ரூ.1500-டெபாசிட் கட்டினால் 4ஜி சேவையுடன் ஜியோ போன் இலவசம்!-முகேஷ் அம்பானி அறிமுகம்

டெலிகாம் மற்றும் மொபைல், ஸ்மார்ட் போன் சந்தையில் பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கிய ஜியோ போனை முகேஷ் அம்பானி இன்று (வெள்ளிக்கிழமை) அறிமுகப்படுத்தினார். ஜியோ வாடிக்கையாளர்கள், ரூ.1500 டெபாசிட் தொகையை செலுத்திவிட்டு ஜியோ போனை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் என்று ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் மாதந்தோறும் ரூ.153 செலுத்தி எண்ணற்ற இணையவசதியை வாடிக்கையாளர்கள் பெறலாம் என்று ரிலையன்ஸ் நிறுவனம் கூறியுள்ளது.

ஸ்மார்ட் போன் அம்சங்கள் அடங்கிய ஜியோ போனை அறிமுகப்படுத்திவிட்டு அறிமுக விழாவில் முகேஷ் அம்பானி பேசும்போது, “வாடிகையாளர்களுக்கு குறைவான விலையில் டேட்டா மற்றும் சாதனங்களை வழங்குவதன் மூலம் டிஜிட்டல் குறைபாடு மற்றும் நியாமற்ற தன்மைகளை ஜியோ முடிவுக்கு கொண்டுவரும் என்று உறுதியளிக்கிறது. ஆகஸ்ட் 15 முதல் ஜியோ போன் விற்பனைக்கு வரவுள்ளது. ஆகஸ்ட் 24 முதல் இதனை முன் பதிவு செய்து பெற்று கொள்ளலாம். அனைத்து ஜியோ போன்களும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டுள்ளன.

சுமார் 10 கோடி வாடிக்கையாளர்களை பெற்று ஜியோ சாதனைப்படுத்தியுள்ளது.ஒவ்வொரு நொடிக்கும் ஜியோவில் 7 வாடிக்கையாளர்கள் இணைக்கிறார்கள். எங்கு வேண்டுமானலும் இலவச அழைப்புகளை மேற்கொள்ளும் வசதியை நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளோம். புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள ஜியோ போன் பயன்படுத்துவதற்கு எளிமையானது” என்றார்.