March 22, 2023

கொரோனாவால் ஏற்படும் கருப்புப்பூஞ்சையும் கொள்ளிக்கண்ணும்! – தேவை விழிப்புணர்வு!

டாக்டர் சோனம், தன் முன்னே அமர்ந்திருந்த நோயாளியை முழுமையாக பரிசோதித்து விட்டு அவரை ஒரு கணம் அமைதியாக பார்த்தார்.

– மூக்கடைப்பு
– அவ்வப்போது மூக்கிலிருந்து இரத்தம் வருகிறது,
– அவ்வப்போது மூக்கிலிருந்து கருப்பு அல்லது பழுப்பு நிறத்தில் திரவம் வெளியேறுகிறது.
– உடல் சருமத்தின் நிறம் சற்று கருப்பாக மாறுகிறதாம்.
– கன்னத்தைச் சுற்றி வீக்கம் அல்லது உணர்வின்மை இருக்கிறது.
– பல், தாடை இரண்டுமே வலிக்கிறது.
– கண் இமைகள் இரண்டும் வீங்கி இருக்கிறது.
– பொருட்கள் இரண்டு இரண்டாக தெரிகிறது.
– எல்லாவற்றுக்கு மேலாக, கொரோனாவில் இருந்து சிகிச்சை பெற்று இப்போது தான் சற்று நடமாடுகிறார்.

டாக்டர், மருத்துவ மனையின் மைக்ரோபயாலஜிஸ்ட்டை இண்டர்காமில் அழைத்து தன் அறைக்கு வரச்சொன்னார். அவரும் அந்த நோயாளியை பார்த்துவிட்டு, தன்னுடன் அழைத்துச் சென்றார்.அந்த நோயாளியிடம் பரிசோதனைக்காக சில சாம்பிள்களை எடுத்துக் கொண்டு லேப் உள்ளே சென்றார்.

மறு நாள் – பரிசோதனை முடிவு வந்தது.

அந்த நோயாளிக்கு கருப்புப் பூஞ்சை தொற்று அதன் விளைவாக கொள்ளிக்கண்.

அது என்ன கருப்புப்பூஞ்சை? அது என்ன கொள்ளிக்கண்?

சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனையின், கண் குழி, கண் அழகு மற்றும் கண் பிளாஸ்டிக் சர்ஜரி துறையின் அசோசியேட் கன்சல்டண்ட், டாக்டர் நிஸார் சோனம் பூனம் விளக்குகிறார்.கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்ட மக்களிடையே ஒரு அரிய அதவேளையில் ஆபத்தான சுகாதார கேட்டை விளைவிக்கும் பூஞ்சை தொற்று கண்டறியப்பட்டுள்ளது. (Mucormycosis) மியூகோமிகோசிஸ் எனப்படும் கருப்பு பூஞ்சை கோவிட் 19 நுண் கிருமியின் காரணமாக ஒரு சுகாதார பிரச்சினையை உருவாக்கியுள்ளது. அது கண்களையும் பாதிக்கிறது. பார்வை நரம்பு மூலமாக மூளையையும் பாதிக்கிறது. மூளை பாதிக்கப்படும் போது உயிருக்கும் பாதிப்பு வாய்ப்பு இருக்கிறது.

மியூகோமிகோசிஸ் என்றால் என்ன?

Mucormycosis என்பது mucormycetes எனப்படும் பூஞ்சைகள் தொகுப்பு குழுவால் ஏற்படும் ஒரு தீவிர பூஞ்சை தொற்று ஆகும். இந்த தொகுப்பு பூஞ்சைகள் சுற்றுச்சூழல் முழுவதும் வாழ்கின்றன, மண், தாவரங்கள், காற்று மற்றும் துறைமுகங்கள் போன்ற இடங்களிலும், ஏன் ஆரோக்கியமான மனிதர்களின் மூக்குக்குள் கூட உள்ளன.

