September 18, 2021

நாச்சியார் – விமர்சனம் = பாலா டைரக்‌ஷன்தான்.. ஆனா பாலா படமில்லே!

நம்ம கோலிவுட்டில் நூறு படம் செய்து முடித்து விட்ட பி வாசு-வையும், நாப்பந்தைந்து படங்கள் – அதிலும் முக்கால்வாசி ஹிட் கொடுத்த கே. எஸ். ரவிகுமாரையும் மறந்து விட்ட நம்ம தமிழ் ஊடகவாசிகள் ஜஸ்ட் பத்து படங்கள் கூட பண்ணாத பாலா படங்களுக்கு தனி பார்வை கொடுப்பது ஆரம்பத்திலிருந்தே நடந்து வந்துள்ளது. இத்தனைக்கும் பாலா தன் படம் குறித்தான தகவல்களை தனி தகவல்களாக வெளியிடுவதில்லை. என்றாலும் ஒரு படத்தை தொடங்கினால் அதிலேயே மூழ்கி படத்தை வார்த்தெடுத்து வழங்கி விட்டு அதன் லாப நஷ்டத்தைப் பார்க்காமல் நெக்ஸ்ட் பிராஜக்டில் இறங்கி விடுவார். ஆனாலும் ஊடக வெளிச்சம் இவர் மீது  விழுந்து கொண்டே இருக்கும்.

அந்த வகையில் இந்த நாச்சியார் படம் தொடங்கிய நாளில் இருந்தே அன் அஃபீஷியலாக இப்படம் பற்றி ஏதாவது ஒரு தகவல் வெளி வந்து கொண்டிருந்தது. அதன் ஒரு அம்சமாக போலீசாக வரும் ஜோதிகா ஒரு கெட்ட வார்த்தை நாச்சியார் படம் குறித்து ஒரு பயம் கலந்த எதிர்பார்ப்பு இருந்தது. அதற்குத் தகுந்தால் போல் படத்தின் டைட்டில் கார்டின் போதே தன்னைத்தானே அறியாமல் தன் தேகத்தை காவு கொடுத்த இளம்பெண்களுக்கு சமர்பணம் என்ற வாசகத்தை கண்டதும் கொஞ்சம் குழப்பம் கலந்த எதிர்பார்ப்பு வந்தது. ஆனால் படம் முடிந்த பிறகு இது பாலா இயக்கிய படம்தான். ஆனால் பாலா படம் இல்லை என்று சகலரும் வாய் விட்டு சொல்லியபடி வெளியேறியதில் நாமும் ஒருவர்

படத்தின் கதை என்னவென்றால்.. அப்பா – அம்மா அவ்வளவு ஏன் தன்னோட வயசு என்னான்னுக் கூட தெரியாதவன் காத்தவராயன் என்றும் காத்து என்றும் அழைக்கப்படும் ஜிவி பிரகாஷ். இவன் கல்யாண வீடுகளில் (சமையல்) தபசு பிள்ளையிடம் எடு பிடி வேலை செய்து பொழைப்பை ஓட்டிக் கொண்டிருக்கிறான். அதன் படி ஒரு சமையல் வேலைக்குப் போகும் வழியில் ஷேர் ஆட்டோவில் வரும், அரசி எனப்படும் இவானாவை மீட் செய்கிறான். இவானாவும் சில வீடுகளில் எடு பிடி வேலை செய்யும் சிறுமி.. அதுவும் அழகான சிறுமி.. அப்புறமென்ன.. ரெண்டு சிறுசுக்கும் காதல் ஏற்படுகிறது. லவ்வான ரெண்டு பேருக்கும் இடையே வயசு கோளாறால் ஒருநாள் உறவும் நடந்து அதனால், கர்ப்பமாகி விடுகிறார் இந்த விஷயம் போலீஸுக்குத் தெரிய வர, மைனர் பெண்ணைக் கெடுத்து விட்ட வழக்கைக் கையில் எடுக்கிறார் அசிஸ்டண்ட் கமிஷனரான நாச்சியார் என்ற ஜோதிகா.

