March 31, 2023

முசிறி பள்ளிக் கொலை : கடந்து போய்விடக்கூடாது!.

திருச்சி முசிறி அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில், பள்ளி வளாகத்தில் படிக்கும் நேரத்தில் சிறு கற்களைத் தூக்கி வீசி விளையாடிய மாணவனை, சக மாணவர்கள் மூன்று பேர் தாக்கியதில் அந்த மாணவன் இறந்து போயிருக்கின்றான்.இறந்த மாணவன் மற்றும் தாக்கிய மூன்று மாணவர்களும் பத்தாம் வகுப்பு படிக்கின்றவர்கள். மூன்று மாணவர்களும் வயது கருதி, சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பப்படலாம். அங்கிருந்து திரும்பி வரும்போது எப்படி வருவார்கள் என்பது அனைவரும் அறிந்ததே.

ஆக மொத்தத்தில் ஒரு மரணம், மூன்று பேர் வாழ்க்கையில் சிதைவு. நான்கு குடும்பங்களின் எதிர்காலம் மிகப் பெரிய கேள்விகுறிதான். அநேகமாக, இறந்த மாணவன் குடும்பத்திற்கு அரசு நிதியளிப்பதோடு, அடுத்ததொரு செய்தி, இதனை மறக்கடிக்கச் செய்துவிடும். பள்ளிக்கல்வித்துறை தற்கால மாணவர்களின் மன நலனுக்காக பெரிதும் திட்டமிட்டு உழைக்க வேண்டும்.

மாணவர்களை வழிநடத்தும் முறையான பயிற்சி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட வேண்டும். அவற்றிற்கான நிகழ்ச்சிகள் சரியான விதத்தில் நடத்தப்பட வேண்டும். கணக்கு காட்டும் நிகழ்ச்சிகளாக அமையக்கூடாது.

துறை சார்ந்த அதிகாரிகளுக்கு இப்போதைய மாணவர்களின் உளவியல் சிக்கல்கள் உண்மையில் புரிந்திருக்கின்றதா…?

இது யாருக்கோ நடந்ததென்று கடந்து போய்விடக்கூடாது. இம்மாதிரியான குற்றங்களில் ஈடுபடுவோர், பல்வேறு சிதைவுகளோடு சமூகத்தில் தொடர்ந்து இயங்குவார்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

ஈரோடு கதிர்