October 18, 2021

விநாயகர் சதுர்த்தி பண்டிகை!- பரிசுகள் உண்டு! – பிரதமர் மோடி தகவல்!

பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக்கிழமை வானொலியில் மனதின் குரல் (மன் கி பாத்) நிகழ்ச்சியில் உரையாற்றுகிறார். இந்த ஆண்டின் மூன்றாவது உரையை இன்று நிகழ்த்தினார். பிரதமர் மோடி பேசிய போது, “ ஜூலை மற்றும் ஆகஸ்டு ஆகிய மாதங்கள் விவசாயிகள் மற்றும் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது.இந்த தருணத்தில் பள்ளி படிப்பினை முடித்த இளம் மாணவ மாணவியர்கள், கல்லூரிகளில் சேருகின்றனர். அவர்கள் தங்களுக்கான சாரதிகள் (தன் முனைப்பு மற்றும் சுயவழிகாட்டியாக செயல்படுதல்) ஆகின்றனர் என கூறியுள்ளார்.

அதன்பின் தொடர்ந்து அவர் பேசும்பொழுது, புதிய மாணவர்கள் அனைவரும் அமைதியாக இருங்கள். மன அமைதியை மகிழ்ச்சியுடன் அனுபவியுங்கள். சொந்த வீட்டை விட்டு, சொந்த கிராமத்தினை விட்டு மற்றும் பாதுகாப்பு மிக்க சூழ்நிலையில் இருந்து வெளியேறுகிறீர்கள். தங்களது வாழ்வின் புதிய திசையை நோக்கி இளம் மாணவ மாணவியர் முதல் அடி எடுத்து வைக்கும் தருணமிது என கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர், “நாம் இந்த நேரத்தில் சுதந்திரப் போராட்ட தியாகி பால கங்காதர திலக்கை நினைத்துப் பார்க்க வேண்டும். கடந்த 1856-ம் ஆண்டு, ஜூலை23-ம் தேதி பிறந்த திலக், கடந்த 1920, ஆகஸ்ட் 1-ம் தேதி மறைந்தார். லோக மான்ய திலக்கின்வாயிலாகவே நம்முடைய தேசத்தில் உள்ள மக்களுக்கு சுயநம்பிக்கை அதிகரித்தது. சுயராஜ்ஜியம் எனது பிறப்புரிமை என்பதை லோகமான்ய திலக் வலியுறுத்தினார். இன்றைய சூழலில் சிறந்த நிர்வாகமே நமது பிறப்புரிமை. அது நம்மிடம் இருக்கவேண்டும்.

ஒவ்வொரு இந்தியரும் நல்ல நிர்வாகத்தையும், வளர்ச்சியில் நேர்மறையான முடிவுகளைப் பெற வேண்டும். இது புதிய இந்தியாவை உருவாக்கும். மேலும், சுதந்திரப் போராட்ட வீரர்கள் சந்திரசேகர் ஆசாத், அசபுல்லா கான், பகத் சிங், சந்திரசேகர் ஆசாத் ஆகியோரையும் இந்த நேரத்தில் நினைவு கூற வேண்டும். திலகர் பிறந்து 50 ஆண்டுகளுக்குப் பின் ஜூலை 23-ம் தேதி, பாரதத் தாயின் மற்றொரு மகன் தனது உயிரை நாட்டுக்காக தியாகம் செய்தார். சுதந்திரக் காற்றை அனைவரும் நிம்மதியாக சுவாசிக்கக் காரணமாக இருந்தவர்களில் ஒருவரான சந்திர சேகர் ஆசாத்தை நினைவு கூறுகிறேன்” என்று மோடி தெரிவித்தார்.

அத்துடன் “பின்லாந்தில் சமீபத்தில் நடந்த 20வயதுக்குட்பட்டோருக்கான உலக தடகளப் போட்டியில் இந்தியாவின் மகள், ஏழை விவசாயின் மகள் ஹிமா தாஸ், 400 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்று பெருமை சேர்த்துள்ளார். அவருக்குப் பாராட்டுக்கள்.

தேசத்தின் மற்றொரு மகளான பயான், ஏக்தா ஆகியோர் துனிசியாவில் நடந்த பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கம், வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது தேசத்துக்கு பெருமைக்குரியதாகும். இவர்கள் இருவரும் வாழ்க்கையில் பல்வேறு சவால்களைச் சந்தித்து வரும் நிலையில், இந்தப் போட்டியில் வென்று சாதித்துள்ளனர்.

விநாயகர் சதுர்த்தி பண்டிகை வருகிறது. மிகச்சிறப்பாக, உற்சாகமாக அனைவரும் கொண்டாடுவோம். விநாயகரின் சிலைகளை மிக அழகாக, பிரமாண்டமுறையில் வடிவமைப்போம். இதற்காகப் போட்டிகளும், பரிசுகள் கூடத் தரப்படும். இந்த விநாயகர் சதுர்த்திக்கு தயாராகும் சிலைகளை சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையில் தயாரிக்க வேண்டும். சூழலுக்கு கேடு விளைவிக்கும் வேதிப்பொருட்கள், ரசாயனங்களைப் பயன்படுத்தி தயாரிப்பதை தவிர்க்க வேண்டும்.

பருவமழை நன்றாகப் பெய்துவருகிறது. தேசத்தில் ஒரு சில பகுதிகளில் பருவமழை தேவைக்கு அதிகமாகவும், இன்னும் சிலபகுதிகளில் குறைவாகவும் பெய்துள்ளது. சில இடங்களில் தொடர் மழை காரணமாக, வெள்ளம் ஏற்பட்டு சேதம் ஏற்பட்டுள்ளது. மழை பொய்த்துப்போனதற்கு கடவுள் காரணமல்ல. நாம்தான் , சூழலை நாம் பாதுகாப்பாக, இயற்கைக்குப் பாதிப்பு ஏற்படுத்தாமல் பாதுகாக்க வேண்டும். நாம் இயற்கைக்குக் குந்தகம் விளைவிக்கும் போது இது சில நேரங்களில் கோபப்படுகிறது.”இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.