ம.பி: கழிவு பொருள்களில் இருந்து உருவாக்கிய பிரமாண்ட ‘ருத்ர வீணை’!

ம.பி: கழிவு பொருள்களில் இருந்து உருவாக்கிய பிரமாண்ட ‘ருத்ர வீணை’!

ம் நாட்டில் தண்ணீர் மாசு பெரிய பிரச்சனையாகவே இருந்து வருகிறது. மோசமான கழிவு அகற்றல் மேலாண்மையால் ஏரிகளும் ஆறுகளும் அழிந்துவிடும் அபாயத்தில் உள்ளது. உதாரணத்திற்கு பெங்களூருவில் இருக்கும் பெல்லந்தூர் ஏரியின் தண்ணீரில் அதிகளவில் ரசாயனக் கழிவுகள் கலந்திருப்பது குறித்து சமீபத்திய செய்திகளில் பார்த்திருப்போம். அரசாங்கமும் குடிமைப்பணி அதிகாரிகளும் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண முடியாமல் மற்றவர்களை குற்றம்சாட்டி வரும் நிலையில் பொருட்களின் மறுபயன்பாடு என்பது தற்போதைய சூழலில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. பயன்படுத்த முடியாத பொருட்களை வேறு ஒரு பொருளாக மாற்றி மீண்டும் பயன்படுத்துவதே மறுபயன்பாடு. இந்த வகையில் குப்பை என்று ஒதுக்கிய பொருட்களில் இருந்து கலைப்படைப்புகளை உருவாக்கி வருவது அதிகமாக உள்ளது. அந்த வகையில் மத்தியப்பிரதேச மாநிலத்தின் தலைநகர் போபாலில் 15 கலைஞர்கள் இணைந்து கழிவு பொருள்களில் இருந்து 28 அடி நீளமும், 10 அடி அகலமும், 12 அடி உயரமும் உடைய மிகப்பெரிய “ருத்ர வீணை”யை உருவாக்கியுள்ளார்கள்.

சுமார் 5 டன் எடை கொண்ட இந்த மிகப்பெரிய ருத்ர வீணையை உருவாக்க 6 மாதங்களாகியிருக்கிறது. இதற்காக, ரூ. 10 லட்சம் செலவாகியிருக்கிறது. இதனை உருவாக்கியவர்கள் இதுதான் உலகிலேயே மிகப்பெரிய ருத்ர வீணை என்று தெரிவித்துள்ளனர். இந்த வீணை முழுவதும் செயின், கியர், பால்பியரிங், வையர் போன்ற வாகனங்களின் பழைய பொருட்களில் இருந்து இந்தத் தந்திக்கருவி உருவாக்கப்பட்டுள்ளது. கலைஞர்கள் முதல் பழைய பொருட்களை எல்லாம் சேகரித்து பின்னர் அதனை வீணை வடிவில் உருவாக்கி உள்ளனர்.

இதுகுறித்து வீணையை உருவாக்கிய கலைஞர்களில் ஒருவரான பவன் தேஷ்பாண்டே செய்திநிறுவனமான ஏஎன்ஐயிடம் கூறுகையில்,” இந்த வீணை “கபாட் சே கஞ்சான்” என்ற தீமின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. மொத்தம் 15 கலைஞர்கள் இணைந்து இதற்கு தேவையான பொருட்களை சேகரித்து இதனை வடிவமைத்துள்ளோம். ஆறுமாத உழைப்புக்கு பின்னர் வேண்டாத பொருட்களில் இருந்து பெரிய வீணை ஒன்று உருவாகியுள்ளது.

இளைய தலைமுறையினர் இந்திய கலாச்சாரம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில், இந்திய கருப்பொருளில் வேலைசெய்ய நாங்கள் விரும்பினோம். ருத்ர வீணை என்பது தனித்துவமானது. நாங்கள் இதனை நகரின் முக்கியான இடத்தில் வைக்க இருக்கிறோம். மக்கள் இதனுடன் செல்ஃபி எடுத்துக்கொள்ளலாம். நாங்கள் இதனுடன் மியூசிக் சிஸ்டமும், விளக்குகளும் பொருத்த இருக்கிறோம். அதன்பின்னர் இது மிகவும் அழகாக இருக்கும்.

தற்சமயம் இதனை நகரில் உள்ள அடல் பாதையில் அமைந்துள்ள ஒரு இடத்தில் நிறுவலாம் என்று நினைத்திருக்கிறோம் என்றார். வீணையை உருவாக்கிய குழுவினர் கூறும்போது நாங்கள் ஆராய்ந்த வரையில் இதுபோன்ற பெரிய வீணை இதுவரை உருவாக்கப்படவில்லை. அப்படி என்றால் போபாலில் மட்டும் இல்லை உலகிலேயே இதுதான் மிகப்பெரிய ருத்ர வீணை என்றனர்.

error: Content is protected !!