July 28, 2021

ரஜினிக்கு மிரட்டல் கடிதம் அனுப்பிய ஹாஜி மஸ்தான் (பேரன்) யார்?

ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் ‘2.0’ படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. அப்படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. அதனைத் தொடர்ந்து ரஞ்சித் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியுள்ளார். தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார். மே 28ம் தேதி முதல் சென்னையில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இப்படம் மும்பை தாதா ஹாஜி மஸ்தானின் கதை என்று தகவல்கள் வெளியானது.

rajani may 13

இதையடுத்து ஹாஜி மஸ்தானின் வளர்ப்பு மகன் சுந்தர் சேகர் மிஸ்ரா ரஜினிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், “இயக்குநர் ரஞ்சித் எனது தந்தையைப் பற்றிய கதையை சினிமாவாக எடுப்பதாகவும், அதில் நீங்கள் நடிக்கவிருப்பதாக ஊடகங்களின் செய்திகள் வாயிலாக அறிந்தேன்.

எனது தந்தையை நிழல் உலகதாதா மற்றும் கடத்தல்காரர் போன்று சித்தரித்துப் படம் எடுக்கக்கூடாது. அவரை எந்தவொரு நீதிமன்றமும் குற்றவாளி என்று கூறவில்லை. அவரைப் பற்றிய படமொன்றால் என்னிடம் வாருங்கள். அவருடைய முழுக்கதையையும் உங்களுக்குச் சொல்கிறேன்.

அவரது வாழ்க்கையை எனக்கும் சினிமாவாக எடுக்க ஆசையுள்ளது. ஆகையால், அவரை நீங்கள் தவறாக சித்தரித்துப் படம் எடுத்தால், தங்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.முன்னதாக, இப்படம் ஹாஜி மஸ்தானின் கதை அல்ல என்று இயக்குநர் ரஞ்சித் அறிவித்திருந்தார் என்பது நினைவுக் கூறத்தக்கது.

அது சரி.. யார் இந்த ஹாஜி மஸ்தான் என்று தேடினோம். கிடைக்கிறது, இந்த ராமநாதபுர தாதா பற்றி ஏராளமான தகவல்கள்.

மஸ்தான் ஹைதர் மிர்சா அல்லது ஹாஜி மஸ்தான் என்கிற இவர் ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளத்தில் பிறந்தவர். 8 வயதில் தந்தையுடன் மும்பை சென்றார். 1944ல் துறைமுகத்தில் சுமைதூக்கும் தொழிலாளியானார். பிறகு கரீம் லாலா என்பவருடன் இணைந்து பணியாற்றினார். 1960களில் பெரும் பணக்காரர் ஆனார். வரதாபாய் என்கிற வரதராஜ பெருமாளுடன் நெருக்கமான இவர், பின்னர் அவருடன் இணைந்து பல்வேறு தொழில்கள் செய்தார். ரியல் எஸ்டேட், சினிமா பைனான்ஸ் உட்பட பல்வேறு தொழில்கள் செய்து வந்த மஸ்தான், மும்பை தாராவி பகுதியில் தமிழர்களின் பாதுகாவலர்களாக வலம் வந்தார்.

திரைப்படங்களையும் தயாரித்துள்ள இவருக்கு அமிதாப் பச்சன், திலிப் குமார், ராஜ்கபூர், தர்மேந்திரா உட்பட பலர் தோஸ்து. இந்திய நெருக்கடி நிலைக் காலத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். 1984 முதல் அரசியலில் ஈடுபட்ட இவர், 1985 ல் தலித் முஸ்லீம் நல்வாழ்வு மகா சங்கத்தை மும்பையில் தொடங்கினார். 1994ஆம் ஆண்டு புற்றுநோயால் மரணமடைந்தார்.

அமிதாப்பச்சன் நடித்து 1975ல் வெளியான ’தீவார்’ எனும் இந்தி படம் ஹாஜி மஸ்தானின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது. இதுதான் தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் ’தீ’ என்ற பெயரில் உருவானது.2010 ஆம் ஆண்டு அஜய் தேவ்கான் நடிப்பில் வெளியான ’ஒன்ஸ் அபான் அ டைம் இன் மும்பை’ இந்திப் படம், மஸ்தான் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டதுதான் என்பது அடிசினல் தகவல்.