புதிய ஜியோ இயங்குதளங்கள், 5ஜி மற்றும் டிஜிட்டல் சேவைகள்! – முகேஷ் அம்பானி அறிவிப்பு!
இந்தியாவின் டாப் தொலைதொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 43 வது ஆண்டு பொதுக் கூட்டம் இன்று நடந்தது. அதில் ஜியோ இயங்குதளங்கள், 5ஜி மற்றும் டிஜிட்டல் சேவைகள் போன்ற பகுதிகளில் ஜியோவின் பங்கு குறித்து சில முக்கிய அறிவிப்புகள் இடம் பெற்றன.
கொரோனா பாதிப்பின் காரணமாக ரிலையன்ஸ் நிறுவனத்தின் வருடாந்திரப் பொதுக்கூட்டம் முதன்முறையாக மெய்நிகர் (virtual) தொழில்நுட்பத்தின் மூலம் நடைபெற்றது. பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி, கொரோனா காலத்திற்குப் பின்னர் இந்தியாவின் வளர்ச்சி அதிவேகமாக இருக்கும் என்று குறிப்பிட்டார். பேஸ்புக் உள்ளிட்ட மிக முக்கிய நிறுவனங்கள் ஜியோவில் ஏற்கனவே முதலீடு செய்துள்ள நிலையில், கூகுள் நிறுவனம் ரூ.33,737 கோடி முதலீடு செய்து, 7.7 சதவிகித பங்குகளை வாங்க இருப்பதாக முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார்.
இதன் மூலம், குறுகிய காலத்தில் மிகப்பெரிய முதலீடுகளை ஈர்த்த நிறுவனமாக ஜியோ இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார். ஜியோ 5 ஜி சேவை வெகு விரைவில் தொடங்கும் என்று கூறிய முகேஷ் அம்பானி, உலகத்தரத்தில் இந்த சேவை இருக்கும் என்றார். மேலும், மற்ற தொலைத் தொடர்பு ஆபரேட்டர்களுக்கு 5 ஜி சேவைக்கு ஜியோ இயங்குதளங்கள் நிலை நிறுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.இந்த நிகழ்ச்சியில், ஜியோ மீட், ஜியோ மார்ட், ஜியோ க்ளாஸ், ஜியோ டிவி பிளஸ் ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டன.
ஜியோ டிவி பிளஸ்-ஐ பொறுத்தவரை, அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ், ஹாட்ஸ்டார் போன்ற அனைத்து OTT தளங்களையும் ஒருங்கிணைக்கிறது. தனித்தனி லாக் இன் இல்லாமல், ஒரே லாக் இன் கீழ் அனைத்து தளங்களையும் பார்க்க முடியும்.மேலும், குரல் தேடுதல் மூலமும் தேவையான படங்களை தேடி எடுக்க முடியும். இவற்றுடன் தொலைக்காட்சி சேனல்களும் இதில் இடம்பெற்றுள்ளன.
Mukesh D. Ambani welcomes @Google as an esteemed partner in Jio.@GoogleIndia @SundarPichai#RILAGM #NayeIndiaKaNayaJosh #Jio #Google #JioPlatforms pic.twitter.com/3jgbH45GPb
— Reliance Jio (@reliancejio) July 15, 2020
கூகுள் மற்றும் ஜியோ இணைந்து குறைந்த விலையில் 5ஜி ஸ்மார்ட்போன்கள் தயாரிக்க உள்ளதாக முகேஷ் அம்பானி குறிப்பிட்டார். இந்தியாவில் இருந்து 2ஜி சேவையை முற்றிலும் நீக்கி, புதிய தொழில்நுட்பத்தை அனைவருக்கும் வழங்குவோம் என்று அவர் குறிப்பிட்டார். தற்போது வரை 100 மில்லியன் ஜியோ போன்கள் விற்கப்பட்டுள்ளன. கூகுள் மற்றும் ஜியோ இணைந்து புதிய வலிமை மிக்க ஆண்ட்ராய்டு தளத்தில் இயங்கும் ஆபரேடிங் சிஸ்டத்தை தயாரிக்க உள்ளது என்றும் முகேஷ் அம்பானி கூறினார்.