காஷ்மீரில் ரோந்து பணியில் ஈடுபடப் போகும் கர்னல் மகேந்திர சிங் தோனி!

இந்திய ராணுவத்தில் அங்கம் வகிக்க வேண்டும் என்று நான் விரும்பி இருக்கிறேன். சிறு வயதில் இருந்தே இந்திய ராணுவத்தில் சேர வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தேன் என்று பல்வேறு பேட்டிகளில் சொல்லி வந்த நிலையில் தற்போது ராணுவத்தில் கவுரவ லெப்டினன்ட் கர்னலாக உள்ள கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி வரும் ஜூலை 31ம் தேதி முதல் காஷ்மீரில் ராணுவத்தினருடன் சேர்ந்து ரோந்து பணிகளில் ஈடுபட உள்ளார்.

நியூசிலாந்திற்கு எதிரான உலகக் கோப்பை அரையிறுதியில் இந்தியா தோல்வியடைந்ததில் இருந்து மகேந்திர சிங் தோனியின் எதிர்காலம் குறித்து ஊகங்கள் பல செய்திகளை வெளியிட்டு வருகின்றன. இதையடுத்து, ஆகஸ்ட் 3ம் தேதி தொடங்கும் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப் பயணத்திற்கான இந்திய அணியை பிசிசிஐ தேர்வு செய்தவுடன், தோனியின் எதிர்கால திட்டங்கள் குறித்த தெளிவான தகவல்கள் கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் தோனி, தனது துணை ராணுவ படைப்பிரிவுக்கு சேவை செய்ய விளையாட்டில் இருந்து 2 மாத ஓய்வு எடுப்பதாக பிசிசிஐக்கு தெரிவித்தார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப் பயணத்தில் அவர் கலந்துகொள்ளவில்லை.

அடுத்த 2 மாதங்களுக்கு ராணுவத்தில் தங்கி பயிற்சி பெறப்போவதாக அறிவித்திருந்தார். மேலும், இதற்காக பாராசூட் ரெஜிமெண்டுடனே தங்கி பயிற்சி பெற அனுமதி கோரியிருந்தார். அதனை பரிசீலித்த இந்திய ராணுவத் தளபதி பிபின் ராவத், தோனியை 106வது பட்டாலியன் பிரிவில் இணைத்து இயங்க அனுமதிப்பதாகத் தெரிவித்தார்.

இந்நிலையில், பெங்களூருவில் உள்ள ராணுவ தளத்தில் நேற்று தன் பயிற்சிகளை தொடங்கி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. பெங்களூருவில் உள்ள ராணுவ முகாமில் ஜூலை 31ந்தேதி வரை தங்கி இருப்பார் எனத் தெரிகிறது.

106வது பட்டாலியனில் இணையவுள்ள தோனி முதற்கட்டமாக வரும் ஜூலை 31ம் தேதி முதல் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவத்தினருடன் தங்கி இருந்து, அவர்களுடன் சேர்ந்து ரோந்து பணியில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராணுவத்தினர் மேற்கொள்ளும் காவல பணி மற்றும் உயர் அதிகாரிகள் உத்தரவிடும் பணிகளை தோனி நிறைவேற்றுவார் என இந்திய ராணுவம் தனது ட்விட்டர் செய்தியில் அறிவித்துள்ளது.

மகேந்திர சிங் தோனி, பிராந்திய ராணுவத்தின் பாராசூட் ரெஜிமென்ட்டில் கவுரவ லெப்டினன்ட் கர்னல் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.