கல்வி பாடத்திட்டங்களில் மாண்டசரி கல்வி முறை பற்றிய அறிமுகம்.! – கிருத்திகா தரன்

கல்வி பாடத்திட்டங்களில் மாண்டசரி கல்வி முறை பற்றிய அறிமுகம்.! – கிருத்திகா தரன்

மரியா மாண்டசரி என்பவர் கண்டுபிடித்த அற்புதமான கல்விமுறைதான் மாண்டசரி கல்வி முறை. சரியான பொருட்களை கொண்டு தானே கற்றல் முறையையும், கற்று கொள்ளலில் ஆர்வத்தையும் தூண்டுவதே மாண்டசரி பள்ளியின் நோக்கமாகும். இந்த கட்டுரைக்காக சந்தித்தது பெங்களூரில் உள்ள 39 வருடமாக இந்த துறையில் அனுபவமுள்ள இரு மாண்டசரி பள்ளிகளை நடத்துவபவருமான சோபி சிவசங்கர் அவர்களை .அவர் தந்த விவரங்கள் அப்படியே கொடுத்துள்ளேன்.

edu mar 3

  1. வழக்கமான பள்ளிகளில் ஆசிரியர் முதன்மையாக இருப்பார். அவர் சொல்வதை கேட்டு கொள்ள வேண்டும். ஆனால் இங்கு குழந்தைகள் முதன்மையாக இருப்பார். ஆசிரியர் என்று யாரும் இல்லை. நடத்துனர் (டைரக்டர்) பின்னணியில் வழிநடத்துவார்.
  2. மனப்பாட முறை கிடையாது .யோசனை செய்து பதில் அளிக்க வேண்டும்.
  3. நன்றாக கவனித்து (Observe) தானே கற்று கொள்வதால் ஆழ்மனதில் (subconscious) பதியும்.
  4. கரும்பலகை முறை கிடையாது. பார்த்து எழுதும் முறை கிடையாது. தானே கற்று கொண்டு எழுதுவதைதான் எழுத்து (writing) என்பர்.
  5. தொடுகை முறை கல்வி. பொது பள்ளிகளில் தொட்டு உணர்ந்து கற்று கொள்ளல் இல்லை.
  6. ஒவ்வொரு குழுந்தைக்கும் தனியாக கற்று கொடுக்கும் முறை. அனைவருக்கும் ஒரே பாடத்திட்டம் கிடையாது.
  7. கற்று கொள்ளலில் நேர வரைமுறை கிடையாது.ஒரு குழந்தை அரை மணியிலும் கற்றுக்கொள்ளலாம், இரண்டு மணி நேரமும் ஒரே பாடத்தை கற்று கொள்ளலாம்.
  8. இங்கு அனைவரும் ஒன்று என்பது கிடையாது, ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு விதம் என்பதைப் புரிந்து யூனிபாரம் உடை கிடையாது.
  9. நீண்ட நேரம் ஒரே பாடத்தை கற்றுக்கொள்ளும் பொழுது நடுவில் குழந்தையை இடைஞ்சல் செய்வது இல்லை. அதனால் புரிதலுக்கான நெரம் அதிகரிக்கறது.
  10. இரு வழி உரையாடல். என்ன கேள்வி கேட்டாலும் பதில் சொல்ல வேண்டும். பொது பள்ளிகளில் ஆசிரியர் சொல்லுவதை மட்டும் கேட்க வேண்டும்.
  11. ஒரே குழுவில் வயது வித்தியாசமுடன் குழந்தைகள் இருப்பார்கள். பெரிய குழந்தை சிறு குழந்தைக்கு சொல்லி கொடுத்து இருவரின் உறவும், அறிவும் வளர வாய்ப்பு பெருகும்.( 0-3, 3-6, 6-9 ,9-12 வயதுகளில்)
  12. சொல்லிக் கொடுக்க மிக அதிகமான பொருட்கள் வைத்து சொல்லிகொடுகிறார்கள் ஒரே கணக்கை சொல்லி கொடுக்க மணிகள், சிறு கட்டுமானப் பொருட்கள், அட்டைகள் என்று விதவிதமான பொருட்களை பயன்படுத்துவார்கள்.
  13. கற்பனைக் கதைகள் ஆறு வயதுக்கு மேலுள்ள குழந்தைகளுக்கு அனுமதிக்கப்படுகின்றன. அது வரை உண்மைக் கதைகள், நிகழ்வுகள் மட்டுமே கூறப்படும்.
  14. தேர்வுகள் மற்றும் வீட்டு பாடங்கள் கிடையாது.
  15. ஒழுக்க விதிகள் திணிக்கப்படாமல் படிப்படியாகக் கற்று கொடுக்கப் படுகின்றன.
  16. எந்தப் பொருளையும் தொட்டு பார்க்க வேண்டும், கவனமாக எடுக்க வேண்டும், திரும்ப கவனமாக கையாண்டு அதே இடத்திலையே வைக்க வேண்டும். அடுத்தவரை தொந்தரவு செய்யாமல் இருக்கவும், அமைதி காக்கவும் சொல்லி கொடுக்க படுகிறது.
  17. வீட்டுக்கு சென்றால் தாயுடன் நேரம் செலவழிக்க, வீட்டு வேலைகளில் உதவி செய்ய ஊக்கபடுத்துகிறார்கள்.

