் கூட எனக்கு க்ரெடிட் கொடுக்க மாட்டியா?… இது என்னாலதான்” எனத் தன்னுடைய தோல்வி நேரத்தில் மனைவி உச்சத்தில் இருப்பதன் மனக் கவலையைச் சொல்லி “பெண்களின் அழுகை பாருக்கே தெரியும் ஆண்களின் அழுகை இந்த பாருக்கேத் தெரியும் … ” என தனி ஆவர்தனம் செய்திருக்கிறார் துல்கர் சல்மான்.

ரிப்போர்ட்டர் மதுரவாணியாக வரும் சமந்தா. திக்கித் திக்கிப் பேசுவதில் அம்புட்டு பர்பகெட் இல்லாமல் போனாலும் தன்க்கு கொடுக்கப்பட்ட ரோலில் எல்லை மீறாமல் பயணித்திக்கிறார். அத்துடன் பெத்த நைனா ராஜேந்திர பிரசாத், சாவித்திரிக்கு தக்க சமயங்களில் அட்வைஸிக்கும் சினிமா பிரபலம் பிரகாஷ்ராஜ், ரைட்டர் – மனோபாலா, பெத்தம்மா-பானுப்ரியா, மாளவிகா நாயர், ஷாலினி பாண்டே ஸ்ரீனிவாஸ் அவசரலா, கிரீஷ் ஜகர்த்த மூடி போன்றோர் பலர் இருக்கிறார்கள். இவர்களையெல்லாம் தாண்டி அந்த கால காட்சி அமைப்புகளை கண் முன் கொண்டு வந்த கலை இயக்குநர், காஸ்ட்யூம் டிசைனர் ஆகியோருக்கு தனி பொக்கே கொடுத்தே ஆக வேண்டும்.

நிறைகள் அதிகம் கொண்ட இந்த படத்தின் நீளம் கொஞ்சம் அலுப்பை கொடுப்பதென்னவோ நிஜம்.. ஆனால் சாதனை நடிகையின் இருட்டு பக்கங்களையும் காட்ட இந்த கால அவகாசம் தேவைதான். அதே சமயம் தெலுங்கில் பிறந்து அங்கும் அப்போதே லேடி சூப்பர் ஸ்டாரான நடிகையை உருவாக்கி தமிழ் சினிமாவின் முக்கிய பாத்திரங்களையும், சீன்களையும் கூட தெலுங்கு வாடையுடன் சொல்லி சாவித்திரியை கொஞ்சம் அந்நியப்படுத்தி விட்டார்கள்.

ஆனாலும் சகலரும் பார்க்கத்தகுந்த படம்,

மார்க் 5 / 4