March 22, 2023

கனடாவிலுள்ள டொராண்டோ தமிழ் இருக்கைக்கு தூதுவரானார் டி.இமான்!

கனடாவில் 96 பல்கலைக்கழகங்கள் உள்ளன. அவற்றிலே முதல் இடத்தில் இருப்பது 192 வருடம் வயதான டோரண்டோ பல்கலைக்கழகம். உலகிலேயே தமிழ் மரபு தினத்துக்கு விழா எடுத்தது இப்பல்கலை கழகமே. அபேர்பட்ட செம்மொழி அந்தஸ்து பெற்ற பெருமைமிகு தமிழ் மொழியின் டொராண்டோ தமிழ் இருக்கை தூதராக, இசையமைப்பாளர் டி.இமானுக்கு விசேஷ கெளரவம் வழங்கப்பட்டிருக்கிறது.

இச்செய்தியை பகிர்ந்து கொண்ட டி.இமான் தெரிவித்ததாவது….

“உலகின் தொன்மையான மொழி எனப் போற்றப்படும் தமிழ், வாய் வழித் தொடர்பு மொழி என்பதைத் தாண்டி மனித குலத்தின் வாழ்வியல், நாகரீகம் மற்றும் கலாச்சாரங்களை தன் இலக்கியங்களில் உள்ளடக்கியதாகும். மொழிகளின் தாய் என தமிழ் புகழப்படுவது குறித்து தமிழன் என்ற முறையில் நான் பெருமையும் பேருவகையும் கொள்கிறேன். பல்வேறு கலை வடிவங்கள் மூலம் மொழிக்கு செழுமை ஏற்றிய மிகச் சிறந்த மனிதர்களால் ஆசிர்வதிக்கப் பட்டது தமிழ் நிலம். டொராண்டோ தமிழ் இருக்கையின் தூதராக நான் நியமிக்கப்பட்டபோது, இவற்றையெல்லாம் அறிந்து மிகவும் ஆச்சரியமடைந்தேன்.

கனடாவின் முதல் தர பல்கலைக் கழகமான டொராண்டாவில் நமது தாய்மொழிக்கு இருக்கை அமைத்து அங்கீகரித்தது, உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கெல்லாம் உவகை தரும் பெருமை மிகு தருணம். டொராண்டோ பல்கலைக் கழகத்தின் உறுப்பினர்கள் அனைவருக்கும் நான் நன்றி செலுத்தும் இந்த நேரத்தில், எனக்கு அளிக்கப்பட்ட இந்த கெளரவம், தாய் மொழி மீது நான் கொண்ட ஈடுபாட்டை இன்னும் மேம்படுத்தும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்”