August 12, 2022

ஒரு வரி ட்விட்டுக்கும் ஸ்டேஸுக்கும் கூட போலீஸால் கைகள் உடைக்கப்படலாம்!

சென்னையின் காவல்துறை குற்றங்களை தடுக்க புதிதாக கண்டுபிடித்திருக்கிற உத்திதான் கழிவறை கையுடைப்பு. சென்னை காவல்நிலையங்களில் எல்லா பாத்ரூம்களிலும் சமீபகாலமாக குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் பலரும் வழுக்கி விழுவதும், அதில் அவர்களுடைய வலது கை மட்டும் உடைந்து போவதும் வாடிக்கையாகிவிட்டது. பாத்ரூமில் வழுக்கி விழச்செய்யும் இந்த புதிய தண்டனை முறைக்கு மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதாக காவலர் ஒருவர் பெருமையாகச் சொன்னார்.

நல்ல விஷயம்… ஆனால் குற்றஞ்சாட்டப்பட்டு கைதாகிற எல்லோருடைய கைகளும் காவல் நிலைய பாத்ரூம்களில் வழுக்கி விழுந்து உடைவதில்லை. யாருடைய கைகள் உடையவேண்டும், யாருடைய கைகள் பத்திரமாக இருக்கவேண்டும் என்பதை காவல்துறை கழிப்பறைகள் தெரிந்தே வைத்திருக்கின்றன. என்ன இருந்தாலும் தமிழ்நாடு காவல்துறை கழிவறை இல்லையா…

கடந்த மூன்று மாதங்களில் சென்னையில் மட்டுமே இப்படி குற்றஞ்சாட்டப்பட்ட எண்ணற்றோரின் கைகள் உடைபட்டிருக்கின்றன. உடைக்கப்படுகிற கை குணமாக குறைந்தது ஆறு வாரங்களுக்கு மேல் ஆகும். சிலருக்கு நிரந்தரமாகவே கைகளில் பாதிப்புகள் உண்டாகவும் வாய்ப்பிருக்கிறது. பயன்ப்படுத்தவே முடியாமலும் போகக்கூடும் என்று அச்சமூட்டுகிறார்கள் மருத்துவர்கள். ஒரு வேளை ஒரு நிரபராதியின் கை இப்படி உடைக்கப்பட்ட அவரால் வாழ்நாள் முழுக்க தன் வலது கையை உபயோகிக்கவே முடியாமல் போனால் என்னாகும்?

காவல்நிலைய பாத்ரூம்களில் நடக்கிற இந்த கையுடைப்பை monteggia fracture என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். கூகிளிட்டு பார்த்தால் எவ்வகையில் இக்கைகள் உடைக்கப்பட்டுள்ளன என்பதிலிருந்து இதன் பாதிப்பும் வலியும் எத்தகையது என்பதை புரிந்துகொள்ள முடியும்.

அச்சம் தரும் வகையில் இப்படி கைகளை உடைப்பதை மக்கள் பலரும் வரவேற்கவும் கொண்டாட வும் தொடங்கியிருக்கிறார்கள். சினிமாவின் தாக்கமோ அல்லது இவர்களுக்கெல்லாம் எக் காலத்திலும் நீதியே கிடைக்காது என்கிற மனவிரக்தியோ இதற்கான காரணமாக இருக்கலாம். ஆனால் கவலைவேண்டாம் கையுடை பட்டவர்கள் யாரும் விஜய் மல்லையாவோ காஞ்சிமட உச்சத்தலைவர்களோ அல்லர். எல்லோருமே மிக சாதாரண குற்றவாளிகள்… இல்லை இல்லை குற்றஞ்சாட்டப்பட்டவர்கள். அவர்களுக்கு நிச்சயம் தண்டனை கிடைத்துவிடும். இங்கே இதுவரை அப்படித்தான். சிறிய குற்றவாளிகள் யாருமே அவ்வளவு எளிதில் தப்பிவிடுவதில்லை.

இந்த விஷயத்தில் குற்றவாளிகள் என்பதை விட குற்றஞ்சாட்டப்பட்டவர் என்கிற சொல்லைதான் நாம் எப்போதும் பயன்படுத்த வேண்டும். ஏன்? அவருடைய குற்றம் நீதிமன்றத்தில் நிரூபிக்கப் படும்வரை அவர் குற்றஞ்சாட்டப்பட்டவர்தான். இங்கே அப்படியொன்றும் 100 சதவிகித நேர்மையான அறம்போற்றும் காவல்துறையை நாம் கொண்டிருக்கவில்லை எனும்போது… நமக்கிருக்கிற நம்பிக்கை என்பது நீதிமன்ற விசாரணை மட்டும்தான். தான் குற்றவாளி இல்லை என்பதை நிரூபிக்கிற உரிமை இங்கே எல்லோருக்குமே சமமான அளவில் வழங்கப்படவேண்டும்.

இன்று திருட்டு, சண்டை என கைகளை உடைப்பவர்கள் நாளைக்கே நம்முடைய ஒரு வரி ட்விட்டுக்கும் ஸ்டேஸுக்கும் கூட கைகள் உடைக்கப்படலாம். மனித உரிமைகள், விசாரணை என்கிற சொற்களெல்லாம் அர்த்தமிழந்து போகும்போது அங்கே அப்பாவிகளின் பாதுகாப்பு என்பதுதான் முதலில் கேள்விக்குறியாகும் என்பதை நாம் உணர்ந்திருக்கிறோமா?

இதுவரை கையுடைக்கப்பட்டவர்களின் பட்டியலை எடுத்து வைத்து அவர்களுடைய வாழ்விடங்கள், வசதிவாய்ப்புகள், பொருளாதார பின்புலன், சமூகபின்னணிகளை ஆராய்ந்தாலே இதில் இருக்கிற ஒற்றுமை விளங்கும். யாருடைய கரங்களை உடைக்கிறார்கள் என்பது.கண்ணகி நகரிலும், செம்மஞ்சேரியிலும்தான் இப்படி கையுடைக்கப்பட்டவர்கள் ஏராளம். இங்கே சிலர் கொலையே செய்திருந்தாலும் அவர்களுடைய கரங்களை காவலர்கள் தொடக்கூட அஞ்சுகிற நிலையும் இருக்கிறது என்பதை யாராவது மறுக்கமுடியுமா.

உண்மையான நீதி என்பது என்றைக்குமே அவசரமாக கைகளை உடைப்பதாக இருக்கவே முடியாது. அது விசாரணையின் வழி அடையக்கூடியது. நாகரீகமான சமூகம் அதைநோக்கித்தான் நகருமே தவிர கைகளை உடைப்பதை ஒருநாளும் கொண்டாடாது. அப்படி கொண்டாடுகிற சமூகத்தில் காவல்துறையின் கழிவறைகளில் முதலில் விழுந்து கையுடைபடுபவன் நம்மைப்போல் ஒரு சாமானியனாகத்தான் இருப்பான்.

அதிஷா வினோத்