November 30, 2022

நானே வருவேன் – விமர்சனம்!

கோலிவுட்டில் டாப் 5 லிஸ்டில் இடம் பிடித்திருக்கும் செல்வராகவன் மற்றும் தனுஷ் கூட்டணியில் யுவன் சங்கர் ராஜாவும் கலைப்புலி தாணுவும் இணைந்து வழங்கி இருக்கும் படமே ‘ நானே வருவேன்’. அதிலும் பா. பாண்டி படத்திற்கு பிறகு தனுஷ் எழுதிய திரில்லர் ஜானரில் வெளி வந்திருக்கும் படமாகும். அட்டகாசமான நடிப்பு,  மிரட்டலான திரைக்கதை, நன்மைக்கும் தீமைக்குமான போட்டி, அசத்தலான பின்னணி இசை என காண்போரை திருப்திப்படுத்தும் படமாகவே இருக்கிறது.

கதை என்னவென்றால் பிரபு மற்றும் கதிர் என்ற இரட்டையர்கள். இதில் .கதிர் என்பவன் நடவடிக்கைகள் சற்று மாறுபட்டு சைக்கோத்தனமாய் நடந்து கொள்வதால் அப்பா கோபம் கொள்கிறார். அதனால் அப்பாவையே கொலை செய்து விடுகிறான். அதனால் அம்மா அந்த சைக்கோ கதிரை ஒரு கோயிலில் விட்டு விட்டு பிரபுவை அழைத்து வேறொரு ஊருக்கு சென்று விடுகிறார் .அங்கு பிரபு வளர்ந்து திருமணம் குழந்தை என செட்டில் ஆகிறார். அந்த பிரபுவின் மகள் நடவடிக்கையில் திடீரென்று பெரும் மாற்றம் தெரிகிறது ,அதை விசாரிக்கும் போது மகள் சத்யா உடம்பில் ஒரு பேய் இருக்கிறது என்று தெரிய வருகிறது. அந்த பேய். சத்யா உடம்பை விட்டு வெளியேற வேண்டுமென்றால் ஒரு கொலையைச் செய்யச் சொல்கிறது. அதுவும் மேற்படி கதிரை கொல்லச் சொல்கிறது, எதற்காகக் அவனை கொல்லச் சொல்கிறது என்பதுதான் நானே வருவேன் படம்.

படம் முழுவதையும் தனுஷ் என்ற ஒற்றை மனிதர் தாங்கி செல்வதில் ஆச்சரியம் ஏதுமில்லை. நேஷனல் அவார்ட் வின்னரான அவர் ஒரு சாதுவான குடும்பத் தலைவனாகவும், இன்னொரு முகமாக சைக்கோ அடாவடி, கொடூர வில்லனாகவும் புது டைப்பிலான பாடி லேங்க்வேஜ் நடிப்பை எல்லாம் காட்டி  அசத்தி விட்டார். படத்தில் தனுஷ் மகளாக நடித்த ஹியா டேவி. அமானுஷ்யத்தைக் கண்டு அஞ்சுவது, தொடரும் மேனரிசம் என சபாஷ் சொல்ல வைத்து விடுகிறார்.

இந்துஜா, எல்லி அவரம் ஆகிய இருவரும் முறையே பிரபு, கதிர் ஆகியோரின் மனைவிகளாக நீட்டாக நடித்திருக்கிறார்கள். . ஒரு காட்சியில் மட்டும் நடித்து கவனம் பெறுகிறார் இயக்குநர் செல்வராகவன். தனுஷின் மகன்களாக வரும் பிரபவ், பிரணவ் , யோகிபாபு, பிரபு ஆகியோர் கொடுத்த வேலையை சரிவர செய்து இருக்கிறார்கள்

ஓம் பிரகாஷின் கேமரா மூலம் கேரக்டர்களுக்கும் கூட வெரைட்டியான லைட்டிங், விஷுவல்ஸ் அனைத்தையுமே உறுத்தாத அளவில் காட்சிப்படுத்தியுள்ளார். படத்தின் அடிசினல் ஹீரோ என்று சொல்லக் கூடிய அளவிற்கு யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் & பின்னணி இசை இப்படத்திற்கு பெரிய பலம். அதிலும் இடைவேளை காட்சியில் வரும் ‘வீரா சூரா’ பாடல் ஒலிக்கத் தொடங்கியதுமே தியேட்டரே ஆர்ப்பரிக்கிறது..

முதல் பாதி வரை விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை . அதிலும் முதல் பாதி முடியும் போது வரும் ட்விஸ்ட் எதிர்பார்க்காததது. கிளைமாக்ஸ்சும் அதே போல செல்வராகவன் டச்-சுடன் புதிதாக இருந்தது. ஆனால் படம் ஆரம்பித்து செல்ல செல்ல இது ஏதோ ஒரு ஆங்கில படத்தின் தழுவல் என்று மனதிற்கு வந்தாலும், வழக்கமான அண்ணன் தம்பி பழிவாங்கல் கதையில் அமானுஷ்யத்தை அளவாக பயன்படுத்தி முடிவில் பாசிட்டிவ் மெசெஜ்-ஜூடன் படத்தை ஷார்ப்-பாக அதுவும்  இரண்டு மணி நேர அளவில் முடித்து இருப்பதே சிறப்பு.

மொத்தத்தில் நானே வருவேன் – நம்பிப் போய் பார்க்கத் தகுந்த படம்

மார்க் 3.5/5