நேற்றைய முரசொலி. பதற்றம்-பயம்-புலம்பல் என்பதாக இருந்தது!

முரசொலி தலையங்கம் என்றால் ஒரு ‘கனம்’ இருக்கும். சாடுவதிலும் ஒரு கம்பீரம் இருக்கும். பிதற்றலும் வெற்றுக் கூச்சலுமான புலம்பல் இருக்காது. அது ஒரு காலம். நேற்றைய முரசொலி. பதற்றம்-பயம்-புலம்பல் என்பதாக இருந்தது. அவர்களை அதிகம் பாதித்திருப்பது சீமான்- நாம் தமிழர் கட்சி.!

அந்த பதற்றம்- பயத்தில் ஏதேதோ எழுதுகிறார்கள்..என புரிகிறது!!

ஏதோ, மாமன்னர் அலெக்ஸாண்டர்- இளவசர், வீதிக்கு வந்தார், நடந்தார், குறுக்கு மறுக்காக ஓடினார், “அறிஞர் அண்ணாவின், ‘மக்களிடம் செல்லுங்கள்’ முழக்கத்தை மெய்யாக்க’ மக்களைச் சந்தித்தார் என்றெல்லாம் நீட்டி முழங்கியிருக்கிறார்கள்.

நல்ல வேளை, முகத்தில் மரு வைத்துக்கொண்டு, மாறு வேடத்தில் நடமாடினார் என்று மட்டும் எழுதவில்லை.

அருந்ததியர் இல்லப் பெண்டிர் தந்த நேநீரை பருகினார் என்று அங்கலாய்த்துக் கொள்கிறார்கள். அதாவது சமமாக பாவிக்கின்றார் (!).சமூக நீதிப் புரட்சியைச் செய்கிறார்! என்பதாகக் காட்டுகிறார்கள்.

அவர் தேநீர் குடிப்பதோ, அல்லது பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் நான்கும் கலந்த அமுதத்தைப் பருகினாரோ…பிரச்சனை அதுவல்ல.

ஒரு அருந்ததியர் வீட்டில் சாப்பிட்டதை, ‘சமூகநீதிப் புரட்சி’ யாகச் சொல்கிறார்கள்.

இன்னும் கேட்டால், ‘எங்கள் வீட்டிற்குள்ளே ஒருவராக அருந்ததி சமூக இளைஞர்தான் இருக்கிறார்’ என்று வேறு கூறிக்கொள்வார் ஸ்டாலின்.

வீட்டில் கழுவித் துடைக்கும் வேலைக்காரராக, மறைந்த கலைஞரை கழுவி சுத்தம் செய்துவிட்டுப் பராமரித்து பார்த்துக்கொள்ளும் ஊழியராக ஒரு அருந்ததியரை வைத்திருப்பது சமூக நீதி அல்ல.

அரை நூற்றாண்டைக் கடந்துவிட்ட திராவிட முன்னேற்றக் கழக கட்சியின் தலைமையிடத்தில் அருந்ததியருக்குப் பங்கு கொடுத்திருக்க வேண்டும், அதுதான் சமூக நீதி.

அமைச்சர்கள் பட்டியலில் துரைமுருகனுக்குத் தரும் இடத்தைத் தருவதுதான் சமூக நீதி.

திமுக-வின் மாவட்டச் செயலாளர்களில் ஒரு அருந்ததியரையாவது நியமித்திருந்தால் அது சமூகநீதி.

அருந்ததியப் பெண்டிர் வீட்டில் தேநீர் பருகினார் என்பதைப் போல், திமுக மாவட்ட செயலாளர் பட்டியலில் அருந்ததியர் என்று கூறினால் அது பெருமை…

மாவட்ட மக்கள் தொகையில், ஒன்றிரண்டு சதவீதம்கூட இல்லாத நாயுடுகளும்- ரெட்டியார்களும் செயலாளர்களாக இருக்கும் போது, அதைவிடக் கூடுதலாக உள்ள அருந்ததியர்கள் மாவட்டச் செயலாளர்களாக இருப்பதில் தவறென்ன? அப்படி செய்திருந்தால் அது புரட்சி.

உங்களைச் சேர்ந்தவர்கள் சேர்த்து வைத்திருக்கும் பல ஆயிரம் கோடி சொத்துக்களைப் போன்று, அந்த அருந்ததி இல்லத்துப் பெண்டிருக்கும் சொத்து சேர்த்துவைக்கும் ரகசியம் தெரிந்திருந்தால் அது புரட்சி-சமூக நீதி.

