ராணி எலிசபெத்தின் இறுதி சடங்கில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இறுதி அஞ்சலி!

ராணி எலிசபெத்தின் இறுதி சடங்கில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இறுதி அஞ்சலி!

ங்கிலாந்து நாட்டின் ராணி எலிசபெத்தின் இறுதி சடங்கில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பிரிட்டன் மக்கள் ராணிக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். மேலும் இச்சடங்கில் 500 உலக தலைவர்கள் பங்கேற்றனர்.

இங்கிலாந்து நாட்டின் ராணி 2ம் எலிசபெத் கடந்த 8–ந்தேதி உயிரிழந்தார். எலிசபெத்தின் உடல் லண்டனில் உள்ள வெஸ்ட் மின்ஸ்டர் மண்டபத்தில் மேடையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அவரது உடலுக்கு தொடர்ந்து 4 நாட்களாக பொதுமக்கள் வெள்ளமென திரண்டு வந்து, கடும் குளிரிலும் இரவு பகலாக வரிசையில் காத்து நின்று, இறுதி அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ளுமாறு உலக நாடுகளின் மன்னர்கள், ராணிகள், ஜனாதிபதிகள், பிரதமர்கள் என 500 தலைவர்களுக்கும், மிக முக்கிய பிரமுகர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இதனையடுத்து இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக உலக நாடுகளின் தலைவர்கள் இங்கிலாந்து வந்தனர்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோர் அமெரிக்கா சார்பில் ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இதனை தொடர்ந்து, நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன், கனடா பிரதமர் ஜஸ்டின் ரூடோ, அயர்லாந்து அதிபர் மைக்கேல் டேனியல் ஹிக்கின்ஸ் உள்ளிட்டோர் ராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ உள்ளிட்டோரும் இதில் கலந்து கொண்டனர். ராணியின் இறுதி சடங்கில் பங்கேற்க இந்தியா சார்பில் ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று காலை லண்டன் வந்தார். வெஸ்ட் மின்ஸ்டர் மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள எலிசபெத்தின் உடலுக்கு இந்தியா சார்பில் ஜனாதிபதி திரவுபதி முர்மு அஞ்சலி செலுத்தினார். இதன் பின்னர் லான்காஸ்டர் மாளிகையில் வைக்கப்பட்டிருந்த இரங்கல் புத்தகத்தில் அவர் கையெழுத்திட்டார். ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கிற்கு முன்னதாக, நேற்று பக்கிங்ஹாம் அரண்மனையில் உலக தலைவர்களின் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இங்கிலாந்து மன்னர் சார்லசை ஜனாதிபதி திரவுபதி முர்மு சந்தித்து பேசினார்.

எலிசபெத்தின் இறுதிச் சடங்கை முன்னிட்டு அவரது நினைவாக பிரிட்டன் முழுவதும் மக்கள் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். இங்கிலாந்து அரசு கேட்டுக் கொண்டதற்கு இணங்க வீடுகள், உள்நாட்டு நிகழ்ச்சிகள் உள்பட பல்வேறு பகுதிகளில் பங்கேற்றிருந்த மக்கள் ஒரு நிமிடம் ராணி எலிசபெத்திற்கு மவுன அஞ்சலி செலுத்தினர். இதையொட்டி ராணி உடல் வைக்கப்பட்டிருக்கும் வெஸ்ட்மின்ஸ்டர் அரங்கில் மக்கள் அஞ்சலி செலுத்துவது 60 வினாடிகள் நிறுத்தப்பட்டது.

இந்திய நேரப்படி இன்று மாலை 3.30 மணி அளவில் இறுதி சடங்கு துவங்கி இரவு 11 மணி வரை நடைபெற்றது. ராணி எலிசபெத்தின் சவப்பெட்டி வெஸ்ட் மின்ஸ்டர் அரங்கில் இருந்து பீரங்கி வண்டியில் ஏற்றப்பட்டு லண்டன் நகரத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் வழியாக வெஸ்ட் மின்ஸ்டர் அபே தேவாலயத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அதைத்தொடர்ந்து இறுதிச்சடங்கு தொடர்பான சடங்குகள் தொடங்கின. இறுதி ஊர்வலத்தில் மன்னர் 3ம் சார்லஸ், அவரது சகோதரர்கள், சகோதரி, மகன்கள் (ராணியின் பேரன்கள்) ஆகியோர் ராணுவ வீரர்களுடன் அணிவகுத்துச் சென்றனர். இறுதி சடங்கு நிகழ்ச்சியில் இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு உள்பட 500 உலக தலைவர்கள், மிக முக்கிய பிரமுகர்கள் என 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

செயிண்ட் ஜார்ஜ் தேவாலயத்தில் பிரார்த்தனை முடிந்த உடன் ராணியின் உடல் அடங்கிய சவப்பெட்டி ‘ராயல் வால்ட்’ என்று அழைக்கப்படுகிற விண்ட்சார் கோட்டையில் தரைக்கு கீழே அமைக்கப்பட்டுள்ள அடக்க அறையில் இறக்கப்படும். இறுதியில், அரச குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொள்கிற அடக்க பிரார்த்தனை, மன்னர் 6-ம் ஜார்ஜ் நினைவு தேவாலயத்தில் நடந்தது. அதன் பின்னர் ராணியின் உடல் கடந்த ஆண்டு மறைந்த ராணியின் கணவர் இளவரசர் பிலிப்பின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடம் அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது.

இறுதிச்சடங்கையொட்டி முக்கிய இடங்களில் ராணுவம் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸ் அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளனர்.இறுதி சடங்கின்போது டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளன. ஹீத்ரோ விமான நிலையம் விமானங்களை இயக்காது. விமான சத்தத்தால், இறுதிச்சடங்குகளுக்கு இடையூறு ஏற்பட கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ராணியின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சி இங்கிலாந்து முழுவதும் உள்ள பூங்காக்கள், சதுக்கங்களில் பெரிய திரைகளில் நேரடியாக காட்டப்பட்டது. மேலும் 125 திரையரங்குகளில் ஒளிபரப்பப்பட்டது.

இறுதிச்சடங்கு முடிந்ததும் இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்தில் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

57 ஆண்டுகளுக்கு பிறகு லண்டனில் அரசு மரியாதையுடன் நடைபெறுகிற இறுதிச்சடங்கு இதுதான். கடைசியாக 1965-ம் ஆண்டு, போர்க்கால பிரதமராக விளங்கி மறைந்த வின்ஸ்டன் சர்ச்சிலின் இறுதிச்சடங்கு நடந்தது நினைவுகூரத்தக்கது.

இந்த இறுதிச் சடங்கிற்கு கூட்டம் அலை மோதும் என்பதால், பக்கிம்காம் அரண்மனை, நாடாளுமன்ற கட்டிடம், வெஸ்ட்மினிஸ்டர் அபேவை சுற்றி பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மத்திய லண்டன் நகரில் மக்கள் வருகையை கட்டுப்படுத்த 36 கி.மீ. தொலைவுக்கு பாதுகாப்பு தடுப்புகள் (பேரிகார்ட்ஸ்) அமைக்கப்பட்டிருந்தது. இறுதிச் சடங்கில் 10 லட்சம் மக்கள் பங்கேற்பார்கள் என கணிக்கப்பட்டு போக்குவரத்து வசதிக்கு கூடுதல் ரெயில்கள் இயக்கப்பட்டன.

error: Content is protected !!