சம்பந்தப்பட்ட ரேப்பிஸ்ட்  என்று முத்திரைக்குத்தப் பட்ட  ஜிவிபிரகாஷ், சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்படுகிறான். அதே சமயம் இவானாவை, ஜோதிகா தன் கஸ்டடியில் எடுத்து, தன் டாக்டர் கணவர் மூலம் பிரசவம் பார்த்து பாதுகாத்து வருகிறார். இதனிடையே , அந்தக் குழந்தைக்கு டிஎன்ஏ டெஸ்ட் எடுத்துப் பார்க்கும் போதுதான் அது ஜீ.வி.பிரகாஷுக்குப் பிறந்த குழந்தையேயில்லை எனத் தெரிய வருகிறது. அதில் ஷாக்காகி ’அப்படியென்றால், அந்தக் குழந்தை யாருக்குப் பிறந்தது?’ என்று படம் பார்ப்போரை ஒரு யூகத்துக்கு ஆளாக்கி விட்டு புது புது ட்ராக்கில் பயணித்து ஒரெ நல்ல மெசெஜோடு முடிகிறது மிச்சக் கதை.

உள்ளங்கையில் செல் போனும், அந்த போனில் இணையமும் இணைந்த பிறகு பள்ளிகளில் படிக்கும் அல்லது அந்த வயசிலுள்ள இளம் சிறுமிகள் கர்ப்பம் அடைவது மிகவும் அதிகரித்துள்ளது என்றும் உடலுறவு மற்றும் அதன் பின்விளைவுகள் போன்றைவைகளை எதுவும் தெரியாமலேயே இவர்கள் பாலுறவில் ஈடுபட்டு, சங்கடங்களை அனுபவித்து வருவதும் பல சூழ்நிலையில் வருத்தப்படும் படியாக பல்வேறு செய்திகள் வெளியாவதை பாலா பார்க்க/படிக்கவே இல்லாததால் அதையெல்லாம் சட்டை செய்யவே இல்லை.

தன் ஸ்டைலில் ஒரு அராத்து பெண் போலீஸ், அப்பாவி குப்பத்துவாசி, அழகான சிறுமி மூலம் ஒரு சினிமா-வை  அதுவும் தனக்கு தெரிய வந்தவைகளை மட்டும் ரொமப் குறைந்த கால அவகாசத்தில் இன்னும்  குறைந்த நேரத்தில் ரசிகர்களுக்கு ஒரு புது படைப்பை வழங்கி இருக்கிறார்.. அம்புட்டுத்தான்.. ஆனால் ஆரம்பத்தில் சொன்னது போல் பாலா – இது வரை கொடுத்த  ஒவ்வொரு படத்திலும் கொடுத்த அழுத்தம் இதில் மிஸ்ஸிங். அதனால சுவாரஸ்யம் இருந்தாலும் ஒரு நாடகம் பார்ப்பது போலவே இருக்கிறது.

இதனிடையே இது வரை பிளே பாய் ரோல்களில் மட்டுமே தோன்றி வந்த ஜி வி பிரகாஷிடம் இம்புட்டு திறமையா? என்று ஆச்சரியப்படுத்தும் அளவுக்கு அசத்தி இருக்கிறார். அது போல் அரசியாக வரும் இவானா புது முகம் என்பதை நம்ப முடியாத அளவுக்கு கேஷூவலாக தன் பங்கை செய்து சபாஷ் பெறுகிறார். டைட்டில் ரோலில் வரும் ஜோதிகா தன் மகள் மற்றும் கணவரிடம் கூட கெத்தாக நடந்து கொள்ளும் போக்கிலும் தாய்மையுடன் அவஸ்தையுறும் இவானை பரிவாக கவனிப்பதிலும் ஆணவம் கலந்த ,மிடுக்குடன் நடந்து தன் ரியல் ஹஸ்பண்ட் சிங்கம் சூர்யா-வை விட ஸ்கோர் செய்கிறார்.

மொத்தத்தில் ஆரமப பத்தியில் சொன்னது போல் இது பாலா இயக்கிய படம்-தான் என்றாலும் பாலா படம் இது அல்ல.

மார்க் 5 / 3