அடுத்து..

ஒரு கட்சியின் தலைவரை ‘ஃபோர்ஜரி வீரர்’ என்றெழுதுகிறார்கள்.

ஒருவேளை சீமான் 2ஜி அலைக்கற்றை ஃபோர்ஜரியில் சிக்கியிருப்பாரோ? அல்லது, சர்க்காரியா கமிஷன் ஊழல் ஃபோர்ஜரியில் மாட்டியிருப்பாரோ?. இல்லை, மும்பை தொழில் அதிபர் சென்னை வந்து பணம் கொடுத்தார் என்று சி.பி.ஐ. போட்ட வழக்கில் சிக்கி ஃபோர்ஜரியாகிருப்பாரோ?

அல்லது சொந்தக் காசில் மோதிம் வாங்கிக்கொடுத்து, ‘அண்ணா அளித்த அன்புப் பரிசு’ என்று கதைவிட்டு ஃபோர்ஜரி செய்திருப்பாரோ? மீத்தேன் எரிவாயு எடுக்க கையெழுத்துப் போட்டுவிட்டுப் பின்னர் ‘தெரியாம போட்டுவிட்டேன்’ என ஃபோர்ஜரி செய்திருப்பாரோ? ஏதும் தெரியவில்லை.

தி.மு.க-வின் ஃபோர்ஜரி பற்றி கண்ணதாசன் சொல்லாத புதிது ஏதும் உள்ளதா என்ன?

போகிற போக்கில் சீமானை ஏதோ ஒரு டிவி பெட்டி (மட்டும்) காட்டுகிறது என்று ‘அன்பாக’ மிரட்டிவிட்டு வேறு போகிறார்கள், போகட்டும்.

அடுத்து, ‘அயோத்திதாசப் பண்டிதர் பற்றி திமுக-வினருக்குத் தெரியுமா’ என்று சீமான் கேட்டிருக்கக் கூடாதுதான். திரு. ஸ்டாலின் அவர்களுக்கு என்ன தெரியும் என்று வேண்டுமானால் கேட்டிருக்கலாம்.

அதற்குத்தான் அவரே, ‘அது பற்றி விளக்கமாகப் பேச வேண்டும் என்றால் ஆ.ராசாவை கேளுங்கள். விவாதியுங்கள்’ என்று தள்ளிவிடுகிறார். இது ஒருவித ஒதுக்குதல் போலும்..

ஆ.ராசாவுக்கு 2.ஜி. முறைகேடு பற்றிதான் தெரியும்.

தவறாக நினைக்க வேண்டாம். ‘பிரதமர் மன்மோகன்சிங்தான் காரணம். அவருக்கு தெரியாமல் 2.ஜி-யில் ஒரு அசைவும் இல்லை’ என்று காங்கிரஸ் மீது குற்றம் சாட்டி புத்தகம் போடுமளவிற்கு விஷயமறிந்தவர் தான் என்கிறேன். அதுவேறு.

அயோத்திதாசப் பண்டிதர்- அம்பேத்கர் விஷயத்திற்கு வருவோம்.

அவர்களுக்காக, முதன் முதலாக எழுதியது- புத்தகம் போட்டது, அம்பேத்கர் புத்த மதம் மாறிய போது, பெரியார் அங்கே சென்று வந்தது எல்லாம் கேள்வியல்ல. அவர்களின் கொள்கையை எந்தளவிற்கு ஏற்று-நடைமுறைப்படுத்தியிருக்கிறீர்கள் என்பதே கேள்வி.

எத்தனை தலித்துகள் மாவட்ட செயலாளர்களாக இருக்கிறார்கள்? எத்தனை தலித்துகள் மாநில நிர்வாகத்தில் உள்ளார்கள்? எத்தனை தலித்துகள் பொதுத் தொகுதியில் நிறுத்தியுள்ளீர்கள்? தலித்துகளின் எத்தனை ஏக்கர் பஞ்சமி நிலத்தை மீட்டுக் கொடுத்துள்ளீர்கள்?

இவைகள் ஏதும் செய்யாத உங்களுக்கு அயோத்திதாசரைத் தெரியுமா? அம்பேத்காரைத் தெரியுமா? என சீமான் கேட்டதில் என்ன தவறு?

அதற்கு ஏன்..?இவ்வளவு பதற வேண்டும். இவ்வளவு கதற வேண்டும்.?! என்றும் தெரியவில்லை.

பா.ஏகலைவன்