January 30, 2023

முகுந்தன் உண்ணி அசோசியேட்ஸ் -மலையாளப் பட விமர்சனம்!

லகில் சாதாரணமாக இருந்து பெரிய பணக்காரனாகும் அனைவரும் நியாயமாக உழைத்து சம்பாதித்தவர்கள் என நினைத்தால் நீங்கள் ஒரு முட்டாள் .. ஆம்.. இது பணக்காரனாக முயலும் ஒரு 35 வயது ( அந்த வயது ரகசியம் படத்தில் ) இளைஞனின் கதை. 40 வயதிற்குக்குள் முழுசாக செட்டிலாகிவிட அவன் என்னவெல்லாம் செய்கிறான்.. எந்த எல்லைக்கு போகிறான் என்பது தான் படம். படம் முழுக்க நடப்பது அனைத்தும் அநியாயம். ஆனால் நாம் அதை கண்டும் காணாமல் நாயகன் பின் ஒடிக்கொண்டிருப்பது போன்ற அட்டகாசமான திரைக்கதை .. சிம்பிளாக சொல்வதானால் ரோட் ஆக்சிடெண்ட் இன்சூரன்ஸ் கிளைமில் நடைபெறும் முறைகேடுகளையும், ஊழல்களையும் ஒரு லாயர் கேரக்டர் அம்பலமாக்குகிறது.

கொஞ்சம் விரிவாகச் சொல்வதானால் சட்டம் படித்து விட்டு ஒரு சீனியர் லாயரிடம் ஜூனியராகப் பணியாற்றி வருகிறார் 35 வயது நிரம்பிய வினீத் சீனிவாசன். இன்னமும் திருமணம் செய்ய முடியாமல் வயதான தாயாருடன் மத்திய தர குடும்ப வாழ்க்கையை வாழந்து வரும் வினீத்திற்கு தான் ஒரு மிகப் பெரிய வக்கீலாக வேண்டும். காசு, பணம் நிறைய சம்பாதிக்க வேண்டும். கல்யாணம் செய்ய வேண்டும் என்று நிறைய ஆசைகளும் உண்டு. இதனால் தனக்கு ஒரு பெரிய கேஸ் கிடைத்தால் தனது வாழ்க்கையில் மாற்றம் வரும் என்று நம்பி தன் சீனியரின் வாடிக்கையாளரான தொகுதி எம்.எல்.ஏ.விடமே அவருடைய கேஸை தன்னிடம் கொடுக்கும்படி கேட்கிறார். இதனால் வேலையில் இருந்து துரத்தப்படுகிறார் வினீத்.

அடுத்து என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கும்போது அவருடைய அம்மாவுக்கு வீட்டிலேயே விபத்து ஏற்பட்டு காலில் கட்டு போட வேண்டி வருகிறது. இதற்காக மருத்துவமனைக்கு வந்தவருக்கு ஒரு ஒளிமயமான எதிர்காலத்தைக் காட்டுகிறார் இன்னொரு வழக்கறிஞரான சூரஜ் வெஞ்சாரமூடு. விபத்தில் அடிபட்டு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளிடம் அனைவருக்கும் முந்திக் கொண்டு வக்காலத்தில் கையெழுத்தி வாங்கி தானே அவர்களுக்கு திடீர் வக்கீலாகி, விபத்தினால் ஏற்பட்ட காயத்திற்கு நஷ்ட ஈடு என்று சொல்லி இன்சூரன்ஸ் கம்பெனியிடம் நிறைய பணத்தை வாங்கி அதில் தனக்கென்று பீஸை எடுத்துக் கொண்டு, மீதத்தை நோயாளியிடம் தருவதுதான் சூரஜின் வேலை.

