October 16, 2021

பெயரைப்போலவே படமும் ‘மொட்ட சிவா… கெட்ட சிவா’தான்…!

பெயரைப்போலவே படத்தில் நல்ல விஷயங்களே இல்லாத ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ .நிஜத்தில் இதை ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தின் விமர்சனமாகவும் எடுத்துக் கொள்ளலாம்… அல்லது நடிகர் லாரன்ஸ் தனது நடவடிக்கையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற குற்றச்சாட்டாகவும் எடுத்துக் கொள்ளலாம்… குறிப்பாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் நெஞ்சத்தில் நீங்கா இடம்பிடித்திருக்கிற புரட்சித்தலைவர் மக்கள் திலகம் எம்ஜிஆரின் நூற்ற £ண்டு விழாவில் இதைவிட அவரை கேவலமாக சித்தரிக்க யாராலும் முடியாது அந்தளவுக்கு அவரையும், அவரின் பட பாடலையும் ரீமிக்ஸ் என்ற பெயரில் கேவலப்படுத்தியிருக்கிறார் இயக்குனர் சாய்ரமணி. நடிகர் லாரன்ஸ் தனக்கு ஒரு இமேஜ் ஏற்படுத்திக் கொள்வதற்காக இயக்குனரை இப்படி பயன்படுத்திக் கொண்டிருப்பார் என்றே தோன்றுகிறது.

motta mar 10

‘ஆடலுடன் பாடலை கேட்டேன்’ பாடலை ரீமிக்ஸ் என்ற பெயரில் கொச்சைப்படுத்தி இதற்கு மேலும் எம்ஜிஆர் புகழை மரியாதையை கெடுக்க முடியாது என்ற பெயரை லாரன்ஸ் இந்த படத்தின் மூலம் சொல்லியிருக்கிறார். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பெண்களை தெய்வமாக மதிப்பார், அவர் படங்களில் அழகும், கவர்ச்சியும் ஹீரோயின்கள், பாடலில் கூட ஆடும் துணை நடிகைகளுக்கு இருந்தாலும் ஆபாச உடையலங்காரம் இருக்காது.  ஆனால் மொட்ட சிவா கெட்டசிவா படத்தில் எம்ஜிஆரின் புகழ்பெற்ற ‘ஆடலுடன் பாடலை கேட்டேன்’ பாடலை ரீமிக்ஸ் செய்திரு க்கிறவர்கள் அந்த ஆட்டத்தில் லாரன்ஸ் கூட ஆடும் பெண்கள் அனைவருக்கும் மினுமினுக்கும் உள்ளாடைகள் மட்டுமே கொடுத்து மிச்ச உடலை திறந்து காட்டி ஆட வைத்து பின்னணியில் எம்ஜிஆர் படங்களை வைத்து கேவலமான ரசனையை உருவாக்கியிரு க்கிறார் லாரன்ஸ்.

இதற்கு இயக்குனர் காரணம் என்று சொல்லி தப்பிக்க நினைக்கலாம். பாடல் முடியும்போது கிளுகிளுப்பான கவர்ச்சி உடையில் கூட ஆடும் பெண்களின் இடுப்பை லாரன்ஸ் பார்த்துக் கொண்டிருக்க ‘எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாவை கெ £ண்டாடுவோம்’ என்று எழுத்து போட்டு மரியாதை? செய்கிறாராம் இயக்குனர்…

லாரன்ஸ் இன்னும் தன் படங்களில் எத்தனை ஆண்டுகளுக்கு மாற்றுத்திறனாளிகளை வைத்து கதையை நகர்த்த முயற்சிப்பார் என்பது புரியவில்லை. இந்த படத்திலும் அடியாட்களால் அடித்து நொறுக்கப்படும் மாற்றுத்திறனாளியின் காப்பகத்தை காப்பாற்ற பணம் தருகிறார். அங்கே வாய் பேச முடியாத பெண்ணை தங்கையாக நினைக்கிறார் எல்லாம் சரிதான்… அந்த வாய் பேச முடியாத பெண்ணை 3 பேர் கொடூரமாக தாக்கி பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொலை செய்வார்கள். காட்சியில் முதலில் ஒரு ஐடி நிறுவன பெண்ணை தூக்கி வரும் வில்லன்களிடம் இருந்து அந்த பெண்ணை காப்பாற்ற முயற்சித்த மாற்றுத்திறனாளி பெண் கடைசியில் அந்த கயவர்களிடம் சிக்கி சின்னாபின்னமாகிறாராம். அத்தனை உருக்கமாக காட்சியை வைத்து மாற்றுத்திறனாளியின் சோகத்தில் கதையை நகர்த்தும் கேவலத்தை இன்னும் எத்தனை நாளைக்கு லாரன்ஸ் செய்யப்போகிறார் என்பது மட்டும் யாருக்குமே புரியாத புதிர்.