 இனி என் கேள்விகள் சோபி சிவசங்கர் பதில்கள்.

ஏன் மற்ற கல்வி முறைகளை சாடுகிறீர்கள்?

அவர்கள் கார் அசெம்பிளி லைன் போல குழந்தைகளை கையாள்வது எங்களுக்கு வருத்தம் கொள்ளச் செய்கிறது. ஆயிரக்கணக்கில் குழந்தைகளை சேர்த்து ஒரு அறையில் அடைத்து இயற்கையோடு கலக்க விடாமல் கற்க விடாமல் ஒவ்வொரு குழந்தையின் தனித்தன்மையை கவனத்தில் கொள்ளாமல் ஒரு தொழிற்சாலைப் பொருட்கள் போல மந்தை மனப்பான்மையுடன் ஒட்டு மொத்தமாக கையாள்வது எங்களுக்கு சங்கடமாக இருக்கிறது.

எப்படி தேர்வுகள் இல்லாமல் அவர்கள் கற்றுக்கொண்டதைக் கண்டறிவீர்கள்?

தேர்வுகள் வைத்தாலும் அவர்கள் கற்றுக்கொண்டு விட்டார்கள் என்பதற்கு உத்தரவாதம் இல்லை (அவருக்கு டெஸ்ட், எக்ஸாம் போன்ற வார்த்தைகள் பிடிக்கவில்லை, கோபம் தருகிறது) திரும்பத்திரும்பக் கற்று கொடுக்கும் பொழுது அவர்கள் அறியாமல் மனதில் பதியும். நாங்கள் வருடம் முழுதும் கவனித்து மதிப்பீடு செய்கிறோம். ஆனால் ஒரு தேர்வு வைத்து மதிப்பெண்கள் கொடுத்து சோதிப்பது சரியாக இல்லை.

போட்டிகள் இல்லாமல் வளர்ந்தால் பின்னாளில் அவர்கள் எப்படி சமாளிக்கமுடியும்? பிறகும் இங்கிருந்து பொது பள்ளிக்கு செல்லும் குழந்தைகளின் நிலை?

எங்கள் பள்ளியை பொருத்தவரை பத்தாம் வகுப்பு வரை இங்கயே சொல்லிகொடுக்கிறோம். பதினொன்றில் அவர்கள் நன்றாகவே செய்வார்கள். உயர் பள்ளியில் மாறும் குழந்தைகளும் மிக நன்றாகவே செய்கிறார்கள். ஆனால் அந்த பாடத்திட்ட முறையை அவர்கள் விரும்புவதில்லை. இங்கேயே தொடர விருப்பபடுகிறார்கள். இங்கு படிக்கும் சிறுவர்கள் எந்த போட்டிகளில் பங்கு பெற்றாலும் சிறப்பாகவே செய்கிறார்கள். நாங்கள் சொல்லி கொடுக்கும் தன்னம்பிக்கை பாடம் அலாதியானது.

உங்கள் பள்ளி மாணவர்கள் சிறப்பாக செயல்படுகிறார்களா?

ஆமாம். எங்கள் மாணவர்களை அடைத்து வைப்பதில்லை. எந்த பாடத்தையும், எவ்வளவு நேரங்களில் வேண்டுமானாலும் அவர்களே கற்று கொள்ள முடியும். கற்று கொள்ளும் சூழ்நிலையை உருவாக்கி, வழி காட்டுவதே எங்கள் வேலை. இதனால் கற்றலில் ஆர்வம் பெருகுகிறது. மற்ற பள்ளியில் ஆசிரியர் இல்லாவிட்டால் கூச்சல் புறப்படும். அடுத்தவர் நுழைந்தவுடன் அவர்களை வேடிக்கை பார்த்து கொண்டு இருப்பார்கள். ஆனால் இங்கு அவர்கள் வேலையில் கவனத்துடன் இருப்பார்கள். அந்த அளவுக்கு இங்கு குழந்தைகளுக்கு கல்வியில் கருத்துடன் இருத்தல் (concentration)அதிகம்.

