September 20, 2021

மைசூர் பேலஸ் மூடியாச்சு! – மன்னர் வூட்டு மேரேஜ் முடிஞ்சதும் ஓப்பனாகும்!

2010ம் ஆண்டில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய 31 சுற்றுலாத்தலங்கள் பற்றிய ஆய்வை நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை மேற்கொண்டது. இந்த பட்டியலில் அரண்மனை நகரமான மைசூர் 4ம் இடத்தில் உள்ளது. ஆண்டுக்கு சராசரியாக 25 லட்சம் சுற்றுலாப்பயணிகள் மைசூர் அரண்மனையை கண்டுகளிக்கிறார்கள். லண்டனில் உள்ள மேடமே டஸ்ஸாட்ஸ் மெழுகு அருங்காட்சியகத்திற்கு அடுத்தப்படியாக, உலகில் அதிகம்பேர் கண்டுகளிப்பது மைசூர் அரண்மனையைதான். இதுதவிர, மைசூர் மிருகக்காட்சிசாலையை கடந்தாண்டு மட்டும் 23 லட்சம் பேர் சுற்றிப்பார்த்துள்ளனர்.

mysore

இந்த அரண்மனை ஆரம்பத்தில் (யதுவம்ச) உடையார் குடும்பத்தினரால் விஜயநகரப் பேரரசின் கீழ் மைசூர் நகரம் சிற்றரசாக இருந்து வந்தது. நரசராஜ உடையார் மற்றும் சிக்க தேவராய உடையார் ஆகிய அரசர்களின்கீழ் தற்போதைய தெற்கு கர்நாடகா மாநிலத்தின் பல பகுதிகள் மைசூர் பேரரசின் கீழ் கொண்டு வரப்பட்டு இப்பகுதியில் ஒரு பலமான பேரரசாக அமைக்கப்பட்டது.பின்னர், பல சிற்றரசுகள் தென்னிந்தியாவில் விடுதலை பெற்ற காலத்தில் மைசூரும் விடுதலை பெற்றது. மைசூர் மன்னர்கள் ஆண்டகாலத்தில் அவர்களின் அரண்மனையாக இருந்த பிரமாண்ட மாளிகை மைசூர் நகரில்அமைந்துள்ளது. தசரா திருவிழா மற்றும் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளின் மாலை வேளைகளில் ஒருமணி நேரமும் இந்த மாளிகை மின்விளக்கின் அலங்காரத்தில் ஜொலிக்கும். இதைப் பார்வையிட நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் அரண்மனைக்கு வருவதுண்டு.

இந்நிலையில், மைசூர் மஹாராஜாவின் வழிதோன்றலான யதுவீர் கிருஷ்ணதத்தா சாம்ராஜ உடையார் – துங்காப்பூர் அரச தம்பதியரின் வாரிசுவழி வந்த திரிஷிகா குமாரி ஆகியோருக்கு வரும் 27-ம் தேதி மைசூர் அரண்மனையில் திருமணம் நடைபெறவுள்ளது.

திருமணத்துக்கு 10 நாட்களுக்கு முன்பாகவே பல்வேறு பூஜைகளும், குடும்ப நிகழ்ச்சிகளும் தொடங்கி விட்டது. இதையடுத்து 27-ம் தேதி மைசூரு அரண்மனையில் உள்ள‌ தர்பார் ஹாலில் திருமண வரவேற்பும், அதைத் தொடர்ந்து திருமணமும் நடைபெறுகிறது. கர்நாடக முதல்வர், அமைச்சர் கள் உட்பட பல்வேறு முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்கும் இந்த திருமணத்துக்கான அழைப்பிதழ் கள் அச்சிடும் பணி முடிந்துள்ளது. இந்த அழைப்பிதழ்களை முக்கிய விருந்தினர்களுக்கு மகாராணி பிரமோதா தேவி அனுப்பி வருகிறார். இந்த திருமணத்தில் பங்கேற்கும் ஆண்கள் வெள்ளை அல்லது கறுப்பு நிற கோட், வெள்ளை பேன்ட், சிவப்பு தலைப் பாகை அணிந்திருக்க வேண்டும். இல்லாவிடில் நீல நிற கோட் சூட் அணிந்திருக்க வேண்டும். பெண்கள் புடவையும், பாரம்பரிய உடைகளையும் அணிந்துவர வேண்டும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் திருமண நிகழ்ச்சியையொட்டி மைசூரு அரண்மனையில் அலங்கார வளைவுகள் அமைப்பது, மின் விளக்குகள் பொருத்துவது, வண்ணம் தீட்டுவது உள்ளிட்ட பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இதையடுத்து, திருமணத்துக்கு முந்தைய சடங்கு சம்பிரதாயங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் இன்றுமுதல் வரும் 30-ம் தேதிவரை மைசூர் அரண்மனை மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த ஆறுநாட்களும் இரவில் ஒருமணி நேரத்துக்கு மின்விளக்குகளால் அரண்மனை ஒளியூட்டப்படும். அழைப்பிதழ்களுடன் வருபவர்கள் மட்டும் பிரதான வாயில் வழியாக அரண்மனைக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.