டப்பாவாலாக்கள் புதுசாக ஆரம்பிக்கப் போகிறார்கள் கூரியர் சர்வீஸ்!

டப்பாவாலாக்கள் புதுசாக ஆரம்பிக்கப் போகிறார்கள் கூரியர் சர்வீஸ்!

சர்வதேச புகழ் பெற்ற டப்பா வாலாக்கள் மும்பையில் பல வருடமாக உணவு வழங்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அலுவலகம் செல்பவர்களுக்கு, வீட்டில் இருந்து கொடுக்கப்படும் மதிய உணவை கொண்டு கொடுப்பதே இவர்கள் பணி. ஒருவரிடம் 1000 மதிய உணவு டப்பாக்களை கொடுத்தால் கூட அவர்கள் சரியா போய் கொடுத்து விடுவார்கள். சமீப காலமாக இவர்கள் ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தை உணவு வழங்க பயன்படுத்தி வரும் நிலையில் இந்த டப்பாவாலாக்கள் இப்போது கூரியர் பணியிலும் இறங்க உள்ளனர். அதற்கான திட்டம் விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது.

இந்தியாவின் இதயம் என்று சொல்லப்படும் மும்பையில் 1890 -ம் ஆண்டு முதல் மதிய உணவுகளை 2 லட்சம் டப்பாக்கள் மூலம் பயணிகள் ரயில் மற்றும் சைக்கிள்களில் எடுத்துச் செல்லும் பணியில் 5000 டப்பா வாலாக்கள் ஈடுபடுகின்றனர். அதாவது பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் மும்பை (அப்போது பாம்பே என அழைக்கப்பட்டது) வளர்ந்துவரும் வர்த்தக மையமாகத் திகழ்ந்தது. அந்தச் சமயத்தில், ஆங்கிலேய வியாபாரிகளும் சரி இந்திய வியாபாரிகளும் சரி, தங்களுடைய அலுவலகங்களுக்கு வெகு தூரம் பயணிக்க வேண்டியிருந்தது. வாகனங்கள் மந்தகதியில் ஓடின, ஓட்டல்களும் குறைவாகவே இருந்தன. அலுவலகத்திற்குச் செல்வோர் வீட்டுச் சாப்பாட்டையே விரும்பியதால், வீட்டிலிருந்து அலுவலகத்திற்கு மதிய உணவைக் கொண்டு தர வேலையாட்கள் அமர்த்தப்பட்டார்கள். தொழிலில் தொலைநோக்கு பார்வையுடைய ஒருவர் இந்த சந்தர்ப்பத்தை நன்கு பயன்படுத்திக் கொண்டார்; கிராமப் புறங்களில் வேலையில்லாமல் இருந்த இளைஞர்களை வேலைக்கு அமர்த்தி, வீடுகளிலிருந்து அலுவலகங்களுக்குச் சாப்பாட்டை எடுத்துச் செல்லும் தொழிலைத் தொடங்கினார். சிறியதாய்த் துவங்கப்பட்ட அந்தத் தொழில் சக்கைப்போடு போட ஆரம்பித்தது.

வீட்டுச் சாப்பாட்டிற்கான மோகம் இன்றும் குறையவே இல்லை. இப்போது திரும்பிய பக்கமெல்லாம் ஓட்டல்கள் இருப்பது உண்மைதான்; ஆனாலும், ஓட்டல் சாப்பாட்டைவிட வீட்டுச் சாப்பாடுதான் அதிக செலவில்லாதது, எல்லாரும் விரும்புவது. அதுமட்டுமல்ல, நிறையப் பேருக்கு உடல்நலப் பிரச்சினைகள் இருப்பதால் அவர்கள் பத்திய உணவையே சாப்பிட வேண்டியிருக்கிறது. மற்ற சிலரோ, மதக் கட்டுப்பாடுகள் காரணமாக எல்லா வகையான உணவுகளையும் சேர்த்துக்கொள்வதில்லை. சிலருக்கு வெங்காயம் ஆகாது, இன்னும் சிலருக்குப் பூண்டு பிடிக்காது. இதையெல்லாம் ஓட்டல் சாப்பாட்டில் சேர்த்திருப்பார்கள். வீட்டிலிருந்து அலுவலகத்திற்கு உணவைக் கொண்டு செல்வது இந்தப் பிரச்சினைகளுக்கெல்லாம் பரிகாரமாக இருக்கும்.

வருடங்கள் பல உருண்டோடிய போதிலும், உணவை எடுத்துச் செல்லும் இந்த எளிய முறை இன்னும் மாறவே இல்லை; ஆனால், பெரியளவில் செய்யப்பட்டு வருகிறதென்று சொல்லலாம். இன்று, 5,000-க்கும் அதிகமான ஆண்களும் சில பெண்களும் ஒரு நாளில் 2,00,000 மதிய உணவை எடுத்துச் செல்கிறார்கள்; அவர்கள் தங்களுடைய ஏரியாவில் உள்ள வாடிக்கையாளர்களின் வீடுகளிலிருந்து, இரண்டு கோடிக்கும் மேலான மக்கள் வாழ்கிற இந்த நகர்புறத்தில் ஆங்காங்கே சிதறிக்கிடக்கிற அலுவலகங்களுக்கு உணவை எடுத்துச் செல்கிறார்கள். சுமார் 60 கிலோமீட்டர் (40 மைல்) சுற்றளவுக்குள் இந்த டப்பாவாலாக்கள் வலம் வருகிறார்கள்; சிலர், 30 அல்லது 40 டிஃபன் கேரியர்களைத் தள்ளுவண்டிகளில் எடுத்துச் செல்கிறார்கள்.

இன்னும் சிலர், சைக்கிளிலோ ரயில்களிலோ எடுத்துச் செல்கிறார்கள். எப்படியானாலும், அவர்கள் உரிய உணவை, உரிய நபரிடம், உரிய சமயத்தில் சேர்த்துவிடுகிறார்கள். சொல்லப்போனால், 60 லட்சம் பேருக்கு சாப்பாடு எடுத்து செல்கிறார்கள் என்றால் அதில் ஒரு தவறு மட்டுமே ஏற்படுகிறதாம்! உழைப்பை மட்டுமே நம்பும் இந்த மும்பை டப்பா வாலாக்கள் இதுவரை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதே இல்லை.இந்நிலையில் உணவு எடுத்துச்செல்லும் பணியுடன் கூரியர் மற்றும் பார்சல்கள் எடுத்துச் செல்லும் பணியிலும் இறங்க உள்ளனர்.

இது குறித்து டப்பா வாலாக்கள் சங்கத்தின் செய்தி தொடர்பாளர் சுபாஷ் தலேகர், “உணவு எடுத்துச் செல்லும் பணியுடன் கூரியர் மற்றும் பார்சல் சேவை திட்டம் இறுதி செய்யப்பட்டுள்ளது. எங்களது சங்க உறுப்பினர்களிடம் கலந்தாலோசித்து 15 நாட்களில் அமல்படுத்த உள்ளோம். பணி முடிந்து ஒய்வு நேரத்தில் கூரியர் மற்றும் பார்சல் சேவையினை டாப்பா வாலாக்கள் செய்யலாம். இதன் மூலம் டப்பா வாலாக்கள் கூடுதல் வருமானம் ஈட்ட முடியும்”என்று தெரிவித்தார்

Related Posts

error: Content is protected !!