– கட்டுப்பாடற்ற நீரிழிவு நோயாளிகள்,
– புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள்,
– எச்.ஐ.வி தொற்று,
– நீண்ட கால நோயெதிர்ப்பு தடுப்பு மருந்துகளில்
– உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட பலவீனமான நோயெதிர்ப்பு சக்தி உள்ளவர்களை இது பொதுவாக பாதிக்கிறது. தற்போது சார்ஸ் – கோவிட் 2 நோயெதிர்ப்பு மண்டலத்தின் சீரழிவை ஏற்படுத்துவதால், மேற்குறித்த நோயாளிகளில் இந்த பூஞ்சை தொற்றுநோயை அதிக எண்ணிக்கையில் தற்போது காண்கிறோம். இது முக்கியமாக சைனஸ்கள் அல்லது நுரையீரலைப் பாதிக்கிறது மற்றும் கண் இமைகள் மற்றும் மூளையைச் சுற்றியுள்ள இடத்திற்கு பரவுகிறது.

மியூகோமிகோசிஸின் இந்த திடீர் தாக்குதல் ஏன் நிகழ்கிறது?

இந்த தாக்குதல் பல்வேறு காரணிகளின் கூட்டு முயற்சியாகும்.

• கட்டுப்படுத்தப்படாத நீரிழிவு நீரிழிவு நோய், நீண்ட காலமாக முறையான ஸ்டெராய்டுகள் எடுத்துக் கொள்வது, நீண்டகால ஐ.சி.யூ வார்டுகளில் தங்கியிருத்தல்ய், மற்றும் நோயெதிர்ப்பு தடுப்பு மருந்துகளுடன் இருத்தல்.
• இது தவிர, கொரோனா வைரஸ் நமது உடலில் உள்ள தோலில் மேலடுக்கான எண்டோடெலியல் செல்கள் மீது ஒரு தொடர்பு வைத்துள்ளது. இந்த நுண்ணுயிரி கணையத்தை பாதிக்கும் மேலும் இன்சுலின் சுரப்பை மாற்றி இன்சுலின் எதிர்ப்பு மற்றும் இரத்த சர்க்கரை அளவையும் அதிகரிக்கும்.
• நீரிழிவு நோய் இல்லாதவர்களிடம் கூட இந்த மியூகோர் சளி தொற்று நோயாளிகளில் பெரும்பாலோர் இரத்தத்தில் அதிக சர்க்கரை அளவைக் கொண்டிருக்கிறார்கள். நமது உடலில் கிடைக்கும் இரும்பு மற்றும் சர்க்கரை இந்த பூஞ்சைக்கு ஒரு இலவச விருந்து போன்றவை!
• இரண்டாம் நிலை தொற்று மற்றும் மாசு பரவுவதும் ஒரு சாத்தியமான காரணமாகும், இருப்பினும், அறிகுறியற்ற மற்றும் வீட்டு தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகளுக்கும் கூட இந்த பூஞ்சை தொற்று இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்பதும் வேதனையான

இந்த பூஞ்சை தொற்றினை ஆரம்ப நிலையில் எவ்வாறு கண்டுபிடிக்க முடியும்?

இந்த பூஞ்சைத் தொற்றின் ஆரம்ப அறிகுறிகள் மற்றும் அடையாளங்கள்:

• மூக்கடைப்பு
• மூக்கிலிருந்து இரத்தம் வருதல், மூக்கிலிருந்து கருப்பு அல்லது பழுப்பு நிறத்தில் திரவம் வெளியேறுதல்
• சருமத்தின் கறுப்பு நிறமாற்றம்
• கன்னத்தைச் சுற்றி வீக்கம் அல்லது உணர்வின்மை
• ஒரு பக்க முக வலி
• பல் வலி அல்லது தாடை வலி
• கண் இமைகள் அல்லது கண் இமை வீக்கம்
• இரட்டை பார்வை
• கண்கள் சிவப்பாக காணப்படுதல்
• பார்வை திடீரென குறைதல்

கோவிட்டுக்கு சிகிச்சையளிக்கப்பட்ட 2-3 வாரங்களுக்குப் பிறகு சங்கர நேத்ராலயாவிற்கு சிகிச்சைக்கு வந்த நோயாளிகளுக்கு இந்த அறிகுறிகளுடன் தொற்று பாதிக்கப்பட்டு இருப்பதை கவனித்தோம். மேலும் கோவிட் பாசிட்டிவ் என்று பரிசோதனை முடிவு தெரிந்த 5-6 நாட்களிலேயே இந்த பூஞ்சை தொற்றுடன் சில நோயாளிகள் வருவதையும் கவனித்தோம் எம்.ஆர்.ஐ ஸ்கேன் (சைனஸ், கண் குழி சுற்றுப்பாதை மற்றும் மூளை போன்ற பகுதிகளை) பரிசோதனை இந்த நோயின் அளவை மதிப்பிடுவதற்க்கும் அதற்கான சிகிச்சையை தீர்மானிப்பதற்கும் உதவி செய்யும்.
பொதுவாக மூக்கிலிருந்து ஒரு திசு சாம்ப்பிளை எடுத்து ஒரு எளிய பயாப்ஸி பரிசோதனை மூலம் இந்த நோயை உறுதிப்படுத்த முடியும். நுண்ணுயிரியலாளர்கள் பொட்டாசியம் ஹைட்ராக்சைடு (KOH Stain) கறை பரிசோதனை முறையில் இந்த இடைவெளியேதுமில்லாத பூஞ்சையை உடனடியாகக் காணலாம்.