லாரன்ஸ் ஒரு போலீஸ் ஏசிபி… சத்யராஜ் போலீஸ் கமிஷனர்… உயர் அதிகாரிக்கு மரியாதை தரவேண்டிய நிலையில் இருக்கும் ஏசிபியான லாரன்ஸ் எந்த மரியாதையும் இல்லாமல் ரவுடிகளோடு கூட்டணி வைத்திருப்பதும் போலீஸ் மீட்டிங்கில் கமிஷனரையே மதிக்காமல் தெனாவட்டாக டயலாக் பேசுவதும் சினிமாவில் மட்டுமே சாத்தியம். வழக்கம்போல முதலில் கெட்டபோலீஸ் கடைசியில் நல்லபோலீஸ் என்று போலீசையும் கேவலப்படுத்தி சல்யூட் அடிக்க நினைக்கிறார் லாரன்ஸ்.

சாதாரண டான்ஸ் சங்க உறுப்பினராக இருந்த லாரன்ஸ் என்பவர் படிப்படியாக வளர பெரிதும் உதவிய பத்திரிகை மீடியாவை இதற்கு மேலும் கேவலப்படுத்த முடியாத படிக்கு படத்திலும் பத்திரிகையாளர் சந்திப்பு காட்சி நடத்துகிறார்… ‘ஆம்பள ரிப்போர்ட்டர் எல்லாம் பின்னாடி போங்க… அழகான பொண்ணு ரிப்போர்ட்டர் எல்லாம் முன் வரிசைக்கு வாங்க’ என்று ஒரு அருவருப்பான காட்சிகளை, வசனங்களை வைத்து மீடியாவில் உள்ள பெண்களை அசிங்கப்படுத்தியிருகிறார்.

எல்லாவற்றையும் விட உச்சபட்ச கலாட்டா காமெடி என்றால் படம் தொடங்கும்போது லாரன்ஸ் பெயருக்கு முன்னால் ‘மக்கள் சூப்பர் ஸ்டார்’ என பட்டம் போட்டுக் கொண்டதுதான். இன்றைக்கு இந்திய சினிமா உலகில் சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த் என்பது எல்லாருக்கும் தெரிந்த ஒன்று… அதிலும் இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாபச்சனே ஒரு மேடையில் சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிதான் என்று குறிப்பிட்டிருக்கிறார். இந்த பட்டத்திற்காக ரஜினிகாந்த் கடந்து வந்த பாதைகள்… அவர் படங்கள் சொன்ன கதைகள்… அதன் தீர்வுகள் எத்தனை… எத்தனையோ… அப்படியிருக்கும்போது , இதுவரை லாரன்ஸ் நடித்த படங்களில் இந்த சமூகத்திற்கு ஏதாவது நல்ல கருத்தை சொல்லியிருக்கறாரா என்று தேடிப்பார்த்தாலும் கிடைக்காது. அதிலும் குறிப்பாக நடிகர் ரஜினிகாந்த்தின் காசில் டான்ஸ் சங்க உறுப்பினராக சினிமாவுக்குள் நுழைந்து இப்போது வரம்கொடுத்தவன் தலையிலேயே கை வைக்கும் கேவலத்தை செய்ய துணிந்திருக்கிறார் லாரன்ஸ்.

ஒன்று பேயை வைத்து பணம் சம்பாதிப்பார்… அல்லது கதாநாயகியை அரைகுறை ஆடையில் ஆட விட்டு சம்பாதிப்பார்… ஒவ்வொரு படத்திலும் மாற்றுத்திறனாளிகளை கதறவிட்டு கண்ணீர் சிந்த விட்டு ரத்தம் சொட்ட சொட்ட அடிக்க விட்டு ஆட விட்டு வில்லன்களிடம் சிக்க வைத்து கற்பழிக்கவிட்டு அதை காட்சிப்படுத்தி வீராவேச வசனங்கள் பேசி படத்தை ஓட்டுவார். அம்மா செண்டிமெண்ட் என்று எதையாவது சொல்லி பெண்களை ஈர்க்கப்பார்ப்பார்.

