பசுக்காவலர்களுக்கு 5 ஆண்டுகள் ஜெயில் : ம.பி. அரசு சட்டம்!

பசுக் காவலர்கள் என்ற பெயரில் நடக்கும் வன்முறைகளுக்கு மாநில அரசுகள்தான் பெறுப்பு என்ற உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்திருந்த நிலையில் பசுக்களை பாதுகாக்கிறோம் என அப்பாவிகளை தாக்கினால் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டம் இயற்ற முடிவு செய்திருக்கிறோம் என மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் அரசு முடிவு செய்துள்ளது.

பசுக்களை பாதுகாக்கிறோம் என இந்தியாவில் அவ்வப்போது அப்பாவி மக்களை குண்டர்கள் கும்பலாக தாக்கி கொலை செய்யும் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட் இதுபோன்ற சம்பவங்களை தடுக்க ஒவ்வொரு மாவட்டந்தோறும் சிறப்பு போலீஸ் அதிகாரிகளை நியமிக்க கோரியது.

இந்நிலையில் பசுக்களை பாதுகாக்கிறோம் என அப்பாவிகளை தாக்கினால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் அரசு முடிவு செய்துள்ளது. இதையொட்டி பசுவதை தடுப்புச்சட்டம் 2004-ல் திருத்தம் கொண்டுவர மத்தியப் பிரதேச மாநில காங்கிரஸ் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான கோப்புகளில் முதல்வர் கமல்நாத் கையெழுத்திட்டுள்ளார். இதனை அம்மாநில கால்நடைத்துறை அமைச்சர் லகான் சிங் யாதவ் உறுதி செய்துள்ளார்.

ஜூலை 8-ம் தேதி தொடங்கும் மத்திய பிரதேச மாநில மழைக்கால கூட்டத் தொடரில் இந்த திருத்தம் கொண்டுவரப்படுகிறது. புதிய சட்டத்திருத்தத்தின்படி பசுக்களைப் பாதுகாக்கிறோம் என்ற பெயரில் வன்முறையில் ஈடுபடுவோர்களுக்கு குறைந்தபட்சம் 6 மாதம் முதல், 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். ரூ.25,000 முதல் ரூ.50,000 வரை அபராதமும் விதிக்கப்படும். கும்பலாக வன்முறையில் ஈடுபட்டால் சிறை தண்டனை நீட்டிக்கப்படும். அதிகபட்சமாக 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். தொடர்ந்து இதேபோன்ற வன்முறையில் ஈடுபட்டால், தண்டனை இரட்டிப்பாக்கப்படும் என திருத்தம் செய்யப்பட்டுள்ளது.