குரங்கு எடுத்த செல்பியால் என் வாழ்க்கையே போச்சு!- போட்டோகிராபர் அழுவாச்சு!

குரங்கு எடுத்த செல்பியால் என் வாழ்க்கையே போச்சு!-  போட்டோகிராபர் அழுவாச்சு!

நவீனமயாகி விட்ட இந்தக் காலக்கட்டத்தில் இளையதலைமுறையினர் மனதை கொள்ளை கொள்ளும் ‘செல்பி’ எனப்படும்- ‘தன்னைத்தானே கேமரா மூலம் புகைப்படம் எடுக்கும் கலை எல்லை மீறி போய் கொண்டிருக்கிறது என்பதும் இந்த செல்பி மோகத்தால் நம் இந்தியாவில்தான் அதிக உயிரிழப்பு ஏற்படுகிறது என்பது தெரிந்த விஷயம்தான். இதனிடையே உலகின் முதல் செல்பி எடுத்தவர் எனும் பெருமை இப்போதைக்கு ராபர்ட் கர்னேலியஸிடம் தான் இருக்கிறது என்பது எத்தனை பேருக்கு தெரியும்!

1839-ம் ஆண்டு அவர் உலகின் அந்த முதல் செல்பியை எடுத்தார்.அதுவும் எப்படி தெரியுமா? கேமராவை ஸ்டாண்டில் நிற்க வைத்துவிட்டு அதன் முன்பக்க லென்ஸ் மூடியைத் திறந்தார். பிறகு ஓடிப் போய் கேமராவின் முன்னால் அசையாமல் ஒரு நிமிடம் நின்றார். பிறகு மீண்டும் போய் கேமராவின் கதவை மூடினார். பின்னர் அந்த பிலிமை டெவலப் செய்து பார்த்தபோது கிடைத்தது தான் உலகின் முதல் செல்பி!

ஆனால் அந்தப் படத்துக்கு ‘செல்பி’ எனும் பெயர் வைக்க அவருக்குத் தோன்றவில்லை. முதன் முதலில் ‘செல்பி’ எனும் வார்த்தையைப் பயன்படுத்தியவர் எனும் பெருமை நாதன் ஹோப் என்பவருக்குக் கிடைத்தது. அதுவும் நூற்றாண்டுகள் கடந்த பின்பு. 2002-ம் ஆண்டு அவருக்கு ஒரு சின்ன விபத்து. விபத்தில் அடிபட்ட உதடுகளோடு கட்டிலில் படுத்திருந்த அவர் தனது அடிபட்ட உதடைப் படம்பிடித்தார். அதை இணையத்தில் போட்டார். ‘போகஸ் சரியா இல்லாததுக்கு மன்னிச்சுக்கோங்க, இது ஒரு செல்பி, அதான் காரணம்’ என்று ஒரு வாசகமும் எழுதினார். ஆனால் சத்தியமாக அந்த வார்த்தை இந்த அளவுக்குப் பிரபலமாகும் என அவரே நினைத்திருக்க வாய்ப்பில்லை.

சில ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த வார்த்தை பரபரவென பிரபலமாக ஆரம்பித்ததும் அதை ஆங்கில அகராதியிலும் சேர்த்தார்கள். ‘ஒருவர் டிஜிடல் கேமரா மூலமாகவோ, வெப்கேம், டேப்லெட், ஸ்மார்ட் போனின் முன்பக்க கேமரா போன்ற எதன் மூலமாகவோ, தன்னைத் தானே எடுத்துக் கொள்ளும் புகைப்படம்’ என இதற்கு ஒரு விளக்கத்தையும் அகராதியில் எழுதி வைத்தார்கள்.உலகப் புகழ்பெற்ற டைம் பத்திரிகை, ‘2012-ம் ஆண்டில் உலக அளவில் பிரபலமாய் இருந்த பத்து வார்த்தைகளில் ஒன்று ‘செல்பி’ என்றது’.

இந்நிலையில் கடந்த 2011ம் ஆம் ஆண்டு இந்தோனேசிய ஜாவா காடுகளில் டேவிட் ஸ்லேட்டரின் கேமராவால் எடுக்கப்பட்ட கருங்குரங்கு ஒன்றின் செல்பி புகைப்படம் உலக அளவில் மிகப் பிரபலமானதும் டேவிட் ஸ்லேட்டர் எடுத்த அந்த குரங்கின் செல்ஃபி புகைப்படம் சுமார் 5 கோடிக்கு அதிகமானோரால் பகிரப்பட்டதும் அதை அடுத்து அவர் காப்புரிமை கோரி வழக்கு மேல் வழக்கு போட்டு நொந்து போய் விட்டார் என்ற சோக தகவ்ல் கிடைத்துள்ளது..ஆம்.. குரங்கின் இந்த செல்ஃபி புகைப்படம் டேவிட்டுக்கு எந்த அளவு புகழை தேடித் தந்ததோ அந்த அளவுக்கு அவரின் வாழ்க்கையை தலைகீழாக புரட்டி போட்டு விட்டதாம்..

