April 12, 2021

கோடீஸ்வரர்களின் பட்டியலில் முதலிடத்தை பிடித்தார் முகேஷ் அம்பானி!

ர்வதேச அளவில் பிரபலமான போர்ப்ஸ்  பத்திரிக்கை வருடா வருடம் இந்தியாவின் டாப் 10 கோடீஸ்வரர் களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2021 ஆம் ஆண்டிற்கான இந்திய கோடீஸ்வரர்களின் பட்டியலில் 6 லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன், ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி முதலிடத்தில் உள்ளார்.

2021ஆம் ஆண்டுக்கான இந்திய கோடீஸ்வரர்களின் பெயர்களை ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது. இதன்படி கடந்த ஆண்டு 102 என்று இருந்த கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை இந்தாண்டு 140ஆக உயர்ந்து மூன்றாவது இடத்தில் உள்ளது, அடுத்தபடியாக ஜெர்மனி 136, ரஷ்யா 117 ஆகியவை பட்டியலில் இடம்பெற்றுள்ளன. (அமெரிக்கா முதலிடத்திலும், 698 கோடீஸ்வரர்களுடன் சீனா இரண்டாவது இடத்திலும் உள்ளன)

நம் இந்தியாவைப் பொறுத்தவரை பணக்காரர் மற்றும் ஆசியாவின் செல்வந்தரான முகேஷ் அம்பானி உலக பணக்காரர்கள் பட்டியலில் 10 வது இடத்தில் உள்ளார். தற்போது 8450 கோடி டாலர் சொத்து மதிப்புடன் ஆசியாவின் பணக்காரர் என்ற இடத்தை அவர் மீண்டும் பெற்றுள்ளார். ஒரு வருடத்திற்கு முன்னர் ஆசியாவின் பணக்காரரான சீனாவின் ஜாக் மாவை அவர் பின்னுக்கு தள்ளியுள்ளார்.

இந்தியாவின் இரண்டாவது பணக்காரரான அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி, உலகளாவிய பணக்காரர்கள் பட்டியலில் 5,050 கோடி டாலர் சொத்து மதிப்புடன் 24 வது இடத்தில் உள்ளார்.

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தியாளரான பூனவல்லா குழுமத்தின் தலைவரும், சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் நிறுவனருமான சைரஸ் பூனவல்லா, ஃபோர்ப்ஸ் பட்டியலில் உலகின் கோடீஸ்வரர்கள் பட்டியலில் 169 வது இடத்தில் உள்ளார். இவரது சொத்துக்களின் நிகர மதிப்பு 1270 கோடி டாலர் ஆகும்.

சைரஸ் பூனவல்லா இந்திய கோடீஸ்வரர்களின் பட்டியலில் ஏழு இடத்தில் உள்ளார்.

இந்தியாவின் மூன்றாவது பணக்காரரான ,எச்.சி.எல் டெக்னாலஜிஸின் நிறுவனர் சிவ் நாடார், உலகளவில் 71 வது இடத்தில் உள்ளார். இவரது நிகர மதிப்பு 2350 கோடி டாலர் ஆகும்.

ஆக நம் நாட்டின் முதல் 10 கோடீஸ்வரர்களில் டிமார்ட் நிறுவனர் ராதாகிஷன் தமானி, கோட்டக் மஹிந்திரா வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி உதய் கோட்டக், ஆர்சலர் மிட்டலின் லட்சுமி மிட்டல், ஆதித்யா பிர்லா குழுமத்தின் தலைவர் குமார் மங்கலம் பிர்லா, சன் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் திலீப் ஷாங்க்வி மற்றும் பாரதி எண்டர்பிரைசின் நிறுவனர் சுனில் மிட்டல் ஆகியோர் அடங்குவர்.