இந்த ட்ரிக்கான டூட்டியைப் பார்த்த வினீத்திற்கு நாமும் இதுபோல் செய்தால் என்ன என்று தோன்றுகிறது. தன் நண்பனை பக்கத்தில் வைத்துக் கொண்டு அதே மருத்துவமனையில் சூரஜையும் முந்திக் கொண்டு இந்த இன்சூரன்ஸ் கிளெய்ம் தொழிலில் ஈடுபடுகிறார் வினீத். இதில் கொஞ்சம், கொஞ்சமாக முன்னேறும் வினீத் ஒரு கட்டத்தில் சூரஜையே டேக் ஓவர் செய்து அவரை வெளியே அனுப்பிவிட்டு தனிக்காட்டு ராஜா போல் அந்தக் கல்லாரா பகுதியின் ஆஸ்தான இழப்பீட்டு வக்கீலாக மாறுகிறார். ஆனால் அவர் செய்த ஒரு தவறின் காரணமாக அவரது வக்கீல் தொழிலுக்கே ஆபத்து ஏற்படும் சூழல் ஏற்படுகிறது. இதனால் சூரஜூக்கும், இவருக்கும் இடையில் போட்டி, பொறாமை ஏற்பட்டு மோதலும் ஏற்படுகிறது. அதனால் வீனீத் எதிர் கொள்ளும் தடைகள் என்ன..? இதை மீறி அவரால் ஜெயிக்க முடிந்ததா..? என்பதுதான் முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ்’படக் கதை.

லாயர் கேரக்டரில் வரும் நாயகன் வினீத் ஸ்ரீனிவாசன் பாடிலாங்குவேஜ் மற்றும் நடிப்பில் ஒரு வக்கீலாகவே வாழ்ந்து உள்ளார். தனக்கு வரும் எதிர்ப்புகளை லாபகரமாக அவர் கையாளும் இடங்களில் கைதட்டல்கள் பறக்கிறது. ஒவ்வொரு முறையும் ஒரு பிரச்சனையில் மாட்டிகொண்டு எப்படி இதில் இருந்து வர போகிறார் என்ற எதிர்பார்ப்பு பார்வையாளர்களுக்கும் ஏற்படுகிறது. அதிலும் பஸ்ஸில் மனைவியோட ஹனிமூன் போகும் போது போடும் திட்டமும் அந்த சீக்குவன்ஸில் அவரோட நடிப்பு அட்டகாசம். . சுராஜ் நடிப்பு பற்றி தனியே சொல்லத் தேவையில்லை. சின்ன சின்ன முக அசைவுகளிலேயே தன் வில்லத்தனத்தை காட்டும் அவர் இறந்த பின்னாலும் அவ்வப்போது வினீத்தின் நினைவுகளில் வந்து ஆலோசனைகள் சொல்லிக் கொண்டிருப்பதும் ரசிக்கும்படியே இருக்கிறது.

படத்தின் ஆதார சக்தியே அதன் சுவாரசியமான திரைக்கதைதான். தன் முன்னே நடக்கும் ஒவ்வொரு விஷயங்களையும் புரிந்து கொண்டு அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள நினைக்கும் வினித்தின் நகர்வுகள் நமக்கும் புரிந்து விடுவது ஆரவத்தை அதிகரிக்கிறது. சில பல வழக்கறிஞர்கள் வக்கீல் தொழிலை மட்டும் செய்வதில்லை, மருத்துவர்கள் மருத்துவம் மட்டும் பார்ப்பதில்லை.காவல் துறையினர் காவல் பணிகளை மட்டும் செய்யவில்லை. அனைவரும் ஒரு விபத்து நடந்தால் பணத்தின் பின்னால் ஓடுகிறார்கள் உண்மையை எந்த வித சமரசமும் இல்லாமல் சொல்லி இருக்கிறார் டைரக்டர்.இப்படி துணிவுடன் ஒரு படம் தந்ததற்கு இந்த டீமை பாராட்டலாம்.!

மொத்தத்தில் இந்த முகுந்தன் உண்ணி அசோசியேட்ஸ் –மிரட்சி

மார்க் 3.5/5