இதற்கு என்ன சிகிச்சை வழங்கப்படுகிறது?

ஆம்போடெரிசின் பி எனப்படும் பூஞ்சை எதிர்ப்பு மருந்து இந்த நோய்த்தொற்றுக்கான தேர்வுக்கான சிகிச்சையாகும். இந்த பூஞ்சை கண்ணிலிருந்து மூளைக்கு பரவும் ஆபத்து அதிகச் அளவில் இருப்பதால், கண் ஈடுபடும்போது ஆம்போடெரிசின் லிபோசோமால் முறையில் சிகிச்சை தேவைப்படுகிறது. ஒரு மருத்துவரின் கடுமையான வழிகாட்டுதலின் கீழ் 4-6 வாரங்களுக்கு மேலாக மருந்து கொடுக்கப்பட வேண்டும். மேற்குறித்த சிகிச்சையின் முடிவைப் பொருத்து, இரண்டாவது தேர்வு பூஞ்சை எதிர்ப்பு போசகோனசோல் ஆகும், இது முதல் வரிசை சிகிச்சையான ஆம்போடெரிசின் பி மீதான முடிவை மதிப்பிட்ட பிறகு தொடங்கலாம்.பூஞ்சை சுமையை குறைப்பதற்கும், இறந்த அனைத்து திசுக்களையும் அகற்றுவதற்கும் ஒரு அறுவைசிகிச்சை உடனடியாக தேவை. ( நாசி எண்டோஸ்கோபிக் சிதைவு மற்றும் கண்ணைச் சுற்றியுள்ள பாதிக்கப்பட்ட மற்றும் நெக்ரோடிக் திசுக்களின் சுற்றுப்பாதையை நீக்குதல்) விரைவாக செய்யப்பட வேண்டும்! சில நேரங்களில் நோயாளியின் உயிரைக் காப்பதற்காக கண் மற்றும் அதைச் சுற்றியுள்ள கட்டமைப்புகளை அகற்றும் அறுவை சிகிச்சை (விரிவாக்கம்) தேவைப்படலாம்.

இந்த இரட்டைக்கொள்ளிக்கண் பூஞ்சை தொற்றினை தடுப்பது எப்படி?

• இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துதல் மற்றும் கண்காணித்தல்
• ஸ்டீராய்டு (ஊக்க மருந்துகள்)களை முறைப்படி உபயோகித்தல்.
• ஆவி பிடிப்பதற்க்கு சுத்தமான நீரைப் பயன்படுத்துங்கள்.
• கோவிட் டிலிருந்து குணமடைந்த பின்னரும் அறிகுறிகள் மற்றும் அடையாளங்களைக் கண்காணிக்கவும்.
• நல்ல தனிப்பட்ட சுகாதாரத்தைப் பேணுதல்
• தோட்டவேலைகள் செய்யும் போது அல்லது மண்ணில் வேலை பார்க்கும் போது பாதுகாப்பு கருவிகளை அணியுங்கள்.
• தூசி நிறைந்த இடங்களுக்குச் செல்லும்போது முகக்கவசம் அணியுங்கள்.

எல்லா இடங்களிலும் பூஞ்சை உள்ளது. அதை எதிர்ப்பதற்கு ஒரு வலுவான நோய் எதிர்ப்பு சக்தியை நாம் கட்டியெழுப்ப வேண்டும், அதை விரைவாகக் கண்டறிந்து, பார்வையை மட்டுமல்ல, உயிரையும் காப்பாற்ற ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

கட்டுரை:
முனைவர் அ போ இருங்கோவேள்
மருத்துவ சமூகவியலாளர்
சங்கர நேத்ராலயா, சென்னை 6.