பிரதமர் மோடியின் தொகுதி அலுவலகம் விற்பனை? ஓ.எல்.எக்ஸ் இணையத்தில் விளம்பரம்!

பிரதமர் மோடியின் தொகுதி அலுவலகம் விற்பனை? ஓ.எல்.எக்ஸ் இணையத்தில் விளம்பரம்!

பிரபல ஆன்லைன் பொருட்கள் விற்பனை தளமான OLX-ல் 4 அறைகள், 4 பாத்ரூம்கள் கொண்ட வில்லா ஒன்று விற்பனைக்கு உள்ளதாக விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. இதன்விலை ரூ.7.5 கோடி என்றும், தொடர்பு கொள்ளும் தகவல்களும் இடம் பெற்றிருந்தது. முதலில் அந்த விளம்பரத்தை சாதாரணமாக கடந்து போன மக்கள் மீண்டும் மீண்டும் பார்த்த போது அதிர்ச்சி யடைந்தனர். காரணம் அது வாரணாசியில் உள்ள பிரதமர் மோடியின் அலுவலகமாகும்.

ஆம்.. வாரணாசியில் உள்ள பிரதமர் மோடியின் அலுவலகத்தை விற்பனை செய்வது தொடர்பான ஓ.எல்.எக்ஸ் இணையத்தில் விளம்பரம் குறித்து புகார் வந்தபோது வாரணாசியில் உள்ள காவல்துறை அதிர்ச்சியடைந்துள்ளது. சில குற்றவாளிகள் ஆன்லைன் சந்தையான OLX-இல் ரூ.7.5 கோடிக்கு அலுவலகத்தை விற்பனைக்கு வைத்துள்ளனர் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. பி.எம்.ஓ அலுவலகம் குருதம் காலனியில் அமைந்துள்ளது.

இதையடுத்து, லக்ஷ்மிகாந்த் ஓஜா என்று அடையாளம் காட்டிய நபரின் ஐடியிலிருந்து விளம்பரம் பகிரப்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது. பின்னர் இந்த விளம்பரம் உடனடியாக அகற்றப்பட்டதாகவும், தற்போது இது குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாகவும் வாரணாசி எஸ்எஸ்பி அமித் குமார் பதக் தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் இதுவரை விளம்பரத்திற்காக புகைப்படத்தை கிளிக் செய்த நபர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கூறியுள்ளார்.

மேலும், ஹவுஸ் & வில்லா என்ற பிரிவின் கீழ் விளம்பர எண் ஐடி 1612346492 ஓஎல்எக்ஸில் வெளியிடப்பட்டதாகவும், குளியலறையுடன் நான்கு படுக்கையறைகள் தயாராக உள்ளது என்று பட்டியலிடப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. இது 6500 சதுர அடி பரப்பளவு, 2 மாடி கட்டடம் மற்றும் கார் நிறுத்துமிடம் போன்ற விவரங்களைக் கொண்டிருந்தது. இதன் ‘பி.எம்.ஓ அலுவலகம் வாரணாசி’ என கொடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!