KONICA MINOLTA DIGITAL CAMERA

அவர்கள் இஷ்டதிற்கு சில பாடங்களில் மட்டும் கவனம் செலுத்தினால் கஷ்டம் இல்லையா?

நாங்கள் வழி நடத்தி கொண்டு இருக்கிறோம். எல்லா பாடங்களிலும் ஆர்வம் உண்டாக்குவோம். எடுத்துகாட்டாக, பிதாகரஸ் தியரத்தை இரண்டாவது படிக்கும் குழந்தை முக்கோணத்தை சுற்றி மணிகள் வைப்பதன் மூலம் எளிதாக புரிந்து கொள்ளும்.இலைகள் எடுத்து வர சொல்லி அதை பற்றி நேரடியாக சொல்லி கொடுப்போம். ஒரு பாடம் என்று தனியாக இல்லாமல் எல்லா பாடங்களும் ஒன்றுடன் ஒன்று சம்பந்தப்படுத்தி கற்று கொடுப்போம். அனைத்திலும் படத்துடன் கூடிய அட்டைகள் மூலமாக ஆர்வமாக கற்றுகொள்ளவே செய்கிறார்கள். முடிவில் அவர்கள் கற்றுக்கொண்டதை தொடர்ந்து தினமும் கவனித்துப் பெற்றோருக்குத் தெரிவிக்கிறோம்.

பாடத்திட்டங்கள் எப்படி வித்தியாசபடுகிறது?

சிறு குழந்தைகளை நிறைய வரையச் சொல்கிறோம். அதன் மூலம் கைகளுக்கு சக்தி ஏற்படும். மூளைக்கும், மணிகட்டுக்கும் நல்ல பயிற்சி. தேவை இல்லாமல் கேபிடல் எழுத்துகள் முதலில் கற்று தரப்படுவதில்லை. நான்கு வயது வரை எழுத அனுமதிப்பதில்லை. எடுத்துக்காட்டாக noun சொல்லி கொடுக்க வேண்டுமானால் ஒரு இடத்தில உள்ள பெயர்களை அவர்கள் மூலமாக சொல்ல வைத்து அதனை பகுப்பு ஆய்ந்து கலந்து பேசி சொல்லிகொடுப்போம். அனைத்தும் லாஜிகலாக கற்று கொடுக்கப்படும். பாடங்கள் எதற்கு உபயோகப்படும் என்ற தெளிவை ஏற்படுத்துவோம். வாழ்க்கை பாடம் முதலில் கற்று தரப்படும்.

வயதுபடி வகுப்புகள் இல்லையென்றால் எப்படி குழந்தைகள் ஒரு வகுப்பில் இருந்து அடுத்த வகுப்புக்கு செல்வார்கள்?

நாங்கள் படி படியாக குழுக்கள் மாற்றுவோம்.இப்போது மூன்றிலிருந்து ஆறு வயது வரை ஒரே குழுவில் இருப்பார்கள். சில குழந்தைகள் மிக வேகமாக கற்று கொள்வார்கள். அவர்களுக்கு அடுத்த பாடத்தை ஆரம்பிக்க விட்டால் கற்றலில் ஆர்வம் குறைந்துவிடும். சிலர் மிக்க மெதுவாக கற்று கொள்வார்கள் அவர்களை ஊக்கம் கொடுத்து கற்று கொள்ள வைக்க வேண்டும். அறிவுக்கும் முயற்சிக்கும் ஏற்றாற்போல கற்றுகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். இதைப் பற்றி இன்னும் நிறைய கூறவேண்டும்; சுருக்கமாக கூறி இருக்கிறேன்.

குழந்தைகள் கற்று கொள்ள ஆர்வமாகதான் இருகிறார்கள். அதுதான் இயற்கையும். ஆனால் பிறர் அவர்களைச் சோதிப்பது அவர்களுக்கு பிடிக்காது. ஆனால் தேர்வு என்ற பெயரில் ஆர்வமாக கற்று கொள்வதை தடுக்கிறார்கள்.

Montessori and Me என்ற புத்தகத்தை அனைத்து பெற்றோருக்கும் பரிந்துரைக்கிறேன் என்றார்.

இன்னும் எத்தனையோ விஷயங்களை விவாதித்தார். முதன் முதலில் நான் இதற்காக சந்தித்தது குழந்தைகளின் மேல் அன்போடும், காதலோடும்,அக்கறையோடும் உள்ள மாண்டசரியன் கல்வியில் மாற்றத்தை கொண்டுவர உழைக்கும் ஒரு மகத்தான பெண்மணி. இவர் மிக்க உறுதியானவரும் ஆவார்.

கிருத்திகா தரன்

Related Posts

error: Content is protected !!