August 11, 2022

மோடிக்கு ஆன் லைன் அலப்பறைகள் கொடுத்த புதுப் பட்ட பெயர் = ‘மேக விஞ்ஞானி’!

எதிரி நாடான பாகிஸ்தான்`ரேடாரில் இருந்து நமது போர் விமானங்கள் தப்பிக்க மேகங்கள் உதவும் என்பதால் தாக்குதலுக்கு ஒப்புதல் அளித்தேன்” என பாலகோட் தாக்குததல் தொடர்பாக பிரதமர் மோடி ஒரு டி.வி.க்கு அளித்த பேட்டி காரணமாக அவரை சமூக வலைத் தளங்களில் `மேக விஞ்ஞானி’ என கிண்டல் செய்து வருகின்றனர்.

நேற்று சனிக்கிழமையன்று ‘நியூஸ் நேஷன்’ என்னும் ஆங்கில செய்தித் தொலைக்காட்சிக்கு பிரதமர் மோடி அளித்த பேட்டியின் போது, “பாலகோட் தாக்குதல் நாளன்று பருவநிலை திடீரென மோசமாக மாறியது. மேகங்கள் கறுத்து மழை பெய்ய ஆரம்பித்தது. அந்தச் சூழலில், மழை பெய்யும்போது மேகங்களுக்கு இடையே விமானங்களை அனுப்பி தாக்குதல் நடத்த முடியுமா என்று சந்தேகம் எழுந்தது. எல்லோரும் குழப்பத்தில் இருந்தனர். அது பற்றிய ஆலோசனையின்போது, தாக்குதலை வேறு ஒரு நாளுக்கு தள்ளி வைக்கலாம் என்று அங்கிருந்த வல்லுநர்கள் தெரிவித்தனர். அப்போது என் மனதில் இரண்டு எண்ணங்கள் எழுந்தன.

ஒன்று தாக்குதல் குறித்த ரகசியம் காக்கப்பட வேண்டும் என்பது. இரண்டாவது, நான் விஞ்ஞானம் தெரியாதவன். எனினும் என்னுடைய அரைகுறை அறிவுக்கு, மேகங்கள் சூழ்ந்திருப்பதால், ரேடார் கண்காணிப்பில் இருந்து நமது விமானங்கள் தப்பிக்கலாம் என்றும், மேகங்களும் மழையும் இருப்பது நமக்கு சாதகமாக இருக்கும் என்றும் பட்டது. மேகங்கள் பாதுகாப்பாக இருக்கும் என்பதால் தாக்குதல் தொடுக்கலாம் என்று நான் ஒப்புதல் தெரிவித்தேன்”என்று மோடி பேட்டியில் கூறியிருந்தார்.

மோடியின் இந்த கருத்தை கண்டித்தும் கலாய்த்தும் அரசியல் தலைவர்கள், முன்னாள் படை அதிகாரிகள், பாதுகாப்பு நிபுணர்கள், சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் நெட்டிசன்கள் என பலர் தங்கள் கருத்துகளை ஷேர் செய்து வருகிறார்கள். சர்ச்சை கிளப்பிய மோடி பேட்டியின் எழுத்து வடிவமானது பாஜகவின் அதிகாரபூர்வ ட்வி்ட்டர் பக்கத்தில் முதலில் வெளியிடப்பட்டு இருந்தது. எதிர்ப்பும், விமர்சனமும் எழந்ததை அடுத்து அந்தப் பதிவு நீக்கப்பட்டுவிட்டது.

பொதுவாக மோசமான பருவநிலையிலும், மேகங்களையும், பனிமூட்டத்தையும் ஊடுருவி பறக்கும் பொருட்களைத் துல்லியமாக கண்டுபிடிக்கும் ஆற்றல் ரேடார் கருவிகளுக்கு உண்டு என்பது பொதுவாக ஒப்புக் கொள்ளப்பட்ட அறிவியல் உண்மை. இந்த விஷயம் நமது விமானப் படை நிபுணர்களுக்கு எதுவும் தெரியாது என்று நமது விமானப் படையை இழிவுபடுத்துவதாகும். இது உண்மையிலேயே வெட்கக் கேடானது. இப்படிப்பட்ட ஒருவர் இந்தியாவின் பிரதமராக நீடிக்கக் கூடாது என மார்க்சிஸ்ட் கட்சி பொதுச்செயலளர் சீதாராம் யெச்சூரி கூறியிருக்கிறார்.

ரேடார் எப்படி வேலை செய்கிறது என ஒருவர் கூடவா பிரதமருக்கு தெரிவிக்கவில்லை. அப்படியென்றால் இது தேசப் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட மிகவும் ஆபத்தான விஷயம் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சல்மான் சோஸ் குறிப்பிட்டார்.

பிரதமர் மோடியின் கருத்துக்கு எந்த அறிவியல் அடிப்படையும் இல்லை என்று சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். மேக விஞ்ஞானி என்று அவரை கிண்டல் செய்துள்ளனர். `இன்று தொழில்நுட்ப தினம் – நமக்கு ஒரு புதிய தொழில்நுட்பம் கிடைத்திருக்கிறது’ என்று கலாய்த்திருக்கிறது ஒரு ட்விட்டர் பதிவு.

`ரேடாரை அவர் கேமரா என்று நினைத்துவிட்டார் போலும். எனவே மேகம் மூடியிருக்கும்போது தெளிவான படம் கிடைக்காது என்று புகைப்படக்காரர்கள் அவருக்கு சொல்லியிருப்பார்கள்’ என்கிறது இன்னொரு பதிவு.

முக்கியமாக புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக தாக்குதல் நடத்துவதற்கான இடம் மற்றும் நேரம் ஆகியவற்றைத் தேர்வு செய்வதில், ராணுவத்திற்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டதாக முன்பு அரசுத் தரப்பில் அடிக்கடி கூறப்பட்டத்தையும் சுட்டிக்காட்டி விமர்சித்து உள்ளனர்..