இதை தவிர இதுவரை லாரன்ஸ் நடித்த படங்களில் புதுசாக எந்த நல்ல கருத்தை சொல்லியிருக்கிறார். அதைப்போலவே இந்த ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்திலும் மாற்றுத்திறனாளிகளை கொடுமை படுத்தும் காட்சி கண்ணீர விட்டு கதற வைக்கும் காட்சி… வில்லன்களால் வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி பெண்ணை கற்பழித்து எரித்து கொல்லும் கொடூர காட்சி… பிரசவத்தின்போது இறந்து போகும் அம்மா செண்டிமெண்ட் காட்சி… கத்தி கத்தி பஞ்ச் டயலாக் பேசும் ஹீரோயிசம்… தன் பட பப்ளிசிட்டிக்கு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் தொடங்கி தன் அம்மாவரை பயன்படுத்தி இருக்கிறார்…

ஒருதிரைப்படம் தயாரிப்பது ரொம்ப கஷ்டமான வேலை. அதிலும் பல கோடி முதலீட்டில் உருவான படம் ரிலீஸ்ஆகாமல் பிர ச்னையில் சிக்கிவிட்டால் மரணவேதனைதான்… இந்த படமும் அப்படி சிக்கலில் மாட்டியபோது எல்லாரைப்போலவும் நமக்கும் பரிதாபமே தோன்றியது… ஆனால், படம் ரிலீஸ் ஆகி படம் பார்த்தபிறகு இப்படி ஒரு கேவலமான சமூகத்தை சீரழிக்கக் கூடிய படம் ரிலீஸ் ஆகாமலேயே இருந்திருக்கலாம் என்றே தோன்றுகிறது. அந்தளவுக்கு வெறும் வணிக ரீதியில் பணம் சம்பாதிப்பதை மட்டுமே குறிக்கோளாக வைத்து காட்சிகளை அமைத்து மக்களை ஈர்க்க முயற்சித்திருப்பது கண்டனத்திற்கு உரியது.

எதற்கெடுத்தாலும் மாற்றுத் திறனாளிகளை காட்சிகளில் பயன்படுத்தி அவர்களின் இயலாமையை சோகத்தை திரையில் காட்டி அதன் மூலம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி பணம் பார்க்க முயற்சிக்கும் கேவலமான காரியத்தை இனியும் லாரன்ஸ் நிறுத்திக் கொள்வது அவரின் திரையுலக பயணத்திற்கு நல்லதாக அமையும்.

அதோடு, சமூக சேவை செய்வதாக சொல்லி எந்த கூட்டத்திற்கு போனாலும் ஒரு கோடி அறிவிப்பும், பணம் வசூல் செய்யும் அறிவிப்பும், ஆதார போட்டோக்களை காட்டி அனுதாபத்தை பெற முயற்சிக்கும் போக்கையும் லாரன்ஸ் மாற்றிக் கொள்வது அவருக்கு நல்லது. இதுவரை அறிவித்த கோடிகள் உண்மையாக அறிவித்தபடி போயிருக்கிறதா என்பது குறித்த வெள்ளை அறிக்கை எதுவும் இதுவரை வந்ததே இல்லை…

உண்மையான சேவையாளர்கள் எந்த சூழலிலும் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள விரும்ப மாட்டார்கள். மொட்ட சிவா கெட்ட சிவா படத்தில் அடிக்கடி பழமொழி சொல்வார் லாரன்ஸ்…

ஆனால் உண்மையான சேவை என்பது ‘ஒரு கை செய்வதை இன்னொரு கை அறியக்கூடாது’ என்றும் ஒரு பழமொழி இருக்கிறது மிஸ்டர் லாரன்ஸ்.

கடைசியாக லாரன்ஸ் இனியாவது உங்கள் படங்களில் மாற்றுத்திறனாளிகள் இல்லாமல், மாற்றுத்திறனாளிகளை கொடுமைபடுத்தும் காட்சிகள் இல்லாமல், அம்மா செண்ட்டிமென்ட் இல்லாமல், மக்களை முட்டாள் ஆக்கும் பேய், பூசாரி, சாமி எதுவும் இல்லாமல் இந்த சமூகத்திற்கு நல்ல மெசேஜ் அல்லது தன்னை மறந்து சிரிக்கும் நகைச்சுவை படத்தை கொடுங்கள் நீங்கள் விரும்பும் படட்டமெல்லாம் தானாக வந்து சேரும்…! தெரிந்து வைத்தார்களோ இல்லை தெரியாமல் வைத்தார்களோ பெயரைப்போலவே படமும் ‘மொட்ட சிவா… கெட்ட சிவா’தான்… நல்ல விஷயங்களே இல்லை..!

கோடங்கி