அதாவது டேவிட்டின் அந்த குரங்கின் செல்பி புகைப்படங்களை விக்கிமீடியா தனது பொதுத் தளத்தில் வெளியிட்டது. தன்னுடைய அனுமதி இல்லாமல் தனக்குச் சொந்தமான புகைப்படத்தை பொதுவெளியில் விக்கிமீடியா வெளியிட்டது தவறு என்றும், அதனால் அப்படத்தை நீக்க வேண்டும் என்றும் டேவிட் வலியுறுத்தினார்.ஆனால் விக்கிபீடியாவோ இந்தப் புகைப்படம் குரங்கு எடுத்தது. அதனால் டேவிட்டுக்கு அதன் காப்புரிமை சாராது. எங்கள் தளத்தில் அந்தப் புகைப்படத்தை வெளியிட்டதில் எந்தத் தவறும் இல்லை என்றது.

மேலும் இந்தப் பிரச்னைக்கு காப்புரிமை பொருந்தாது. காரணம், ஒரு புகைப்படம் எடுப்பவர் அதற்கான ஒளி, தேவைப்படும் கோணம் போன்றவற்றை எல்லாம் யோசிப்பார். இதெல்லாம் சேர்ந்துதான் ஒரு புகைப்படத்துக்கு ஒருவர் காப்புரிமை கோர முடியும். வெறுமனே குரங்கிடம் கேமராவைத் தந்து விட்டு அது எடுத்துக்கொண்ட படங்களுக்கு ஒருவர் காப்புரிமை கோர முடியாது. காப்புரிமை என்பது ஒருவரின் உழைப்புக்குத் தரப்படும் வெகுமதி அல்ல. அவரை மேலும் ஊக்கப்படுத்தும் ஒரு தூண்டுதல்தான். இதை டேவிட் புரிந்துகொள்ள வேண்டும் என்று காப்புரிமை வல்லுநர்கள் தரப்பில் அறிவுறுத்தப்பட்டது.

ஆனாலும் இந்தப்புகைப்படத்துக்கான காப்புரிமை பிரச்சனை நீதிமன்றம் வரை சென்றது. இதன் காரணமாக டேவிட் பெருட் இழப்புகளை சந்தித்திருக்கிறார். காப்புரிமை தொடர்பான இந்த வழக்கு கடந்த சில வருடங்களாக அமெரிக்காவில் நடந்து வருவதால் இங்கிலாந்தில் வசிக்கும் டேவிட் விமான போக்குவரத்து செலவுக்கு பணம் இல்லாததால் புதன்கிழமை நடந்த இந்த வழக்கில் அவர் கலந்து கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டது. அதுமட்டுமல்லாது இந்த வழக்கு காரணமாக பொருளாதாரத்தில் மிகவும் நலிவடைந்த நிலைக்கு டேவிட் தள்ளப்பட்டுள்ளார். இதன் காரணமாக தனது உடைந்த கேமிராவை சரி பார்ப்பதற்கு, தனது வழக்கறிஞருக்கு பணம் அளிக்க முடியாத நிலையில்தான் டேவிட் உள்ளார்.

இதுகுறித்து ஊடகம் ஒன்றிடம் டேவிட் கூறியதாவது, ஒரு புகைப்பட கலைஞனுக்கு இதுபோன்ற புகைப்படங்கள் கனவு போன்றது. இந்த குரங்கின் செல்ஃபி புகைப்படத்தால் நான் உடைந்துவிட்டேன். வெறும் குரங்கால் மட்டுமே அந்த செல்ஃபி புகைப்படத்தை எடுத்துவிட முடியாது. இதில் என் உழைப்பும், வியர்வை, விடா முயற்சி உள்ளது. இப்புகைப்படத்தை எடுக்க நிறைய பொறுமையும் அறிவும் வேண்டும். நான் இந்த குரங்கின் செல்ஃபி புகைப்படத்தால் பெரும் மன அழுத்தத்துக்கு உள்ளாகியுள்ளேன். இதனால் என் குடும்பத்துக்கு உதவ முடியாத சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.

error: Content is protected !!