March 26, 2023

மாலத்தீவு அதிபராக பொறுபேற்ற சோலிஹ்-க்கு மோடி நேரில் வாழ்த்து!

மாலத்தீவு புதிய அதிபராக இப்ரஹிம் முகமது சோலிஹ் (54) இன்று பதவி ஏற்றார். அவரது பதவி ஏற்பு விழாவில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு இப்ரஹிம் முகமது சோலிஹ்க்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.

கடந்த செப்டம்பர் மாதம் மாலத்தீவில் நடந்த அதிபர் தேர்தலில் ராணுவ நடவடிக்கை மூலம் ஆட்சியைக் கைபற்றி அதிபராக பதவி ஏற்ற சீன ஆதரவாளரான அப்துல்லா யமீன் தோல்வி அடைந்தார். பின்னர் திர்கட்சிகளின் கூட்டணி சார்பில் போட்டியிட்ட இப்ரஹிம் முகமது சோலிஹ் தேர்தலில் வெற்றி பெற்றார்.

அதை தொடர்ந்து தேர்தல் முடிவுகளை ரத்து செய்ய அதில் முறைகேடு நடந்துள்ளதாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் அப்துல்லா யமீன். ஆனால் அவரது மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. அதன் காரணமாக தேர்தலில் வெற்றி பெற்ற இப்ரஹிம் முகமது சோலிஹ் அதிபராக பதவி ஏற்பது உறுதியானது.

இந்நிலையில் இப்ரஹிம் முகமது சோலிஹ் இன்று மாலத்தீவின் புதிய அதிபராக பதவி ஏற்றார். தலைநகர் மாலேவில் உள்ள தேசிய கால்பந்து மைதானத்தில் அவரது பதவி ஏற்பு விழா நடை பெற்றது. விழாவில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

பதவி ஏற்பு விழாவின் முக்கிய விருந்தாளியாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். அதிபராக பதவி ஏற்ற இப்ரஹிம் முகமது சோலிஹ்க்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.  இன்று மாலத்தீவு வந்திறங்கிய மோடிக்கு விமான நிலையத்தில் சிகப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. மாலத்தீவு நாடாளுமன்றத்தின் சபாநாயகர் அப்துல்லா மசீஹ் முகமது விமானநிலையத்தில் பிரதமர் மோடியை நேரில் வரவேற்றார்.

பிரதமர் நரேந்திர மோடி அண்டை நாடான மாலத்தீவுக்கு செல்வது இதுவே முதல்முறை. இதற்கு முன் கடந்த 2011ம் ஆண்டு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மாலத்தீவு சென்றது குறிப்பிடத்தக்கது.

மாலத்தீவுக்கு கிளம்பும் முன் முகநூலில் பதிவிட்ட மோடி

‘‘இந்த மாலத்தீவு பயணம் மூலமாக இரு நாடுகள் இடையேயான நெருக்கமான உறவு மற்றும் ஒருங்கிணைப்புக்கான புதிய சகாப்தத்தை துவங்கப்படும்’’ என தெரிவித்தார்.

மாலத்தீவு அதிபர் பதவி ஏற்பு விழாவில் சீனா சார்பில் அந்நாட்டின் கலாச்சாரம் மற்றும் சுற்றுலா துறை அமைச்சர் லூ ஷுகாங் கலந்து கொண்டார். இலங்கையின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்காவும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

சீன ஆதரவாளராகக் கருதப்படும் முன்னாள் அதிபர் அப்துல் யமீன் கயோம் பல கோடி மதிப்பிலான சீன உள்கட்டுமான திட்டங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளார். மேலும் மாலத்தீவின் 80 சதவீத கடன் தொகை சீனாவால் வழங்கப்பட்டுள்ளது.

பொருளாதார ரீதியாக சீனாவை அதிகம் சார்ந்திருக்கும் நிலையை மாற்றுவோம் என முன்னாள் அதிபர் முகமது நஷீத் அறிவித்தார். ஆனால் அதை செயல்படுத்துவது மாலத்தீவின் புதிய அரசுக்கு பெரும் சவாலாக இருக்கும் என கூறப்படுகிறது.